நீ காற்று நான் மரம்!
ஆர்.மகேஸ்வரி
Publisher: Pocket Books
Summary
தெரு என்றுதான் பெயர். ஆனால் குண்டும் குழியுமாய். கவனமாய் நடந்தால் கூட சிறு கீறலாவது உடலில் ஏற்படுத்தாமல் விடாது... அந்த சீர் செய்யப்படாத ரோடு.சாதாரண நாளிலேயே ஆட்டோவோ, காரோ - எதுவுமே தெருவினுள் நுழையாது. தெரு - முனையிலேயே இறங்கிக் கொள்ள வேண்டியதுதான். ரோடு போடுகிறோம் பேர்வழி என்று பெரிய பெரிய சரளை கற்களை கார்ப்பரேஷன்காரன் கொண்டு வந்து கொட்டி மூன்று மாதமாகிறது. இன்னமும் ரோடு போடவில்லை. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடக்க சிரமப்பட்டனர். இப்போது மழையில் அந்த தெரு இன்னும் பயமுறுத்தியது!மழை தண்ணீர் வேறு தேங்கிடக்கிறது. மரங்கள் வேரோடு சாய்ந்து வழியை அடைத்துக் கொண்டிருக்கிறது.ஆட்டோ நிச்சயமாய் உள்ளே வராது. பிரசன்னா தெருமுனையில்தான் இறங்கியாக வேண்டும். வீடு வந்து அடைவதற்குள் தெப்பமாய் நனைந்து விடுவாள். அதுவும் வீடு தெருவின் கடைகோடியில் உள்ளது. பிரசன்னாவிற்கு மழையில் நனைந்தாலே காய்ச்சல் வந்துவிடும்.அனுசுயா ரெய்ன் கோட்டும் இரண்டு குடைகளும் எடுத்துக் கொண்டு கதவை பூட்டிவிட்டு நடந்தாள்.சில்லென்ற குளிர்காற்று முகத்தில் மோதியது. தள்ளி மெடிக்கல் ஷாப் ஒன்றிருந்தது. அங்கே ஒதுங்கி நின்றாள்.“என்ன டீச்சரம்மா... இங்கே நிக்கீறங்க?” என்றாள் குணவதி... அவள் வீட்டிற்கு நான்கு வீடு தள்ளி இருப்பவள்...“பிரசன்னாவுக்காக வெய்ட் பண்றேன்!”“அவ என்ன சின்னக்குழந்தையா? தெரு முனையில் வந்து காத்திருக்கீங்க?” கிண்டலாய் சொல்லிவிட்டுப் போனாள்வயிற்றெரிச்சல் பொறாமை! என் பொண்ணுக்கு, அழகு, படிப்பு, வேலைன்னு கடவுள் எதிலேயும் குறைவைக்கலையேன்ற எரிச்சல். இது பொண்ணுக்கு எலிவால் பின்னலும், துருத்திய பல்லுமாய் இருக்குதேன்ற வயிற்றெரிச்சல்! பிரசன்னா என் பொண்ணு என்னைப் பொறுத்தவரை அவ கைக்குழந்தைதான்! முதல்ல பிரசன்னாவுக்கு சுத்திப் போடணும்!”சற்று தூரத்தில் ஒரு ஆட்டோ வருவது தெரிந்தது. உற்றுப் பார்த்ததில் அதில் பிரசன்னா இருப்பது தெரிந்தது.அனுசுயா அவசர அவசரமாய் குடையை விரித்து ஆட்டோவை நோக்கி ஓடினாள்.ஆட்டோக்காரரிடம் பணம் கொடுத்துவிட்டு இறங்கிய பிரசன்னா முகத்தில் ஆச்சர்யம்.“அம்மா... நீ... ஏம்மா இங்கே வந்து காத்திருக்கிறே!”“நனைஞ்சிடப்போறே... குடைக்குள்ளே வா மொதல்ல... இந்தா... இந்த ரெய்ன் கோட்டை போட்டுக்க!’“அம்மா... என்ன இது ரெய்ன் கோட்டெல்லாம்? இதோ இருக்கிற வீட்டுக்கு போக எனக்கு இவ்வளவு பந்தோபஸ்து?” அலுப்பாய் கேட்டாள்.“ப்ச்... முதல்ல போடு!” போட்டுக் கொண்டாள்.“ம்... நட... வீட்டுக்குப் போகலாம்!”அம்மாவை மிரட்சியாய் பார்த்தபடி நடந்தாள் பிரசன்னா. அம்மாவின் அதீத அன்பு அவளுள் ஒருவித பயத்தை உற்பத்தி செய்தது. வீட்டின் பூட்டை திறந்து உள்ளே சென்றனர்.“அம்மா... ஏம்மா இப்படி நடந்துக்கறே?”“எப்படி நடந்துக்கறேன்?”“எனக்கு இருபது வயசு முடிஞ்சாச்சு! ஆனா... அஞ்சு வயது குழந்தை மாதிரி நடத்தறே!”“நீ எனக்கு எப்பவும் குழந்தைதான்!”“அதுக்காக மத்தவங்க கிண்டல் பண்ற அளவுக்கு நடந்துக்கணுமா?”இதுல கிண்டல் பண்றதுக்கு என்னடி இருக்கு? என் பொண்ணுமேல நான் அன்போட... அக்கறையோட நடந்துகறதுக்கு கூட கிண்டல் பண்ணுவாங்களா என்ன?”“உனக்குச் சொன்னாப் புரியாதும்மா! பத்துவீடு தாண்டி நடந்தா நம்ம வீடு! எனக்கு வரத் தெரியாதா? தெரு முனையிலே நீ காத்திருக்கணுமா?”“நீ நனைஞ்சிடுவியே பிரசன்னா?”“நனைஞ்சா என்ன? செத்தா போயிடுவேன்?”“பிரசன்னா...!” என்று அவள் வாயைப் பொத்தினாள் அனுசுயா.“என்ன பேச்சு பேசறே? உனக்கு அம்மா மேல கோபம்னா... ரெண்டு அடி வேணும்னா அடிச்சிடு. இப்படியெல்லாம் பேசாதே!” குரல் பிசிறியது.“அம்மா...! என்றலறினாள்.“நீ என்னம்மா பேசறே? உன் மேல எனக்கு கோபமா? அதுக்காக நான் அடிக்கணுமா? நெருப்புல சூடு வச்ச மாதிரி இருக்கும்மா நீ பேசறது”“பின்னே என்னடி? என் அன்பை விமர்சிக்கறதும் கேலி பேசறதும் தப்பில்லையா? அது எனக்கு வலிக்காதா?”“சரி... நான் அப்படி பேசினது தப்புதான்! ஆனா, நான் கோபப்பட்டது அதுக்காக மட்டும் இல்லேம்மா! மழையிலே எனக்காக வந்து நீயும் அல்லாடனுமா? எனக்கு ஏதும் ஆகிடக் கூடாதுன்னுதானே... இப்படி வந்து காத்திருக்கிறே? அதே மாதிரி உனக்கும் ஏதாவது வந்து படுத்துடக்கூடாதுன்னு நான் நினைக்கமாட்டேனா? எனக்கு அந்த அக்கறை இல்லையா? பாசம் இல்லையா?”அனுசுயா மகளை பாசத்தோடு அணைத்துக் கொண்டாள்.
