வெள்ளியங்காட்டான் கவிதைகள் இயற்கை
வெள்ளியங்காட்டான்
Narrator Ramani
Publisher: Ramani Audio Books
Summary
வெள்ளியங்காட்டான் (1904 - 1991) என்னும் தமிழ்க் கவிஞரின் இயற்பெயர் என். கே. இராமசாமி. தன்னுடைய வாழ்க்கைப்பாட்டிற்காக விவசாயியாக, தையல்காரராக, ஆசிரியராக, இதழொன்றில் மெய்ப்புப் பார்ப்பவராக (Proof Reader) பணியாற்றியவர். பகுத்தறிவாளராக, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராளியாக, கவிஞராக இனங்காணப்படுபவர். தன்னுடைய ஊரை அடியாகக்கொண்டு வெள்ளியங்காட்டான் என்னும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார். "ஒரு எழுச்சி, ஒரு நுழைவு, ஒரு நெகிழ்வு, ஒரு பொறி, ஒரு ஏக்கம், ஒரு வியப்பு, ஒரு தோற்றம், ஒரு மின்னல், இவற்றுக்கு வண்ணம் கொடுத்து வெளிப்படுத்தும் கவிதைக்கு "லிரிக்' என ஆங்கில இலக்கியத்தில் அடையாளம் கூறப்படுகிறது. வெள்ளியங்காட்டான் கவிதைகளைப் படித்தபோது "லிரிக்' கவிதைகளுக்கு வேண்டிய கனல் மூண்டிருப்பதைக் கண்டேன்” என்கிறார் கவிஞர் திரிலோக சீதாராம். "வயல் வெளிகளிலே அன்பு / வடிவ நெல்லெல்லாம் / சுயநல எருமை அந்தோ / சூறையாடுதே' என்ற வெள்ளியங்காட்டான் பாடலையும் இதர பாடல்களையும் குறிப்பிட்டு எளிமையும், உண்மையான உணர்ச்சியும் உள்ள பாடல்கள் வெள்ளியங்காட்டான் பாடல்கள் என பேராசிரியர் அ. சீனிவாசராகவன் குறிப்பிடுகிறார். “வெள்ளியங்காட்டானை யார் என்று எனக்குத் தெரியாது. அவர் பாடல்களோ எனக்கு பழக்கமிருக்கிறது. அவர் பாடல்களில் நாட்டின் பண்பு நன்றாக இருக்கிறது. உண்மைகளையே சொல்லியிருப்பதனால் பாட்டுகள் பொருளுடையனவாக இருக்கின்றன” என்கிறார் கொத்தமங்கலம் சுப்பு. உணர்ச்சி வசப்படுபவன் கவிஞன். சத்தியத்திலும் சமத்துவத்திலும் பற்றுடையவன். சராசரி மனிதன் விலகிப் போக ஒதுக்க, கவிஞன் ஒதுங்கிப் போகிறான். உண்மையை உயிராகக் கொண்டவன் கவிஞன். அறமறிந்து ஒழுகுபவன். பிறாரால் ஆளமுடியாதவன். தன்னைத் தான் ஆள்கிறவன். தலைவனை அறிந்து அடைந்தவன். மக்கள் மொழியில் விபத்தானதை சம்பத்து எனக் கொள்பவன். கவிஞனை இப்படி இனம் காண்கிறார் வெள்ளியங்காட்டான். அவருடைய கவிதைகளை ஐந்து ஒலி நூல்களாக பேராசிரியர் ரமணி அளிக்கிறார். இந்த முதல் ஒலிநூலில் சமுதாயம் என்ற துணைத் தலைப்பில் அவருடைய 35 கவிதைகள்.
Duration: 30 minutes (00:30:03) Publishing date: 2024-03-15; Unabridged; Copyright Year: — Copyright Statment: —