தேவி
ரமணிசந்திரன்
Editora: Publishdrive
Sinopse
தேவிக்குத் தனியாகச் சிந்திக்க வேண்டியிருந்தது!‘என் தோழியைப் பார்க்கப் போகிறேன்’ என்று அத்தையிடம் சொன்னாள். அத்தையின் பதிலை எதிர்பாராமலே விரைவாக வெளியே நடந்து விட்டாள். சற்றுத் தயங்கினால் கூட அத்தை தடுத்து விடுவாள் என்பது அவளுக்குத் தெரியும். இப்போதுகூட தேவிக்காக அவளுடைய தங்கை செல்வி அத்தையிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு இருப்பாள் என்பது தேவிக்கு செந்தாமரை தேவிக்கு நன்றாகத் தெரியும். ஆனால் என்ன செய்வது? சுயமான சிந்தனைக்கு அந்த வீட்டில் இடமே கிடையாதே, சிந்திக்காமல் எப்படிச் செயல்பட முடியும்?செந்தாமரை தேவி, வெண் தாமரைச் செல்வி. ஆகா நிரம்பவும் பொருத்தம் பார்த்துதான் அப்பாவும், அம்மாவும் பெயர் சூட்டி விட்டார்கள். தன் தோழிக்கு ஒரு கடிதம் எழுத வேண்டுமானால் உறைவாங்க இருபது பைசா கூட தேவியிடம் கிடையாது! செல்வியோ அத்தையின் அதட்டலில் எட்டாவதோடு படிப்பை நிறுத்தி விட்டாள். தேவியின் திடமும் துணிவும் அவளுக்கும் இருந்திருந்தால் அவளும் மேலே படித்திருப்பாள். ஆனால், அவள் வெறும் கோழை, முதுகெலும்பே கிடையாது.லேசான புருவச் சுளிப்புடன் தேவி மேலும் வேகமாக நடக்கலானாள்.வைகையின் வெண்மணல் பரப்பு விரிந்து அகன்று பரந்து கிடந்தது. “வா மகளே, உனக்கு என்ன வேதனை? என்னிடம் சொல்லி ஆறுதல் பெற்றுக் கொள்’ என்று ஓடையாகச் சென்ற ஆறும் மணலும் அழைப்பது போல் தேவிக்குத் தோன்றியது. சட்டென விழிகளில் நீர் மல்கியது. சுற்றுப்புறத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாதிருந்தால் அப்படியே குப்புற விழுந்து அழுதிருப்பாள்.அழுதிருப்பாளா! அதுவும் சந்தேகம்தான். தேவியைப் பொறுத்தவரையில் அழுவது கோழைத்தனம். அதிலும் மற்றவர் பார்க்க அழுவது என்றால் சே! அவமானம்! ஆத்திரத்துடன் தலையைச் சிலுப்பிக் கொண்டாள். நிமிர்ந்து நேராக நடந்தாள். தன் வழக்கமான இடத்தை அடைந்தாள். வைகை ஆற்றுப் பாலத்தின் ஒருபுறமாக பாலத்தைத் தாங்கும் கரையோரத் தூண் மீது சாய்ந்தபடி, அவள் அமர்ந்தாள். மெல்லிய நீண்ட விரல்கள் பட்டு மணலில் கோலமிட்டன. பூமணலின் பூக்கோலம், பாவையின் மனதிலோ எண்ணத்தின் கோலம்.எண்ணுவதற்கும் அதிகமாக ஒன்றும் இல்லை. சசி அக்கா சொல்லுவதை ஏற்பதா வேண்டாமா? இரண்டில் ஒன்று முடிவு செய்ய வேண்டும்.செல்விக்கும் அவளுக்கும் இந்தப் பிறவியில் ஒரு விடிவு காலம் வேண்டும் என்றால், சசி அக்கா சொல்வதை ஏற்பதுதான் வழி. ஆனால், குடும்பத்தை விட்டுப் பிரிந்தாக வேண்டும். பிரிய முடியாதபடி யாருக்கும் யாரிடமும் பற்றும் பாசமும் உருகி ஓடுவது ஒன்றும் இல்லைதான். ஆனால் செல்வியும் தேவியும் மட்டுமே குடும்பம் என்று ஆகிவிட வேண்டியதிருக்கும். ஒரு கவலை கலக்கம் என்றால், காப்பதற்குப் பெரியவர்கள் இருக்கமாட்டார்கள்.இப்போதும் கலக்கத்தை தீர்க்க யாருமே கிடையாது. என்றாலும் தனியே இருக்கும் பெண்கள் தானே என்று யாரும் வாலாட்ட முடியாது. அதுவும்தான் எப்படிச் சொல்வது? அத்தையின் அக்கா மகன் ஒரு தடியன் வந்திருக்கிறானே அவன் செல்வியைப் பார்த்து விசில் அடிப்பதும் கொச்சையாகப் பாடுவது... எல்லாம் அத்தை கொடுக்கும் இடம். செல்வியும் பயந்து ஓடுகிறாள். அந்த நாய் விரட்டுகிறது. திரும்பி நின்று ஒருதரம் முறைத்தால் கூடப் போதும். அதற்குக் கூடத் துணிவின்றி நடுங்கிக் கொண்டு கிடக்கிறாள் மக்கு!இந்தக் கஷ்டத்தில் இருந்து அவளை மீட்க எந்தப் பெரியவர்கள் இருக்கிறார்கள்? இந்தப் பெரியவர்களை நம்பி எட்டிப் பார்க்கும் விடிவு காலத்தை விட்டு விடுவதா?சிந்தனையில் மூழ்கிக் கிடந்த தேவிக்கு சுற்றுப்புறமே மறந்திருந்தது.‘சுளீர்’ என்று யாரையோ அறையும் ஓசையும் “அய்யோ சத்தியமாய் நான் திருடவில்லையே” என்று ஒரு சிறு பெண்ணின் கதறலும் வெகு அருகில் கேட்கவே திடுக்கிட்டு எழுந்தாள்.கதறிய குரல் அறிமுகமானது போலவும் தோன்றியது. சுற்று முற்றும் பார்த்தாள். பாலத் தூணின் மறுபுறம்தான் அங்கே விரைந்து ஓடினாள்
