நன்றி கொன்றவனே!
தேவிபாலா
Editorial: Pocket Books
Sinopsis
காலை அலுவலகம் வந்ததும் அவசரமாக டெலிபோனை அணுகி, டயல் செய்தாள். “யாரு சுரேஷா? உடனே உன்னை நான் பாக்கணும் சுரேஷ். நேத்து நாலு தடவை போன் பண்ணினேன். எங்கே போய்த் தொலைஞ்சே?” ஆத்திரத்துடன் படபடத்தாள் கங்கா. “……” “நான் லீவு போட்டுட்டு வர்றன். நீயும் உடனே வா சுரேஷ். விஷயம் ரொம்ப முக்கியம். அவசரமும்கூட. அடையாறு காந்தி மண்டபத்துக்கு வந்துரு. சரியா?” அவன் பதிலை எதிர்பாராமலே ரிசீவரை வைத்துவிட்டு, லீவு எழுதிக் கொடுத்தாள். உடனே புறப்பட்டு விட்டாள். வாசலில் வந்து அவசரமாக ஆட்டோவை அழைத்தாள். அவள் காந்தி மண்டபத்தை அடைந்து பதினைந்து நிமிடங்களில் சுரேஷ் வந்து விட்டான். “என்ன கங்கா இத்தனை அவசரமா?” “உன்னை வெட்டிப் போடணும் அப்படியே!” “அரிவாள் கொண்டு வந்திருக்கியா?” “சிரிக்காதே சுரேஷ். எரியுது எனக்கு.” “எங்கே?” “பி சீரியஸ்! நிலைமை புரியாம விளையாடக் கூடாது தெரியுதா?” “சொல்லு.” “நேத்து நாலு தடவை போன் போட்டேன் உனக்கு.” “நான் ஒரு கலெக்ஷனுக்காக வெளியே போயிருந்தேன் கங்கா. விஷயத்தைச் சொல்லு.” “அப்பா அவசரமா என் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணத் தொடங்கிட்டார்.” சுரேஷ் சட்டென முகம் மாறினான். “மேல சொல்லு.” “கதை கேக்கறியா சுரேஷ்? தவிச்சுகிட்டு இருக்கேன் நான்.” தொடர்ந்து சகலமும் சொல்லி முடித்தாள். “கங்கா, நீ ஒண்ணு செய்.” “உங்கப்பா பார்க்கற வெங்கடேசனைக் கட்டிக்கனு சொல்ல வர்றியா சுரேஷ்?” “பின்னே? பதினஞ்சு நாள்ள எல்லாம் முடியணும்னு அவசரப்பட்டா எப்படி கங்கா?” “சுரேஷ் உனக்கு வெக்கமால்லை?” கீழே குனிந்து பார்த்துக் கொண்டான் சுரேஷ் “ஏன், ஜிப்பெல்லாம் போட்டுத்தானே இருக்கு?” “விளையாட்டுக்கு ஒரு அளவு இருக்கு சுரேஷ். இப்ப நீ என்னதான் சொல்றே?” சுரேஷ் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டான். அதன் முனைபோல அவன் முகமும் லேசாகச் சிவக்கத் தொடங்கியது. “நான் விளையாடலை கங்கா. என் நிலைமை உனக்கு நல்லாத் தெரியும். உன்னை மாதிரி ஒரே மகள், எந்தப் பொறுப்பும், சுமையும் இல்லாம இருந்தா, நாளைக்கென்ன, இப்பக்கூட நான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல முடியும்.” “சுரேஷ்!” “அப்பா இல்லை எனக்கு. அம்மாவோ விதவை. ஊனமான ஒரே தங்கை. அவளைக் கரை சேர்க்காம நான் எப்படி கங்கா உன்னைக் கல்யாணம் செஞ்சுக்க முடியும்?” “அப்ப நீ காதலிச்சிருக்கக் கூடாது சுரேஷ்!” “ஷட்டப்!” அவன் போட்ட அதட்டலில் கங்கா மிரண்டு விட்டாள். படு சீரியஸான சுரேஷை அவள் இப்போதுதான் பார்க்கிறாள். “சுரேஷ்!” “ஐயாம் ஸாரி! உன்கூட மனசு விட்டுப் பழகிட்டேன். நான் காதலிச்சிருக்கக் கூடாதுதான்!” அவள் நெருங்கி வந்து அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
