கனவு மெய்ப்பட வேண்டும்
ரமணிசந்திரன்
Publisher: Publishdrive
Summary
அன்று காலையிலிருந்தே மைத்திரேயிக்கு ஒரே பரபரப்பு.பல் துலக்கி வந்ததிலிருந்தே தொடங்கிவிட்டாள்! “அம்மா, இன்று தலைக்கு ஷாம்பூ போடுவதா வேண்டாமா?” என்று தாயாரிடம் கேட்டாள்.“போட்டுக் கொள்ளேன். தலைமுடி அழகாகப் பளபளவென்று இருக்கும்!” இது அம்மா சிவகாமி.“என்னம்மா, ஷாம்பூ போடச் சொல்கிறீர்கள்! ஒரு சின்னக் காற்றுக்குக் கூந்தல் பறந்து கலைந்து போய் விடாதா?” இது மைத்திரேயி.“அப்படியானால், ஷாம்பூ போடாதே!”“என்னம்மா, நீங்கள்! அப்புறம், முகமெல்லாம் எண்ணை வழியாதா? நான் வேறு, இன்றைய நேர்முகப் பேட்டியை மறந்து, நேற்று தலையில் எண்ணை வேறு தேய்த்துத் தொலைத்தேன்!” என்று எரிச்சல்பட்டாள் மகள்.“தெரிகிறதில்லையா? பின்னே ஷாம்பூ போட்டு முடி அலசு... அட அட என்னடி நீ? காலை வேளையில், நான். அஷ்டாவதானம்’ செய்கிற நேரத்தில், இன்னும் ஒன்றாய், நீ வேறு என்ன என்னைப் போரடிக்கிறாய்? நீயாய் யோசித்து, உனக்காய்ச் சரி என்று பட்டதைச் செய், போ!” என்று மகளை விரட்டிவிட்டுத் தன் வேலையில் முனைந்தாள் தாய். “இருபத்திரண்டு வயது முடிந்துவிட்டது. இவள் வயதுக்கு நான் இவளைப் பெற்றும் விட்டேன். இவளானால் பச்சைக் குழந்தை மாதிரி எப்படிக் குளிப்பது என்று கேட்டுக் கொண்டு... இருக்கிறாள்!” என்று எரிச்சலோடு முணுமுணுத்தபடி வெட்டி முடித்த காய்களைத் தட்டில் எடுத்து வைத்தாள்.அடுத்து, அவள் வாணலியை அடுப்பில் ‘ணங்’கென்று வைத்த வேகம், தண்ணீர் மோட்டாரை நிறுத்தி விட்டு வந்த சுந்தரத்தைப் பேச வைத்தது. “பெற்றவளுக்கு ரொம்பத் தெரியும் என்று நினைத்து சின்னப்பிள்ளை ஒன்று கேட்டால் பெரிதாகச் சலித்துக் கொள்கிறாயே!”“இதோ, இதைப்பற்றித்தான் சொல்லிக் கொண்டிருந்தேன். சின்னப் பிள்ளையா, அவள்? இருபத்திரண்டு வயது முடிந்து, ஆறேழு மாதங்கள் சென்றாயிற்று ஒரு மாப்பிள்ளையைப் பார்த்துக் கல்யாணத்தைப் பண்ணி வைக்காமல், ‘ட்ராக் சூட்’ போட்டு ஆண்பிள்ளை மாதிரி ஓடக் கூட்டிப் போகிறீர்கள்! இப்போதானால் வேலைக்கு வேறே அனுப்பப் போகிறீர்கள! இப்போது அவள் சம்பாதித்து என்ன ஆகப்போகிறது? காலாகாலத்தில் ஒரு கல்யாணத்தை...’“.“என்னடி அவசரம்? இப்போதெல்லாம் இருபத்திநாலு வயதுக்கு முன்னால் யார் பெண்களுக்குத் திருமணம் செய்கிறார்கள்? கொஞ்ச காலம் சுதந்திரமாய் இருக்கட்டுமே! கல்யாணமானால் இருக்கவே இருக்கிறது, கண்டிப்பு, கட்டுப்பாடு எல்லாம். உன்னையே எடுத்துக்கொள்! பத்தொன்பது வயதில் கல்லூரிப்படிப்பு முடியும் முன்பே திருமணம் உடனே குழந்தை! என்றாவது கவலையற்று இருந்திருக்கிறாயா? பிள்ளையாவது சந்தோஷமாய் அனுபவிக்கட்டுமே என்று நினையேன்!”“கல்யாணம், குழந்தை என்றால் கட்டுப்பாடும் கவலையும்தானா? மகிழ்ச்சியாகவும்...அடடா! போங்கள் சார்! காலை வேளையில் வேலை நடுவே வந்து பேச்சுக் கொடுத்தால் இப்படித்தான். பாருங்கள்! கடுகை இரண்டாம் தடவை போட்டிருக்கிறேன்!” என்று அலுப்பும் எரிச்சலுமாக உரைத்தாள் சிவகாமி.“நல்லதுக்குச் சொல்கிற புருஷனோடு மல்லுக் கட்டினாயல்லவா! அப்படித்தான் நடக்கும். டேய், மது, மனோ, இன்றைக்கு உங்களுக்குக் காய்ப் பொரியலுக்குப் பதிலாக, உன் அம்மா கடுகுப் பொரியல் செய்திருக்கிறாளாமடா! நன்றாகச் சாப்பிடுங்கள்! நல்லவேளையாக எனக்கு மதியச் சாப்பாடு வெளியே! கலெக்டர்கள் கூட்டம் மதிய உணவோடு சேர்ந்து இருக்கிறது! தப்பித்தேன்!” என்று அவர் சிரிக்கவும் சிவகாமியின் முகம் லேசாகச் சிவந்தது
