என்னை யாரென்று எண்ணி
ரமணிசந்திரன்
Publisher: Publishdrive
Summary
கைகளை உயர்த்தி, மேலே கோர்த்துச் சோம்பல் முறித்தான், சத்யசீலன்.அலுவலக வேலை முடிந்தது. இனி, அத்தையைப் போய்ப் பார்க்க வேண்டும். போனால் எதற்காகவாவது, ஙை, ஙை என்பார்கள். குறைந்தது ஒரு மணி நேரம் அறுப்பார்கள். இன்று அதைச் சகித்துத்தான் ஆக வேண்டும். ஏனென்றால், இந்த சந்திப்பை, ஏற்கனவே, அவன், ஒருவாரம் தள்ளிப் போட்டுவிட்டான். அதுவும், ‘உடனே வா’ காமேசுவரி - அத்தை தான், உத்தரவிட்ட பிறகும்!காத்துக்கொண்டிருந்தாற்போல, சத்யசீலன், ‘பஸ்ஸ’ரை அழுத்திய மறுகணமே, ஆஃபீஸ் பையன் ரத்தினம் கதவைத் திறந்துகொண்டு உள்ளே தலையை நீட்டினான்.முதலாளியின் கண் குறிப்பை ஏற்று, மேஜை மீதிருந்த சிறு கைப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு போய்க் காரில் வைத்தான்.சலாம் அடித்துவிட்டு, அவன் கிளம்ப, ‘செக்யூரிட்டி’ ஆட்களிடம் ஒரு தலையசைப்புடன், சத்யசீலன் காரை எடுத்தான்.காமேசுவரியின் வீட்டு போர்டிகோவில் காரை நிறுத்திவிட்டு. இறங்கி, வீட்டினுள் செல்லும்போது அவன் முகத்தில் ஓர் ஏளனப் புன்னகை அரும்பியது;எப்போதுமே, இங்கு வரும்போதெல்லாமே, அவனுக்கு இதே உணர்வுதான் உண்டாகும்.ஏளனமும் கூடவே ஓர் இரக்கமும்.பித்தளைப் பூண்களும் பிடிகளுமாக எட்டடி உயரவெளிக் கதவுகளும், காரோடும் பாதையில் நூற்றுக்கணக்கான விலைஉயர்ந்த செடிகளுடன் கூடிய தொட்டிகள், தொட்டிகளும் விலை உயர்ந்தவையே, தரையில் பாவப்பட்டிருந்த அறுகோண வடிவச் செங்கல்கள், கொத்து விளக்குகள், இவை தாண்டி, உள்ளேசென்றால், சலவைக்கல் தரையும், காஷ்மீர்க் கம்பளமும், பெரிய பெரிய சரவிளக்குகளும், பளபளக்கும் உலோகச்சிலைகளும்...எதற்கு இந்தப் படாடோபம்?அத்தை பணக்காரிதான். இல்லையென்று சொல்ல முடியாதுதான்! ஆனால், இந்த அளவுக்குப் பெரும் பணக்காரி அல்லவே! கோடீசுவரியே, ஆனால், பெரும் கோடீசுவரி அல்ல.இந்தப் பெரும் கோடீசுவரித் தோற்றத்தைக் காப்பாற்றுவதற்காக காமேசுவரி அத்தை, செய்யவேண்டிய செய்து கொண்டிருக்கும் செலவை நினைக்கையில், சத்யனுக்கு உள்ளூர் ஆத்திரம் வரும். கூடவே, என்ன அசட்டுத்தனம் என்று பரிதாபமாகவும் இருக்கும்.அநாவசியம். இந்தப்பகட்டு இல்லையென்றால், இவளை யாரும் மதிக்கமாட்டார்களாமா?அல்லது, இந்த ஆடம்பரத்தில் மட்டுமே மயங்கி எந்தப் பெரிய பணக்காரனாவது. சுந்தருக்குத் தன் பெண்ணைக் கொடுத்து விடுவான் என்கிற எண்ணமா?அத்தையின் முக்கிய காரணம், இரண்டாவதுதான் என்பது, சத்யசீலனின் ஊகம்.அது, சரியே என்றது. அவன் அத்தையோடு அன்று, அவன் நடத்திய பேச்சு. அவனைக் கண்டதும், ஓடிவந்து நின்ற பணியாளரிடம் சொல்லியனுப்பிவிட்டு, அத்தையின் வரவுக்காக, ஹாலில் காத்திருக்க - அதுதான், அந்த வீட்டு வழக்கம் என்றாலும், அப்படிக் காத்திருக்க அவனுக்கு மனமில்லை.ஹாலில் அமர்ந்துகொண்டு, வேலையாளிடம் சொல்லியனுப்பினால், சந்தோஷம் போல, உடனேயோ, அன்றி, சற்றுத் தாமதமாகவோ காமேசுவரி, அங்கு வந்து தரிசனம் தருவாள்.பொதுவாக, அத்தையின் விருப்பப்படி, இந்த மாதிரியான அவள் வீட்டுச் சம்பிரதாயங்களுக்கு, சத்யனும் மதிப்புக் கொடுப்பது உண்டுதான்.ஆனால் இன்று, காமேசுவரியின் வருகையை எதிர்பார்த்து, உட்கார்ந்திருக்க, அவனுக்கு விருப்பமில்லை. முக்கியமாக, - அப்படிக் காத்திருக்கும் பொறுமை இன்று அவனுக்கு இல்லை எனலாம்
