வெண்ணிலா நேரத்திலே!
ஆர்.சுமதி
Publisher: Pocket Books
Summary
குண்டு பூசணிக்காயாக உடலைப் பெருக்க விட்டிருந்த தையல்நாயகி பிருந்தாவுடன் ஓட முடியாமல் மூச்சிரைத்தாள்.இருவரும் வழியில் இருந்த மளிகைக் கடை ஒன்றில் நின்றனர்.கடையில் கூட்டம் அவ்வளவாக இல்லை.முதலாளியின் இடத்தில அமர்ந்திருந்தான் ஆதி. வாடிக்கையாளர் ஒருவர் நீட்டிய பணத்தை வாங்கி கல்லாவில் போட்டுக் கொண்டிருந்தான் ஆதி.“உன் மாமனைப் பாரு. கடைக்கே முதலாளி மாதிரி உட்கார்ந்திருக்கு.” என்றாள் தையல்நாயகி.“ஒரு நாளைக்கு சொந்தமா கடை வச்சு முதலாளியா உட்காரமலா போகப்போகுது...” என்று விட்டுக் கொடுக்காமல் சொன்னாள் பிருந்தா.ஆதி அவர்களைப் பார்த்துவிட்டான்.“மாமா...இந்தா டிபன். அம்மா கொடுத்துது...”“நீ எதுக்கு எடுத்துட்டு வந்தே? நான் வந்து சாப்பிட்டுக்க மாட்டேனா? உனக்கு ஸ்கூலுக்கு நாழியாகலையா? கடைக்கெல்லாம் வந்துக்கிட்டு...” வேளை செய்யும் விடலைப் பையன்கள் பொட்டலம் மடிப்பதை விட்டுவிட்டு பிருந்தாவைப் பார்ப்பதை கவனித்த ஆதி அவளை சற்றே அவஸ்தையாகப் பார்த்தான்.“ம்...உனக்குப் புரியுது. என் அம்மாவுக்குப் புரியலையே...” என முணுமுணுத்துவிட்டு தையல்நாயகியுடன் சென்றாள் முதுகு திருப்பியபடி.அவர்கள் அகன்றதும் மீதி சில்லறையை வாடிக்கையாளருக்கு கொடுக்க கல்லாவில் குனிந்தவனிடம் பணம் கொடுத்த அந்த நடுத்தர மனிதர் குறும்பாகக் கேட்டார்.“என்னப்பா ஆதி? அக்கா மக அக்கறையா டிபன் கொடுத்துட்டுப் போறா? என்னா விஷயம்?”வெட்கப்பட்ட ஆதி சிரித்தான்.“அக்கா கொடுத்துவிட்டிருக்கு. பாவம் பள்ளிக்கூடம் போற நேரத்துல அதுக்கு வேலை.”“அப்ப உன் மேல அக்காவுக்குத்தான் அக்கறை. இவளுக்கு இல்லைன்னு சொல்றே?”“அப்படியில்லீங்க.”“அப்ப இவளுக்கு மாமன் மேல அக்கறை இருக்குன்னு சொல்லு. கட்டிக்கப் போறவளுக்கு அக்கறை இல்லமாயிருக்குமா?”தீயை தொட்டதைப் போல் பதறினான்.“ஐய்யோ...நீங்க வேற?”“என்ன தப்பா சொல்லிட்டேன்? அவ உனக்கு மொறைப் பொண்ணுதானே?”“மொறைப் பொண்ணுதான். ஆனா...குமாருக்கு கட்டறதாத்தான் பேச்சு.”“அந்த ஒட்டடைக்குச்சிப் பயலுக்கா? இவதான் உன் பொறுமைக்கும் குணத்துக்கும் பொருத்தமாயிருப்பா!” இப்பொழுது ஆதியின் முகத்தில் ஒரு கிளர்ச்சி படர்ந்து மறைவதை அவர் மட்டுமல்ல வேலைக்கிடையே ஜாடையாக கடைப் பையன்களும் பார்த்துச் சிரித்தனர்.“குமார் காலேஜ்ல படிக்கிறான். அவனுக்கு சமமாயிருக்கணும்னுதான் அக்கா அவளைப் படிக்க வைக்குது.”“இருக்கட்டுமே...படிச்ச பொண்ணு படிக்காதவனைக் கட்டிக்கிட்ட கதையெல்லாம் உலகத்துல இல்லையா?”“அதுக்கில்லை. குமாருக்குத்தான் பிருந்தா வயசுப் பொருத்தம் சரியாயிருக்கும். எனக்கும் அதுக்கும் ரொம்ப வயசு வித்தியாசம்.”“என்ன பெரிய வயசு வித்தியாசம்? உங்க அக்காவை பதினாறு வயசுல முப்பத்தஞ்சு வயசு அத்தானுக்கு அதுவும் ரெண்டதாரமா கட்டிக் கொடுக்கலையா? அவங்க சந்தேகத்துக்குத்தான் முதல் உரிமை. குமாருக்குன்னு பேச்சுத்தானே? வார்த்தையெல்லாம் வாழ்க்கையாகிடுமா ? விட்டுக் கொடுத்துட்டு உட்கார்திருக்காதே! பிரிந்தசூட்டிகையான பொண்ணு அவளைக் கட்டிக்கிட்டா நீ இப்படி இனொருத்தன்கிட்டே வேலை பார்க்கிற நிலை இருக்காது உன்னை ஒரு கடைக்கே முதலாளியா ஆக்கிடுவா.”“இந்தாங்க”கடைப் பையன் நீட்டிய பொட்டலத்தை வாங்கிக் கொண்டு அதி மனதில் பொறியை கிளப்பிவிட்டுவிட்டு போய்விட்டார் வாடிக்கையாளர்.வேடிக்கையாகப் பேசினார் என எடுத்துக் கொள்வதா உண்மையாக எடுத்துக் கொள்வதா என ஒரு கணம் தடுமாறினான் ஆதி.அந்த வார்த்தைகள் அரியாசனம் போட்டு அமர்ந்து விட்டது அத்தியின் மனதில்.“ஏய்... பிருந்தா உங்கம்மா முருகேசன் வீட்ல குமாரை பார்த்து வீட்டுக்கு சாப்பிட வரச் சொல்லிட்டுப் போன்னு சொன்னாங்களே மறந்துட்டியா?”ஓட்டமும் நடையுமாக முன்னால் சென்று கொண்டிருந்த பிருந்தாவின் பின்னாலயே நடந்த தையல் ஞாயபகப்படுத்தினால்.“வேற வேலை இல்லை. சாப்பாடு கொடுக்கறதும். சாப்பிடாதவங்களையெல்லாம் கண்டுபிடிச்சு சாப்பிடவாங்கன்னு சொல்றதுதும்தான் எனக்கு வேலையா? ஏற்கனவே லேட்டாயிண்ட்டுன்னு நானே பயந்துகிட்டு ஓடறேன்.”“பாவம்டி குமார்.”“ம்... அவ்வளவு அக்கறையிருந்தா நீ போய் சொல்லிட்டு வா. அதுவரைக்கும் உனக்காக பஸ் காத்துக்கிட்டிருக்கும்.”“அடப்பாவி என்னடி இப்படி சொல்றே?”பிருந்தா கடுப்படிக்க தையல் மௌனமானாள்.இருவரும் பேருந்து நிறுத்தத்தை நெருங்கினர்
