உன்னோடு ஒரு நாள்!
தேவிபாலா
Editora: Pocket Books
Sinopse
இவனைப் போல பாதிக்கப்பட்ட தொழிலாளிகள் நாலு பேர் அந்த டீக்கடையில் கூடியிருந்தார்கள்.சம்பத்தும் அவர்களுடன் இருந்தான்.“உள்ளூர்ல ஏதாவது வாய்ப்பு இருக்காப்பா?”“நிச்சயமா இல்லை. மற்ற தொழிற்சாலைகள்ல கணிப்பொறிகள் நிறைய வந்துட்ட காரணமா ஆட்குறைப்பு நடந்துகிட்டே இருக்கு. எப்படி புதுசா சேர்ப்பாங்க? மேலும், இளைஞர்கள் படிச்சிட்டு வரத்தொடங்கிட்டாங்க. நமக்கெல்லாம் எப்படி வாய்ப்பு வரும்?”சம்பத் கலக்கத்துடன் பார்த்தான்.“தொழிற்சங்கம், போராட்டம் இதையெல்லாம் பார்த்து கோவப்படுறாங்க. நம்மளமாதிரி ஆட்களை வேலைக்கு சேர்க்கவே யோசிப்பாங்க”“என்ன செய்யறது? குடும்பம் நடக்கணுமே.”“என் பொண்டாட்டி, புள்ளைங்களைக் கூட்டிட்டு பொறந்த வீட்டுக்கு போயிட்டா. நம்ம பொழைப்பு அனாதைப் பொழைப்பு.தேநீர் குடித்தபடி ஆளாளுக்கு கதை பேசினார்கள்.“வாப்பா ஒரு க்குவாட்டர் அடிச்சிட்டு, போய் கவுந்து படுக்கலாம்.”‘தண்ணிக் கூட்டம்’ ஒன்று திசைமாறியது. ஆளாளுக்கு கலைந்து போக சம்பத் மட்டும் தனியானான்.‘சுசிலா நம்பிக்கை வைத்திருக்கிறாள்.’‘நாட்கள் சரசரவென ஓடிவிடும். கையிருப்பு கரைந்து விட்டால், குடும்பம் பட்டினி கிடக்குமே.‘பாவம் குழந்தை!?’‘அதன் நிலைமை என்ன?’மற்றவர்களைவிட குடும்ப பாசமும், கவலையும், பதட்டமும் சம்பத்துக்கு எப்போதுமே அதிகம்.நினைத்தபடி நடக்காவிட்டால் சுருக்கென கோபமும், படபடப்பும் வந்துவிடும். ஆதங்கம் தெறிக்கும். எளிதில் உணர்ச்சி வசப்படும் மனிதன். அதனால் ஒரு ஆண் பிள்ளை என்ற திடம் கரைந்து அழுகை பீறிடும். விளைவு? ரத்த அழுத்தம் ஏறும்.இரண்டு முறை ரத்த அழுத்தம் எகிறி, தொழிற்சாலையில் மயக்கம் போட்டு விழுந்து, கம்பெனி டாக்டர் பரிசோதித்து, பத்து நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருந்துகள் எழுதித் தந்து, சம்பத் வீட்டில் படுத்த கதை உண்டு.குடும்பமே பதற, சுசிலாதான் படிப்படியாக அவனை இயல்பான நிலைக்கு கொண்டு வந்தாள்.சம்பத் மெதுவாக நடக்க, ஏகாம்பரம் வந்து சேர்ந்து கொண்டார்.ஓய்வுபெற ஒரு வருடமே உள்ள நிலையில், மகளின் கல்யாணத்தை முடிவு செய்திருக்கிறார்.“சம்பத்! நிறையை பேர்கிட்ட கடன் கேட்டு வச்சிருந்தேன். அதுல தான் கல்யாணத்தை நடத்தணும்.”சம்பத் அவரையே பார்த்தான்.“தொழிற்சாலையை மூடின நிலையில பணம் எதுவும் வராது. நான் எப்படி கல்யாணத்தை நடத்துவேன்? இது நின்னுபோனா, என் மகளோட கதி என்ன?”அழுதுவிட்டார்.“கொஞ்சம் தள்ளிப் போடுங்கண்ணே. மாப்பிளை வீட்ல நிலைமையை விளக்கி, அனுமதி கேளுங்க.”“அவங்க புரிஞ்சுக்கணுமே?”“வேற வழியில்லையே?“சம்பத்! நடுத்தர வர்க்கத்துல பிறக்கவே கூடாது. அப்படி பிறந்தாலும், பெண் குழந்தையைப் பெத்துக்கக் கூடாது. நம்ம கண்ணுக்கு முன்னால அதுங்க வாழ்க்கை கேள்விக்குறி ஆகும் போது, நம்மால தாங்கிக்க முடியாது தம்பி.”அவர் விலகிப் போனார்.சம்பத்துக்கு தன் ஆறு வயது மகள் - சுஜியின் முகம் கண்ணுக்குள் வந்தது.‘என் குழந்தைக்கும் நாளைக்கு இந்த நிலைதானா?’கேள்வி பூதாகரமாக எழுந்து நிற்க, சம்பத்துக்கு பதட்டம் அதிகமானது. ரத்த அழுத்தம் ஏறத் தொடங்கியது. நடக்க நடக்க தலை சுற்றத் தொடங்கியது.அப்படியே துவண்டு பாதையோரம் விழ, கூட்டம் சேர்ந்து விட்டது.“சம்பத்துப்பா, ஒரு ஆட்டோல ஏத்தி வீட்ல கொண்டு போய் விடுங்க.”தெரிந்த ஆட்கள் உதவிக்கு வர, பத்தாவது நிமிஷம் சம்பத் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டான்.அம்மா அலற, குழந்தை அழ, சுசிலா அவனை படுக்க வைத்தாள்.சம்பத் கண் விழித்து விட்டான்.“அவனை முதல்ல டாக்டர்கிட்ட கூட்டிட்டுப்போ. வேலை தேடுனு என் பிள்ளையை உசுப்பி விட்டுட்டே. அவனால முடியல. சுத்திக்களைச்சு மயக்கம் போட்டதுதான் மிச்சம். பொண்டாட்டி பணத்தைப் பார்ப்பா. தாய்தான் மனசைப் பார்ப்பா.”தம்பி சசிக்கு கடுப்பாகி விட்டது
