பட்டு மாமி!
தேவிபாலா
Editorial: Pocket Books
Sinopsis
ஆவி பறக்கும் காபியுடன் கூடத்துக்கு வந்தாள் பட்டு! ஈஸிசேரில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார் ரமணி!“இந்தாங்கோ!”அதை வாங்கிக் கொண்டார் ரமணி. அவளை ஏற இறங்கப் பார்த்தார்.“ஏன் அப்படி பார்க்கறேள்?”“காலங்காத்தாலே குளிச்சு லட்சணமா நெத்தி நிறைய குங்குமத்தோட வர்ற உன் மூஞ்சில முழிச்சாத்தான்மா பொழுதே சரியா விடியறது நேக்கு!”பட்டு சின்னதாகச் சிரித்தாள்.“நீ காப்பி சாப்பிட்டியோ?”“இல்லை!”“ஏன்?”“தினமும் காப்பி சாப்பிட்டா, ஒருநாள் அது இல்லைனா கஷ்டமா இருக்கும். எப்பவும் எல்லாமே கிடைக்கும்னு என்ன நிச்சயம்? நான் எதுக்கும் அடிமையானதில்லை!”அவர் ஆச்சர்யமாகப் பார்த்தார்.“என்ன டிபன் பண்ணட்டும்?”“நீ எது பண்ணினாலும் நன்னா இருக்கும். உன் இஷ்டம் போல செய்!”“மாமி எப்ப வருவா?“யாருக்குத் தெரியும்? எனக்கு சமைச்சுப் போட நீ இருக்கே! மற்ற வேலைகளை கவனிக்கவும் ஆள் இருக்கு. அவ தேச சஞ்சாரி. ஊரைச் சுத்திண்டு இருப்பா!”பட்டு மாமி உள்ளே வந்தாள்.ஆடிட்டர் ரமணிக்கு ரொம்ப கடமைப்பட்டவள். கடந்த நாலைந்து வருடங்களாக இந்த வீட்டில்தான் சமையல் வேலை!குருக்கள்மாமி மூலம் அறிமுகமாகி, அந்தப் பழக்கம் தொடர்ந்து, இன்று நெருங்கி விட்டாள்.ஐம்பதுகளின் பிற்பகுதியில் இருந்த ஆடிட்டர் ரமணி சம்பாதித்து குவித்துக் கொண்டிருந்தார்.ஒரே மகன்...அயல் நாட்டில் வைத்துப் படிக்க வைக்க ஆசைப் பட்டார். அவன் படிப்பு முடிந்த கையோடு, ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்மணியைக் காதலித்து மனைவியாக்கிக் கொள்ள, அதை ஒப்புக்கொள்ள முடியாத இவர், மகனுடன் உறவை முறித்துக் கொண்டார். மனைவி சாரதா என்ன சொல்லியும் எடுபடவில்லை. மகன் மும்பையில்தான் இருக்கிறான். சாரதா கோயில் குளம், தன் உறவுக்காரர்களின் கல்யாணம் என்று எதையாவது சொல்லிக் கொண்டு வருடத்தில் எட்டு மாதங்கள் வீட்டில் இருக்க மாட்டாள். ரமணி கண்டு கொள்ளவில்லை. தன் தொழிலில் மும்முரமாக இருந்ததால் அவரால் எதைப் பற்றியும் கவலைப்பட முடியவில்லை. வீட்டிலேயே அலுவலகம். காலை முதல் இரவு வரை க்ளையண்ட்டுகள். பிஸியான ஆடிட்டர். பட்டு மாமி வந்து சேர்ந்த ஒரு வருடத்தில் ஊர் மக்கள் சும்மா இருக்காமல், கொஞ்சம் சீண்டிவிடப் பார்த்தார்கள்-அடிக்கடி சாரதா வெளியூர் போய் விடுவதால் ஆடிட்டர் ரமணி பட்டுமாமியை வைத்திருக்கிறார் என்று. முதலில் குருக்கள் மாமிதான் இதை பட்டுவின் காதுக்குக் கொண்டு வந்தாள்.“பட்டு! நான் சொல்றேன்னு கோச்சுக்க மாட்டியே?”“சொன்னாத்தானே தெரியும்!”“நீ அந்த ஆடிட்டர் ரமணியாத்துக்கு வேலைக்குப் போறதை நிறுத்திடேன்!”“எதுக்கு?“நீயும் வயசான கிழவி இல்லை. இன்னிக்கெல்லாம் போனா, நாற்பது கூட ஆகலை நோக்கு. பெண் குழந்தை வேற இருக்கு.”“நேராச் சொல்லுங்கோ!”“கூசறது நேக்கு!”பட்டு வாசல் திண்ணையில்தான் உட்கார்ந்திருந்தாள். சற்று தள்ளி நாயரின் சாயாக் கடையில் நாலைந்து பேர்... ஆட்டோக்காரர் உண்ணியின் அம்மா... எதிரே சவுண்டி மடத்தில் சின்னதான ஒரு கூட்டம்... பட்டு சட்டென குரலை உயர்த்திவிட்டாள்.“எதுக்கு ஆடிட்டர் ரமணியாத்துக்கு சமையல் வேலைக்குப் போறதை நிறுத்தணும்?”“பட்டு, மொள்ளடி! எதுக்கு இப்ப நீ குரலை உசத்தறாய்?”“நாலு பேர் தெரிஞ்சுக்கட்டுமே மாமி! தனித்தனியா எல்லாரும் என்னைப் பத்திப் பேசத்தான் போறா. என்ன சொல்றா எல்லாரும்? ரமணி என்னை வச்சிண்டு இருக்கிறார்னுதானே! ஆமாம்... ரமணியோட ஆசைநாயகிதான் நான். போதுமா? வேறென்ன தெரியணும் இந்த கோயில்குண்டு ஜனங்களுக்கு?”“அய்யோ பட்டு... ஒரு பொம்மனாட்டி நட்ட நடு கிராமத்துல நின்னுண்டு பேசற பேச்சாடி இது?”“ஒரு பொம்மனாட்டி பத்தி ஒளிஞ்சு ஒளிஞ்சு எல்லாரும் பேசலாம். அதுல தப்பில்லை! ஆனா அவ பகிரங்மாக பதில் சொல்லக்கூடாது! அப்படித்தானே!”குருக்கள் மாமி வெல வெலத்துப் போனாள்.“த பாருங்கோ மாமி! இந்த என்னோட பதில் எல்லோருக்கும்தான். நான் உழைக்கிறேன். நாலு காசு சம்பாதிக்கிறேன். என் குழந்தைகளுக்கு சாதம் போடறேன். நான் கஷ்டப்பட்டப்ப யாரும் ஏன்னு கேக்கலை. போராடினது நான்தான். அதனால யாருக்கும் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் நேக்கில்லை! எந்த நாய்க்காவது தைரியம் இருந்தா என் எதிர்ல வந்து நின்னு பேசட்டும்!”நின்றவர்கள் அத்தனை பேரும் சட்சட்டென காணாமல் போனார்கள்
