ஆசை ஆசை ஆசை
ரமணிசந்திரன்
Editora: Publishdrive
Sinopse
இனிமையான நாதஸ்வர இசை! கம்பீரமும் குழைவுமாகக் கேட்பதற்கு மிகவும் அற்புதமாக இருந்தது!ஆனாலும் ஒரு குறை! ஓடிக் கொண்டிருந்தது, டேப்! பெரிய வித்வானின் வாசிப்புதான் என்றாலும், அந்தப் பெரிய திருமண மண்டபத்துக்கும், அதில் நடக்க இருக்கும் விழாவுக்கும், டேப்ரிகார்டருக்கும் சற்றும் ஒத்து வராதது போல, மதிவதனிக்குத் தோன்றியது!அதுவும் கொஞ்சம் விலை மலிவான ப்ளேயர்! அத்தை வீட்டில் விலை உயர்ந்ததும் இருக்கத்தான் செய்கிறது! ஆனால், மண்டபத்துக்கு அதைக் கொணர்ந்து திருட்டுப் போய்விட்டால்?அந்த ஒரு காரணத்துக்காகவே கொண்டு வரப்பட்டது, இது! அதற்காக, இது திருட்டுப் போனால் பரவாயில்லை என்பதல்ல!“அதன் மேல் ஒரு கண் வைத்துக்கொள், வதனிக் கண்ணு! திருமணமும் அதுவுமாக உருப்படியான ஒரு பொருள் தொலைந்து போனால் நல்லதில்லை! அதனால் தான் பார்த்துக்கொள் என்று உன்னைச் சொல்லுகிறேன்! உனக்குத் துணையாகத்தான், உன் சித்தி, மாமா, பெரியம்மா, அவர்கள் பிள்ளைகள் என்று பெரிய கூட்டமே வந்திருக்கிறார்களே! ஒரு கண் வைத்துக் கொள்ளும்படி, எல்லாரிடமும் சொல்லி வைத்துவிடு!” என்று சொல்லி விட்டுத்தான் அத்தை நகர்ந்தாள்.“எங்கள் அண்ணி கூப்பிட்டிருக்கிறார்கள். வராவிட்டால் தப்பாகி விடும். அதனால், குடும்பத்தோடு எல்லோருமே வந்துவிடுங்கள்” என்று மதியுடைய அன்னை சொல்லித்தான், அவள் வழி உறவினர் எல்லோரும், இந்த மாப்பிள்ளை அழைப்பும் பட்டுக் கட்டுவதுமான முந்தைய நாள் விழாவுக்கே வந்ததே!இப்போது, அதையுமே மட்டம் தட்டுவது போலப் பேசுவதா என்று, மதிவதனிக்குச் சற்றுக் கோபம்தான்! அத்தையின் பேச்சு எப்போதுமே, இப்படித்தான்! தரம் சற்றுக் குறைவுதான்இந்த டேப் ரிக்கார்டரைப் போல!கொஞ்சம் இரண்டாவது நிலையில் உள்ள நாயனம் என்றாலும், ஒத்தும், தவிலும், தாளமுமாக, அந்தக் கம்பீரத் தோற்றமே, திருமணத்தை அழுத்தத்துடன் முன் மொழிவது போல இருக்குமே!அதை விட்டு, இருந்திருந்து, இதில் போய்ப் பெரிதாகச் சிக்கனம் பிடிக்கிறார்களே, இந்த அத்தை! இதில் மட்டுமல்ல! அவர்களால் முடிந்த எல்லாவற்றிலும்!மதிவதனியுடைய தந்தைகூட, அவருடைய தங்கையும், மணப் பெண்ணான மோனி என்கிற மோகனாவுடைய தாயுமான சுந்தரியிடம் சொல்லிப் பார்த்தார்!“போங்கண்ணா! நானே பெரிய இடத்தில் பெண்ணைக் கொடுக்கிறோமே என்று, தங்கமும் வெள்ளியுமாகப் பெரும் செலவில் மாட்டிக் கொண்டு தவிக்கிறேன்! இந்த மண்டபத்துக்கே எவ்வளவு பணம்! உங்களிடம் பணம் இருந்தால், நல்லதாக ஒரு நாதசுர செட்டை நீங்களே ஏற்பாடு பண்ணுங்கள்! என்னால் ஆனது இவ்வளவுதான்!” என்று முடித்துவிட்டு, “எனக்கு எவ்வளவு வேலை கிடக்கிறது? உதவிக்கு ஒரு நாதி இல்லாமல் நான் பாடாய்ப் பட்டுக் கொண்டிருக்கிறேன்! என்னை நிறுத்தி வைத்துப் பேசுகிறீர்களே!” என்று குறைப்பட்டவாறே, அங்கிருந்து போய் விட்டாள்.உதவிக்கு ஒரு நாதி இல்லாமலா?வேர்த்து வடிய, இங்குமங்கும் ஓடி, மண்டபத்துக்கு முன்னதாக வந்துவிட்ட உறவினர்களை வரவேற்பதும், உணவு பானம் அளித்து உபசரிப்பதும், இடையிடையே சுந்தரியின் அழைப்புகளுக்கு ஓடுவதுமாகப் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்த மனைவியைப் பார்க்கையில், சுதர்சனத்துக்கே பாவமாக இருந்தது!அதே போல, மகள் மதிவதனியும், மண்டபத்துக்கு வந்ததில் இருந்து வேலைதான் செய்து கொண்டிருக்கிறாள்!அவள் மட்டுமல்ல! அவளுடைய தாய்வழி உறவுப் பெண்களும், அவளோடு வந்து, மாப்பிள்ளை அழைப்புக்கான ஆரத்தித் தட்டுகளை விதம் விதமாக அலங்கரித்து அடுக்கிக் கொண்டிருந்தார்கள்!
