பூவே உன்னை நேசிப்பேன்!
ஆர்.மகேஸ்வரி
Publisher: Pocket Books
Summary
சமைத்து வைத்தவற்றை கொண்டு வந்து டைனிங் டேபிளில் பரப்பி வைத்தாள்.வாசுகி... எல்லோருக்கும் பரிமாறினாள்.மாலினி ஒரு ஓரமாய் நின்று கொண்டாள். ராகவன் அவளை ஏதேச்சையாய் பார்ப்பதுப் போல் பார்த்து வேதனைப்பட்டார்.‘பாவம்... இங்கே வந்த பிறகு ரொம்ப இளைத்து விட்டாள்.’அன்னம் கணவரின் முகபாவத்தை கவனிக்க தவறவில்லை. வாசுகியை பார்த்து கண்களால் அவளை அப்புறப்படுத்த சொன்னாள்.“இங்கே ஏன் நிக்கறே?” என்று கேட்டாள் வாசுகி.“ஏதாவது தேவைப்படும்னா...”“தேவைப்பட்டா, கூப்பிடறேன். அப்ப வந்தாப் போதும். காலையிலே பவுடர் போட்டு ஊறவச்ச துணி! இன்னும் துவைக்கலே. சாயம் போகறதுக்குள்ளே... அந்த வேலையாவது உருப்படியா முடி... போ”“ச... சரிங்க...” என்று போய்விட்டாள் மாலினி. ராகவன் பரிதாபமாய் அவளைப் பார்த்தார்.“ம்...ம்... வேடிக்கை பார்க்காம சாப்பிடுங்க.” என்றாள் அன்னம். ஆனால், அவருக்கு சாப்பாடு இறங்கவில்லை.“நீ என்னடி... எண்ணி... எண்ணி சாப்பிடறே?”“பிடிக்கலேம்மா...”“பிடிச்சதா சாப்பிடு...!”“எனக்கு எதுவுமே பிடிக்கலே... எதுவுமே நல்லாயில்லே...” என்று சிணுங்கினாள் லாவண்யா.எதுவுமே நல்லாயில்லேன்னு நமக்குத் தெரியுது. உங்கப்பாவுக்கு தெரியலியே! காசை வீசியெறிஞ்சா... எத்தனையோ சமையல்காரங்க கிடைப்பாங்க! ஹூம்... சொன்னா கேட்டாதானே? நம்ம தலையெழுத்து... அந்த சண்டாளி சமைக்கிறதை நாம சாப்பிட்டுதான் தீரணும்!”“ஏண்டி... எதையாவது குறை சொல்லிட்டேயிருக்கே? சமையல் நல்லாதானே இருக்கு?”“இருக்கும்... இருக்கும்... உங்களுக்கு அவ சமைச்சா... தேவாமிர்தமாதான் இருக்கும். பாவி... வந்தாளே என் வீட்டுக்கு... வயித்தெரிச்சலை கொட்டிக்கறதுக்கு?”“எனக்குப் போதும்!” என்றபடி பாதி சாப்பாட்டில் எழுந்து கொண்டாள் லாவண்யா...மகளை கவலையாய் பார்த்தாள் அன்னம்.களைத்துப் போனாள் மாலினி. துணிகளை அலசி காயப்போட்டு க்ளிப் போட்டாள்.அந்த வீட்டில் வாஷிங்மெஷின் இருக்கிறது. ஆறு மாதத்திற்கு முன்பு வரை இயங்கிக் கொண்டிருந்த மிஷின் இவள் வந்த உடனே... என்ன காரணத்தினாலோ இயங்குவதை நிறுத்திக் கொண்டது.மைனர் ப்ராப்ளம்தான். ஆனாலும் அந்த ரிப்பேரை சரிப்பண்ண யாரும் முன்வரவில்லை. மாலினி என்கிற மெஷின் அந்த வீட்டிற்கு வந்தபிறகு... வாஷிங்மெஷினுக்கு அவசியமில்லாமல் போய்விட்டது.சுவிட்ச் போட்டதுப் போல், சமையல்காரியும், வேலைக்காரியும் காணாமல் போனார்கள்.மாலினி வருத்தப்படவில்லை.அவளுக்கு... இதைவிட பாதுகாப்பான கூரை வேறு எங்கும் கிடைக்கப் போவதில்லை.யாரிடமோ சிக்கி சின்னாபின்னமாவதைவிட, இந்த வீட்டில் உள்ளவர்களுக்காக உழைத்து சிரமப்படுவது எவ்வளவோ மேல்!கொல்லைப்புற சிமெண்ட் கல்லின் மீது ஆயாசமாய் அமர்ந்து கொண்டாள்.கல்லை ஒட்டிய கொய்யா மரத்தின் மீது அமர்ந்து இருந்த அணியில் இவளைப் பார்த்து வேறு கிளைக்கு தாவி ஓடியதில்... சின்ன கொய்யா ஒன்று அவள் மடியில் விழுந்தது
