நீதான் என் காதலி
தேவிபாலா
Publisher: Pocket Books
Summary
தந்தி வந்திருந்தது. வட இந்தியாவில் இருக்கும் அக்காவிடமிருந்து. உடனே புறப்பட்டு வரும்படி. அவளுக்கு ஃபிராக்சர் ஆகிவிட்டதால், உதவி தேவை என்று தந்தி. அப்பா, அம்மா பதறிவிட்டார்கள். இருவரும் அவசரமாகப் போய் லீவு போட்டார்கள். பணம் எடுத்து வந்தார்கள். பரபரப்பாக பேக் செய்தார்கள். “அம்மா! நீ வீட்டை பார்த்துக்கோ. செலவுக்கு இந்தா ஆயிரம் ரூபாயை வச்சுகோ. போபால் போகணும். குழந்தை எந்த நிலைமைல இருக்காளோ... நாங்க ரெண்டு பேரும் போய்த் திரும்ப பத்து நாளாகும் நிச்சயமா!” “சரிப்பா” “கேஸ் வரும். பால் கார்ட் வாங்கலை! ஞாபகம் வச்சுக்கோ. காய்கறி வாங்கிக்கோ.” “அதான் வினய் இருக்கானே!” “கிழிச்சான்! நாங்களும் இல்லை. இன்னும் நல்லா அவுத்து விட்ட கழுதையா ஊரைச்சுத்துவான். நீ கொஞ்சம் கண்டிச்சு வைம்மா. காசைக் கண்ல காட்டாதே! புரியுதா?” அம்மாவுக்கே பிடிக்கலை. “சரி புறப்படுங்க நேரமாச்சு!” “அம்மா! நான் ஸ்டேஷன் வரைக்கும் வரட்டுமா?” “எதுக்கு! எங்களுக்குப் போகத் தெரியாதா? வாயை மூடிட்டு வீட்ல இரு!” இருவரும் பாட்டியிடம் சொல்லிக்கொண்டு போய் விட்டார்கள். வினய் கூடத்தில் படுத்து விட்டான். வெறுப்பாக இருந்தது. 'பணத்தைக் கண்ணில் காட்ட மாட்டார்கள்!’ நண்பர்கள் மத்தியில் வினய் அவமானப்படாத நாள் இல்லை!' மற்றவர்கள் வாங்கி தரும் டீ, டிபன் ஏற்றுக் கொள்ள பிடிக்காது. மறுக்கவம் முடியாது!' பதிலுக்கு ஒரு நாள்கூடச் செய்ய முடியாது. “பீஸை இவனிடம் தரமாட்டார்கள். அப்பா வந்து கட்டுவார். பஸ் பாஸ்! சகலத்துக்கும் வசதி! ஆனால் சில்லறை மட்டும் தேறாது. “பாட்டி! நான் சாயங்காலம் வெளியே போகணும்!” “எங்கப்பா?” “விக்ரம் அக்காவோட கல்யாண ரிசப்ஷன்!” “என்ன வாங்கிட்டு போக போறே!” “எதுவுமில்லை!” “வெறும் கையோடவா ரிசப்ஷன் போறே!” “ஆமாம் பாட்டி. எங்கிட்டப் பணம் இல்லையே! என்னை அப்பா, அம்மா நம்பறதில்லையே! அக்கானா பதறி ஓடறாங்க. என்னை மட்டும் ஏன் பாட்டி வெறுக்கறாங்க? நான் என்ன பாவம் செஞ்சேன்?” பாட்டிக்கு வேதனையாக இருந்தது. “நீ ஒரு பாவமும் செய்யலை கண்ணா! உன் மேல அவங்க ரெண்டு பேருக்கும் பாசமில்லைனு நினைச்சியா? உனக்குப் புரிஞ்சுகற பக்குவம் வரலை! நீ பெரிய மனுஷனா வரணும்னு அவங்க ஆசைப்படறாங்க ராஜா!” “ஆரம்ப ஆசைகளைப் பொசுக்கிட்டு, அப்புறம் அணைச்சுக்கறதால யாருக்கும் லாபம் பாட்டி?” “இந்தா! ஒரு கவர்ல இந்த அம்பது ரூபாயை போட்டு கல்யாணத்துல குடு! உன் செலவுக்கு இந்த அம்பதை வச்சுக்கோ!” “பாட்டீ!” “நான் கணக்கு சொல்லிக்கறேன். போ கண்ணா!” “பாட்டி! நீ மட்டும் இல்லைன்னா, இந்த வீட்டுக்கு வரவே எனக்கு புடிக்காது பாட்டி!” “அப்படியெல்லாம் சொல்லக் கூடாது!” மாலை ஐந்தரை மணிக்குக் குளித்தான். “பாட்டி எனக்கு தலை துவட்டி விடேன்!” “இரு வர்றேன்!” பாட்டி உள்ளே வந்தாள். “ச்சீ படவா! உடம்புல ஒட்டுத் துணி இல்லாமலா நிக்கறே?” “நீதானே பாட்டி! தப்பென்ன?” “பாட்டியானாலும் நான் பொம்பளை! உனக்குப் பதினேழு வயசு முடிஞ்சாச்சு! நீ குழந்தையில்லை!” “உனக்கு நான் குழந்தைதான் பாட்டி!” “சரி ஒக்காரு பனைமரம் மாதிரி வளர்ந்தாச்சு. இப்பவும் பாட்டிகிட்ட கொஞ்சிறியா?” பத்தே நிமிடங்களில் ட்ரஸ் மாற்றிக் கொண்டான். தலைவாரி பவுடர் போட்டு வெளியே வந்தான். “பாட்டி! நான் சரியா இருக்கேனா?” “என் கண்ணே பட்டுடும் போல இருக்கு. ஜாக்கிரதையா போயிட்டு வா! ஊரைச்சுத்தாதே! சீக்கிரம் வந்து சேரு!” “சரி பாட்டி!” வெளியே வந்து பஸ் பிடித்தான். கூட்டம் அவ்வளவாக இல்லை. அரைமணி நேரப் பயணம். நகரின் மையத்தில் இருந்தது அந்த மண்டபம். எதிரே பஸ் இறங்கினான். போக்குவரத்து உச்சத்தில் இருந்து
