கடைசிவரை யாரோ
தேவிபாலா
Publisher: Pocket Books
Summary
காலை ஐந்து மணிக்கு அம்மா உறக்கத்தில் இருக்க, பத்மினி வாய் கொப்பளித்து முகம் கழுவிக் கொண்டு வந்தாள்!அங்குள்ள டெலிபோனை நெருங்கி, அக்கா விஜயா வீட்டுக்கு டயல் செய்தாள்.அத்தான் எடுத்தார்.“அத்தான்! பத்மினி பேசறேன்!”“சொல்லு பப்பி! என்ன காலங்காத்தால?”“அம்மா அட்மிட் ஆயிருக்காங்க”, எனத் தொடங்கி விவரம் சொல்ல, அக்கா கைக்கு ரிசீவர் போக, அக்கா விஜயா பதறி விட்டாள்.“ஒரு மணி நேரத்துல நாங்க ரெண்டு பேரும் வர்றோம் பப்பி!”பத்மினி வைத்து விட்டு இந்தப் பக்கம் வந்தாள்.நர்ஸ் வந்தாள்.“முன்பணம் மூவாயிரத்தைக் கட்டச் சொல்லிடுங்க!”“சரிங்க சிஸ்டர். பேங்க் திறந்ததும், அண்ணன் பணம் எடுத்துட்டு வந்துடுவார்!”பத்மினி உள்ளே வர, அம்மா கண் விழித்தாள்.ஏதோ பேச நினைத்தாள்.“நீ பேசாம இரு! ஸ்ட்ரெயின் பண்ணிக்காம இருந்தா, எல்லாருக்கும் நல்லது!”சொன்னபடி ஒரு மணி நேரத்தில் அக்கா விஜயா, அத்தான் முரளி வந்து விட்டார்கள்.அம்மாவைப் பார்த்தார்கள். அம்மா அழுதாள்.“உனக்கு ஒண்ணுமில்லை! அழுது அதிகப்படுத்திக்காதே! தியாகு பணத்தோட வர்றானா?”அக்காவை பத்மினி தனியாக அழைத்து வந்தாள்.“அண்ணி குடுக்க விடுவாளா? பெரிய ரகளையாகும். பணத்தைக் கட்டியும் ஆகணும். புரியலைக்கா!”“இப்ப என்ன கட்டணும் பப்பி?” - முரளி கேட்க,“மூவாயிரம் அத்தான்!”“விஜி! நான் போய் ஏடிஎம்ல எடுத்துட்டு வந்துர்றேன்! நீ காபி சாப்பிட்டியா பப்பி?”“இல்லை அத்தான்!”“என்கூட வா! ரெண்டு பேரும் காபி சாப்டுட்டு, பணத்தை எடுத்துட்டு வந்திடலாம். அக்கா, அம்மாவைப் பார்த்துப்பா!”“வேண்டாம் அத்தான்!”“அவர்தான் கூப்பிடறாரே! போயேண்டி பப்பி!”“இல்லைக்கா! காபிகூட சாப்பிடத் தோணலை!”“சரி! நீங்க போயிட்டு வாங்க!”முரளி வெளியேறினான்!விஜயா கவலையுடன் அம்மா அருகில் வந்து உட்கார்ந்து கலைந்த கேசத்தை சரி செய்தாள்.“நான் இருக்கறதே குடும்பத்துக்கு பாரம்டி விஜி!”“நீ புலம்பாதேம்மா!”“என்னால அது மட்டும் தானேடீ முடியும்?”“சரி! அதனால ஒடம்பு இன்னும் கெட்டுப் போகும். எங்களுக்கெல்லாம் கஷ்டம்!என்ன செலவாகுது இங்கே?”“தெரியலை! முன்பணம் மூவாயிரம் கட்டணுமாம். அவர் பணம் எடுக்கப் போயிருக்கார்.”“மாப்ளைக்கு சிரமம்!”“எதுக்கு உபசார வார்த்தைகள்? தியாகு வந்து பணம் கட்டுவானா? சொல்லும்மா! இவர்தானே வேண்டியிருக்கு?”அம்மா முகம் வாடியது!பத்மினி அருகில் வந்து அக்காவைத் தொட்டாள்.“பின்ன என்ன பப்பி? உண்மையைப் பேசித்தானே ஆக வேண்டியிருக்கு?”நர்ஸ் உள்ளே வந்தாள்.“எப்படி இருக்கீங்க? பல் தேய்ச்சு, வாய் கொப்பளிங்க! ஏதாவது சாப்பிடணும்! ரெண்டு பேரும் வெளியில இருங்க!”அக்கா - தங்கை வெளியே வந்தார்கள்.முரளி உள்ளே வந்து விட்டான்
