எப்பவும் உன் நிழலில்!
தேவிபாலா
Verlag: Pocket Books
Beschreibung
புஷ்பா உள்ளே நுழைந்தாள். அப்பா ஈஸிசேரில் சாய்ந்திருந்தார். அம்மா காலடியில் உட்கார்ந்திருந்தாள். “என்னப்பா பிரச்னை?” “நீ ட்ரஸ்லை மாத்திட்டு வாம்மா!” புஷ்பா போய் உடைகளை மாற்றி, ஒரு நைட்டியை அணிந்து கொண்டு வந்தாள். அப்பா எதிரே உட்கார்ந்தாள். “என்னப்பா?” “கல்யாணத்துக்கு ஒரு வாரமே இருக்கும் போது, இப்படி ஒரு சேதி வந்திருக்கேம்மா!” “என்ன சேதி?” “மாப்ளையை வேலையை விட்டு சஸ்பண்ட் பண்ணியிருக்காங்களாம்!” “என்னது சஸ்பென்ஷனா? எதுக்குப்பா?” “அவர் கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் கையாடியிருக்கார்னு நிர்வாகம் சந்தேகப்படுதாம். அந்தப் பணத்தைக் கட்ட நாளு நாள் அவகாசம் தந்திருக்காம். கட்டினாலும், வேலைக்கு இனி உத்தரவாதம் இல்லையாம்!” புஷ்பா மெளனமாக இருந்தாள். “எங்க ஆபிஸ்ல வேலை பாக்கற தசரதனோட தம்பி, நம்ம மாப்ளை ஆபிஸ்லதானே வேலை பாக்கறான். அவன் மூலமா வந்த தகவல் இது!” “இப்ப என்னங்க செய்ய முடியும்?” “அதான் எனக்கும் புரியலை! கல்யாணத்தை நிறுத்த முடியுமா?” “எதுக்குப்பா நிறுத்தணும்?” “என்னம்மா சொல்ற நீ? பணம் கையாடல்ங்கறது எத்தனைக் கேவலமான விஷயம். அதன் காரணமா உத்யோகம் பறிக்கப்படறது அதைவிட அசிங்கம்! அப்படிப்பட்ட ஒருத்தரா உனக்குப் புருஷனா வரணும்?” “இருங்கப்பா! உங்க நபர் மூலம் வந்த தகவல் இது. இல்லையா?” “தகவல் பொய் இல்லைம்மா! அப்பட்டமான நிஜம்!” “சரிப்பா! இருக்கட்டும். அவர் அஞ்சு இலக்க சம்பளம் வாங்கறார். வசதியாவும் இருக்காங்க. ரெண்டு பொண்ணுகளுக்கும் கல்யாணம் ஆயாச்சு! வீட்ல எல்லாம் இருக்கு. என்னப்பா குறை? அவரா பணத்துக்கு ஆசைப்பட்டு... நம்ப முடியலைப்பா!” “ஆசை இல்லைனு சொல்லாதே புஷ்பா! நம்மகிட்ட புடுங்கித் திங்கறாங்களே!” இது அம்மா! “சரிம்மா! நேத்திக்கு சஸ்பெண்ட் பண்ணியாச்சு! நமக்கு விஷயத்தைத் தெரிவிக்க வேண்டாமா?” “என்னப்பா பேசறீங்க? இது கேவலமான விஷயமில்லையா? இதை நமக்குத் தெரிவிக்க முடியுமா?” “புஷ்பா! நாளைக்கு நீதான் அவர் கூட வாழப் போறவள்! உனக்கு எல்லாம் தெரிஞ்சாகணும்!. நம்மகிட்ட இதை அவங்க மறைச்சிட்டுக் கல்யாணத்தை நடத்தினா, அதைவிட அயோக்கியத்தனம் வேற இல்லை!” புஷ்பா யோசிக்கத் தொடங்கினாள். 'அப்பா சொல்வதும் சரிதான்!' 'எங்களுக்குத் தெரிவிக்க வேண்டியது கடமை இல்லையா?' நிமிர்ந்து அப்பாவைப் பார்த்தாள். “என்னப்பா செய்யப் போறம்?'' “நேரா நான் சஞ்சய் வீட்டுக்குப் போறேன்! இதைப்பற்றிப் பேசறேன். இது நிஜமா இருந்தா, இந்தக் கல்யாணம் நடக்காது!” “என்னங்க! இத்தனை ஏற்பாடுகளையும் செஞ்சிட்டு... கல்யாணம் நின்னா, அது நல்லாருக்குமா?” “சரிம்மா! இதை இப்பப் பார்த்துட்டு, நாளைக்கு இந்தக் குழந்தையோட வாழ்க்கை பாழானா?” “நிச்சயிக்கப்பட்ட கல்யாணம் நின்னாலும் பாழாகும்!” “நீ இருடி! அவசரப்படக் கூடாது!” “அப்பா டயம் இருக்கு! பதட்டம் வேண்டாம். நீங்க அவங்க வீட்டுக்குப் போயிட்டு வந்திருங்க!” “ஆமாம்மா! நான் புறப்படறேன்!” அப்பா சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே வர, வாசலில் அந்த சின்ன மாருதி வந்து நின்றது. அதிலிருந்து இறங்கியது சஞ்சய்! மூன்று பேரும் ஆச்சர்யப் பட்டார்கள். அவனைக் கொஞ்சமும் எதிர்பார்க்கலை! சஞ்சய் தயக்கத்துடன் காலை வைத்தான் வாசல்படியில். “நான் உள்ளே வரலாமா?” “வாங்க!” அப்பா வரவேற்றார்.” “உக்காருங்க ஸார்!” அவன் உட்கார்ந்தான். “புஷ்பா! காபி கொண்டு வாம்மா!” “வேண்டாம். இப்ப எதுவும் வேண்டாம். நான் அவசரமாப் பேசணும்!” அம்மா புஷ்பாவைப் பார்த்தாள். “சொல்லுங்க மிஸ்டர் சஞ்சய்!” “எனக்கிப்ப தற்காலிகமா வேலை இல்லை! நான் நீக்கப்பட்டிருக்கேன்!” “எதுக்கு?' “ஒரு லட்ச ரூபாய் பணத்தை நான் கையாடல் பண்ணிட்டேன்னு குற்றச்சாட்டு!” “அப்படியா?” “ஆனா நான் அதைச் செய்யலை! பேங்க்லேருந்து சம்பள நாள்ள பல லட்சங்கள் கொண்டு வந்தது நான்தான். எப்பவும் கொண்டு வர்றதும் நான்தான்! தகுந்த செக்யூரிட்டியோட போயிட்டு, திருப்பி வருவோம்! இந்த முறையும் அப்படித்தான் வந்தேன். ஆனா ஒரு லட்ச ரூபாய் மிஸ்ஸிங்! எப்படீனே தெரியலை! பேங்க்ல கட்டுகளை எண்ணித்தான் வாங்கி பெட்டியில வச்சேன்! எப்படிப் போச்சுனு தெரியலை! என்னை நீங்க நம்பணும். சத்தியமா நான் அதைக் களவாடலை!” அவன் குரல் உடைந்திருந்தது.
