தொட்டில் வரை காதலி!
தேவிபாலா
Editorial: Pocket Books
Sinopsis
அலுவலகம் போன நடேசன் திடீரென தலைசுற்றி, வாந்தி என ஏற்பட, லீவு போட்டுவிட்டு வீட்டுக்கு வந்தார். வந்தும் அது தொடர ராஜம் நடுங்கிப் போனாள். கீதா கல்லூரிக்குப் போயிருந்தாள். ராஜம் எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு போன் செய்ய, வித்யா வந்துவிட்டாள். “நீ பயப்படாதேமா. நான் ஆட்டோ கூட்டிட்டு வர்றேன்!” பத்தவாது நிமிடம் அந்த கிளினிக்கில் இருந்தார்கள். எல்லா டெஸ்ட்டும் எடுக்க வேண்டும் என்றார் டாக்டர். எடுக்கப்பட்டது. “நாளைக்குத்தான் ரிப்போர்ட் வரும். அதுவரைக்கும் மருந்து தர்றம். அவர் எங்க பார்வைல இங்கேயே இருக்கட்டும்!” நடசேன் புலம்பத் தொடங்கி விட்டார். “ராஜம்! எனக்கு என்னாச்சு?” “அப்பா! உங்களுக்கு ஒண்ணும் ஆகலை! இதெல்லாம் மனுஷனாப் பொறந்தா இயல்புதானே! தைரியமா இருங்க!” மறுநாள் மாலை அந்த இடி தலையில் இறங்கியது. “அவருக்கு பிளட் கேன்சர்மா! ரொம்ப அட்வான்ஸ் ஸ்டேஜ்ல இருக்கு!” அம்மாவும், மகளும் நிலைகுலைந்தார்கள். “அதெப்படி டாக்டர்? இத்தனை நாள் எந்த சிரமும் தெரியாம எப்படி?” “இது ராட்சஸத்தனமா வளரும்மா. அப்படிப்பட்ட நோய்!” “குணப்படுத்த முடியாதா டாக்டர்?” “ஸாரிமா! உங்களை ஏமாத்த நான் விரும்பல! அதிகபட்சம் ஒரு மாசம் கூட உங்கப்பா தாங்க மாட்டார். உங்களை நீங்க தயார் படுத்திக்கலாம்!” வித்யா பலமாக மிக பலமாக அடிபட்டாள். அம்மாவுக்கு மயக்கமே வந்து விட்டது. தெளிந்த போது, கீதாவும், வித்யாவும் பக்கத்தில் இருந்தார்கள். “நான் என்ன செய்வேன்? அவரையும் இழந்துட்டு இந்தக் குடும்பம் பாதில நிக்கணுமா?” “இதப்பாரம்மா! புலம்பாதே! அப்பா காதுல இந்த செய்தி இதுவரைக்கும் விழலை! கடைசி வரைக்கும் விழாம காப்பாத்துவோம். நாளைக்கு நாம வாழற வாழ்க்கையை விட, இருக்கற நாள்ள அவரை அமைதியாக வச்சுக்கறதுதான் புத்திசாலித்தனம்!” ராஜம் பேசவில்லை! அன்று மாலை எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு வந்தாள் வித்யா. முதலாளியை சந்தித்தாள். “சார்! எனக்கொரு உதவி செய்ய உங்களால முடியுமா?” “சொல்லும்மா!” “எங்கப்பாவுக்கு அதிகபட்ச ஆயுள் ஒரு மாசம்தான்னு டாக்டர் சொல்லியாச்சு! இந்தக் கால கட்டத்துல ராத்திரி – பகல்னு எப்பவும் அப்பாகிட்டவே நான் இருக்க ஆசைப்படறேன்!” “சரிம்மா!” “இந்த ஒரு மாசம் நான் வேலைக்கு வரலைனா என்னை வேலையை விட்டு நிறுத்திடுவீங்களா?” “நிச்சயமா மாட்டேன்மா! உன்னை மாதிரி அபாரமா வேலை பாக்கறவங்க யார் இருக்காங்க!” “அது போதும் சார்! அவரை நல்லபடியா வழியனுப்பிட்டு, நான் வந்துடுவேன் சார்!” அந்த வாரக் கடைசியில் அப்பாவை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார்கள். “நான் எப்பம்மா வேலைக்குப் போறது?” “உங்களுக்கு ஒரு மாசம் லீவு சொல்லியாச்சு. உங்க ஆபீஸ்ல நீங்க நல்லா ரெஸ்ட் எடுக்கணும்பா!” “எனக்கு லீவு அதிகம் இல்லைம்மா! சம்பளம் கட் ஆனா கஷ்டம். அவசரப்பட்டு எல்லாரையும் போல ஆசைப்பட்டு சொந்த வீட்டைக் கட்டியாச்சு. கிட்டத்தட்ட கடன் மட்டும் வெளில ரெண்டு லட்சம் இருக்கும்மா! எனக்கு சம்பளமும் கட் ஆச்சுனா எப்படிம்மா அடைக்கறது?” “எல்லாம் செய்யலாம்மா! நீங்க ஏன் கவலைப்படறீங்க?” “நீ வேலைக்குப் போகலையா?” “லைசென்ஸ் பிரச்சனைப்பா! ஒரு மாசத்துக்கு நான் போக வேண்டாம் வேலைக்கு. மறுபடியும் அடுத்த மாசம் கம்பெனி திறப்பாங்க!” அப்பா பேசவில்லை!. இரவு மருந்தின் மயக்கத்தில் அவர் உறங்க, கீதா படித்துக் கொண்டிருந்தாள், மாடியில். அம்மா வித்யாவிடம் வந்தாள். “வித்யா!” “சொல்லும்மா!” “கடவுள் ஏதாவதொரு அற்புதத்தை செஞ்சு உங்கப்பாவைப் பிழைக்க வைக்காதா?” வித்யா சிரித்தாள்.
