பிரசாதப் பொட்டலம்
தேவிபாலா
Editora: Pocket Books
Sinopse
காரியங்கள் சகலமும் முடிந்து விட்டன மளமளவென! அதுவரை ஆலய பூஜைகளுக்குத் தற்காலிக ஏற்பாடுகளைச் செய்திருந்தான் நடேசன். எல்லாம் முடிந்து நடேசன் ஆலயத்துக்கு வரத் தொடங்கி விட்டான். பல ஆண்டுகளாக அங்கு வாழ்ந்த குருக்களை அந்தக் கிராம மக்களால் சுலபத்தில் மறக்க முடியாது! அந்த கம்பீர உருவமும், வெண்கலக் குரலின் மந்திர உச்சாடனமும்... இப்போதும் காதில் ஒலிக்கிறது? ஆனால் நடேசன் எந்தக் குறையும் வைக்கவில்லை! அப்பாவும் போன பிறகு, கோயிலே கதி எனக் கிடந்தான். அன்றைக்கு இரவு நேர பூஜையை முடித்துப் பள்ளி கொள்ளச் செய்தபின், ஆலயத்தைப் பூட்டிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான். அம்மா முனகல் கேட்டது. ஓடி வந்தான். தொட்டுப் பார்த்தான். “ஜூரம் இருக்கும் போலிருக்கே! கஷாயம் போட்டுத் தரட்டுமா?” “வேண்டாம்பா” “அப்பா போன முதல் நீ சரியா இல்லை! தெனமும் விடிய ஒரு நாழிக்குக் குளிச்சு, நைவேத்தியத்துககுனு தனியா சமைச்சு... இனிமே இதெல்லாம் உன்னால முடியுமாம்மா?” “முடிஞ்சுதானே ஆகணும்?” “நான் அன்னத்தை வரச் சொல்லட்டுமா?” “அவளுக்கு வயசாகலையா?” “பின்ன எப்படீம்மா?” “உங்கப்பாவுக்குக் குடுத்து வைக்கலை! அவரோட கடைசி ஆசை நிறைவேறவும் இல்லை! எனக்கும் எந்த ஆசையும் நிறைவேறாது” கண்களை மூடிக் கொண்டாள். சுரீலென்றது நடேசனுக்கு! 'அம்மாவை இனி வீட்டு வேலைகளைச் செய்ய வைப்பது மிகப் பெரிய தண்டனை!' 'அப்பா என்ன தப்பாக ஆசைப்பட்டு விட்டார்?' 'நிறைவேற்ற முடியாத ஆசையல்லவே! கங்காவை அவள் அம்மாவுடன் அடிக்கடி ஆலயப் பிரகாரத்தில் பார்ப்பதுண்டு! மனசு வேறு எதற்கும் தயார் ஆகாததால், நின்று பார்க்கத் தோன்ற வில்லை! 'நானும் காலம் முழுக்கத் தனித்து வாழ்ந்து விட முடியாது!' 'மனைவி என்று ஒருத்தி நிச்சயமாக வேண்டி வரும்!” 'அது இந்த கங்காவாக இருந்து விட்டுப் போகட்டுமே!’ அம்மாவின் அருகில் வந்தான். “அம்மா! அப்பாவோட கடைசி ஆசையை நிறைவேற்ற நான் தயார்!” அம்மா குபீரென எழுந்து உட்கார்ந்தாள். “நடேசா! நீயா சொல்ற?” “நானேதான்மா!” “அன்னத்தை சாயங்காலம் வரச் சொல்லு! நான் பேசி முடிவு பண்ணணும்!” “சரிம்மா” இரவு ஏழரைக்கு அன்னம் வந்தாள். “ஒக்காரு அன்னம்” “எப்படிம்மா இருக்கேள்?” “எத்தனை நாளைக்கோ? நடேசன் கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டான்!” “அப்படியா?” “எங்காத்துக்காரர், உன் பொண்ணு கங்காதான் இந்தாத்து மாட்டுப் பொண்ணா வரணும்னு சொன்னது உனக்கும் தெரியும்!” “நான் தவிக்கறேன்மா” “என்னதவிப்பு?” “என் பொண்ணுக்கு அந்தத் தகுதி இருக்கா?” “இதுல என்ன அன்னம் தகுதி? இது பெருமாள் போட்ட முடிச்சுனு நினைச்சுக்கோ. என்ன சொல்ற?” அன்னம் பேசவில்லை! “இன்னும் என்ன யோசனை? உம்பொண்ணு சம்மதிக்க மாட்டாளா?” அன்னம் சிரித்தாள்
