ஐஸ்கிரீம் கனவுகள்
தேவிபாலா
Publisher: Pocket Books
Summary
ஸ்கூட்டரை கல்லூரி வளாகத்தில் நிறுத்தி பூட்டி விட்டு, மரத்தடியில் வந்து நின்றான். கடந்து போன சக மாணவர்கள் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டுப் போனார்கள். விஜய் மனதில் எதுவும் ஒட்டவில்லை! வாசலையே பார்த்தபடி இருந்தான். 'ஏன் இன்னும் வரலை?' இனிமேல் வகுப்புக்குப் போகாமல் இங்கே நிற்பது சரியல்ல என்று தீர்மானித்து, நூலகத்துக்குள் நுழைந்தான். “விஜய்! க்ளாஸுக்கு வரலியா?” “கோட் நம்பர் கேட்டுட்டு, நான் வந்து அப்புறமா கம்ப்யூட்டர்ல போட்டுக்கறேன். எனக்குத் தெரியும்!” அது கணிப்பொறி வகுப்பு! விஜய் கம்ப்யூட்டரில் கில்லாடி! மாஸ்டரே அசந்து போகுமளவுக்கு இயக்குவான். சுயமாக ப்ரோக்ராம் பிரமாதமாக அமைப்பான். ஓரிருவர் கேட்டுவிட்டுப் போய் விட்டார்கள். 'இன்றைக்கு வரவில்லையா? என்ன பிரச்னை?’ புத்தகம் ஒன்றை வைத்துக் கொண்டு, நிம்மதியில்லாமல் உட்கார்ந்திருந்தான். தோளில் மெல்லிய கை! திரும்பினான். மதுமிதா நின்று கொண்டிருந்தாள். “ஏன் இவ்ளோ நேரம்?” “வெளில வா! சொல்றேன். இங்கே வேண்டாம்!” இருவரும் வெளியே வந்தார்கள். விஜய் ஸ்கூட்டரைத் தள்ளிக்கொண்டு கேட்டைக் கடந்து விட்டான். மது சற்று இடைவெளி விட்டு வந்தாள். சாலைக்கு வந்ததும் ஸ்டார்ட் செய்தான். மது அவன் தோளில் படர்ந்து சுவாதீனமாக ஒட்டிக் கொள்ள வேகம் பிடித்தான். வழக்கமான அந்த ஐஸ்க்ரீம் பார்லருக்குள் இருவரும் உள்ளே நுழைந்தார்கள். “ஒரு பட்டர்ஸ்காட்ச்... ஒரு டீ!” பேரர் போய் விட, “சொல்லு மது!” “அக்கா பொண்ணு வயசுக்கு வந்துட்டா” “அய்! ஜாலிதான்!” “உதைபடுவே விஜய் நீ!” “நீ ஏன் கோபப்படற? நாளைக்கு பரிசம் போடவா வர்றேன்னு சொன்னேன்? ஊர்ல தெரிஞ்ச பொண்ணுங்க வயசுக்கு வந்தா, நமக்கொரு சந்தோஷம்!” “கொழுப்பைப் பாரு!” பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம் வந்தது. மது ஆர்வத்துடன் சாப்பிடத் தொடங்கினாள். அவளும் அவனுடன் அதே எம்.சி.ஏ. வகுப்பில் படிப்பவள். அவனை விட மூன்று மாதங்களுக்கு இளையவள்! ஒரே இடத்தில் படித்தாலும், கடந்த ஏழெட்டு மாதங்களாகத்தான் நெருக்கம்! அது இப்போது காதலாக மலர்ந்து விட்டது. மது ஐஸ்க்ரீம் பைத்தியம்! விஜய்யின் பாக்கெட் மணி மொத்தமும் மதுவுக்கு ஐஸ்க்ரீம் வாங்கித் தந்தே தீர்ந்து போனது. சாப்பிட்டு முடித்தாள். “க்ளாஸுக்குப் போறியா விஜய்?” “நீ என்ன சொல்ற?” “ரிவிஷன்தான்! புதுசா எதுவும் இல்லை! படத்துக்குப் போகலாமா?” “ஜாக்கிசான் படம் வந்திருக்கு மது!” “எனக்குப் பிடிக்கலை தமிழ்ப் படம் போகலாம். புதுசா ஒரு லவ் சப்ஜெக்ட் ஹிட் ஆகியிருக்காம்!” “உல்டா பண்ணியிருப்பான். லவ்வுல் புதுசா என்ன இருக்கு? எல்லாம் பழைய லவ்வுதான்!” “ஏன் விஜய் இப்படி இருக்கே?” “சினிமால போய் நேரத்தை வீணடிச்சுகிட்டு? ரெண்டு பேரும் லவ்பண்றம். பிராக்டிகலா ஏதாவது செஞ்சாலும்...” “உன்னை...”: “அடப்போம்மா! நான் எதையோ சொன்னா, நீ வேற எதையோ நெனச்சுக்கறியா?” “யூ டர்ட்டிஃபெலோ” அவன் மார்பில் குத்தினாள். “பீச்சுக்குப் போகலாம் வா! கொஞ்ச நேரம் பேசலாம். உங்கக்கா பொண்ணு வயசுக்கு வந்த...” அவள் முறைக்க, எழுந்து ஓடினான்.
