கொஞ்சிப் பேசக் கூடாதா
தேவிபாலா
Publisher: Pocket Books
Summary
காலையில் எழுந்து குளித்து யாரிடமும் பேசாமல், டிபனும் சாப்பிடாமல் சௌந்தர்யா ஆபீசுக்குப் போய் விட்டாள்.இதை முகுந்தன் கவனித்தார்.“உன் பொண்ணு வேணும்னே கலாட்டா பண்றாளா? அவளா செய்யறாளா, இல்லைனா நீ தூண்டி விடறியா?”“ரொம்ப நல்லாருக்குங்க! அவதான் பிடிவாதக்காரி. இது அவ வாழ்க்கை! நீங்களாவது விட்டுப் புடிக்கக் கூடாதா? இது பழைய காலம் இல்லீங்க. எல்லாத்துக்கும் பெண்கள் தலையசைக்க மாட்டாங்க...”“என்ன சொல்ற?”“பிள்ளைங்க தோளுக்கு மேலே உசந்துட்டா தோழமைதான் மனசுல இருக்கணும். அதிகாரப்படுத்தினா எதையும் சாதிக்க முடியாது. அவமானத்துலதான் முடியும். ஒரு மனைவியா இருக்கறதால மனசுல பட்டதைச் சொல்லிட்டேன். அப்புறம் உங்க விருப்பம்!”சாந்தா உள்ளே போய் விட்டாள்.முகுந்தனுக்கு பிடிவாதம் உச்சந்தலை வரை இருந்தாலும் இப்போது நடப்பது கொஞ்சம் அதிகப்படியோ என்ற கலவரம் வந்தது.‘அவர்கள் வரும் நேரம் ஒருவேளை சௌந்தர்யா வீட்டுக்கு வராமலே இருந்து விட்டால்?’‘அல்லது வீட்டுக்கு வந்து ஏதாவதொரு வகையில் அவர்களை அவமானப்படுத்தி விட்டால்?’‘நான் தலை குனிய வேண்டி வரும்!இப்ப என்ன செய்யலாம்? அவர்கள் வருவதை ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி தடுக்க வேண்டும். தடுத்தால் என் மகளின் கொடி உயர்ந்து விடும்! அது எனக்கு நாளைக்கு பாதகமாக முடியும்!’‘வருவது வரட்டும்! சமாளிச்சுக்கலாம்!’அவரும் அலுவலகம் புறப்பட்டு விட்டார்.சாந்தா கலக்கத்துடன், என்ன நடக்குமோ என்ற பயத்துடன் வீட்டு வேலைகளில் மூழ்கிப் போனாள்.மாலை ஐந்து மணிக்கே முகுந்தன் வந்து விட்டார்.“சாந்தா! எல்லாம் பொருந்திப் போனா, இன்னிக்கே தாம்பூலத்தையும் மாத்திடலாம்!”“ஏன் இப்படி அவசரப்படறீங்க?”“அவசரம் இல்லைடி! நம்ம ஜோசியரைக் கலந்து பேசித்தான் இந்த முடிவுக்கு வந்தேன்!”“என்கிட்ட கோவப்படாதீங்க. ஆனா பேச வேண்டிய நேரத்துல பேசித்தான் ஆகணும். பெண் பார்க்க வர்றதையே விரும்பாத உங்க மகள் தாம்பூலம் மாத்தற வரைக்கும் போனா என்ன ஆவா? ஏங்க... வாழப் போறவ அவ! அதை அவ சந்தோஷமா வாழ வேண்டாமா? நம்ம கடமை முடிஞ்சு போச்சுன்னு அவளைக் கிணத்துல புடிச்சு தள்ளிர்றதா?”முகுந்தன் அவளை நெருங்கினார்.பளீரென அறைந்தார். சாந்தா நிலைகுலைந்தாள்.“நான் அவளுக்கு அப்பன்டி! என் மகளை, நான் கிணத்துல புடிச்சுத் தள்ளுவேனா? என்னடீ பேசற நீ? இப்படி ஒரு வார்த்தையைச் சொல்லணும்னா என்ன ஒரு திமிர் இருக்கணும் ஒனக்கு?”சாந்தா கண்ணீருடன் கன்னத்தைப் பிடித்தபடி நிமிர்ந்தாள்.“அடிங்க! இந்த வயசுல கூட மானங்கெட்டு உங்க அடிகளையும் வாங்கிட்டு, உங்களுக்கும் ஒரு தர்மபத்தினியா வாழறேன் பாருங்க! எனக்கொரு விடுதலையை கடவுள் நிரந்தரமா என்னிக்கு தரப் போறானோ?”அழுதபடி உள்ளே ஓடிவிட்டாள்.
