கருநாகபுர கிராமம்
ரமணிசந்திரன்
Editora: Pocket Books
Sinopse
காங்கேய நாட்டு மன்னன் பிரகதத்தன், காட்டில் வேட்டையாடி முடித்துவிட்டு அந்தப் பெரிய ஆலமரத்தின் அடியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த குடிலுக்கு வந்து சேர்ந்தபோது மதிய வேளை.சூரியன் உச்சி வானத்தில் இருந்து சுட்டாலும் அந்தக் கோடையின் கடுமை, ஆலமரத்தின் அடர்த்தியான இலைகளால் வடிகட்டப்பட்டு விட்டதால் அவனுக்கு குளுமையாகவே இருந்தது. குடிலுக்கு வெளியே இருந்த பாறைத்திட்டின் மீது தாவி ஏறி உட்கார்ந்தான்.குடிலில் இருந்து வெளிப்பட்ட அமைச்சர் நல்லியக் கோடனார், மன்னன் பிரகதத்தனை நெருங்கினார்.“மன்னா...! உணவு அருந்தும் வேளை. நாம் மதிய உணவை முடித்துக் கொண்டு இரண்டரை நாழிகை நேரத்திற்குள் நாடு போய்ச் சேர வேண்டும். இன்று இரவு சீன வியாபாரிகள் வர்த்தகம் பற்றிப் பேச வந்துவிடுவார்கள். அதற்கு முன்பாக நாம் அரசவையைக் கூட்டி சில முன்னேற்பாடான விஷயங்களைப் பேசி முடிக்க வேண்டும்...”எனக்கு நினைவிருக்கிறது அமைச்சரே! அதைப் பற்றி உங்களிடம் நானே பேச வேண்டும் என்று இருந்தேன்...!”நல்லியக் கோடனார் தன்னுடைய முகத்தில் பெரியதொரு திகைப்பைக் காட்டினார்.“என்னிடம் எதைப்பற்றிப் பேச வேண்டும் மன்னா...?”“நமக்கு இந்த சீன வர்த்தகம் தேவையா...?”“ஏன் மன்னா...?”“சென்ற முறை அவர்கள் நம்மிடம் வந்து வியாபார பேச்சுவார்த்தை நடத்தும்போது, பேசிய உரையாடலில் நிறைய பொய் இருந்தது. கண்களில் ஒருவித தந்திரம் தெரிந்தது. எனக்கு மட்டும் இப்படி தோன்றவில்லை. என்னுடைய சகோதரர்கள் இளந்தத்தன், கொற்றன் ஆகியோர்க்கும் அதேபோன்ற எண்ணம் தோன்றியுள்ளது.”அமைச்சர் நல்லியக் கோடனார் மன்னன் பிரகதத்தனை ஏறிட்டார்.“மன்னா...! உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஏனென்றால் நீங்களும் சரி, உங்களுடைய சகோதரர்களும் சரி, பின்னால் ஏற்படும் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் திறன் கொண்டவர்கள். இந்த சீனர்களின் வர்த்தக விஷயத்திலும் அது சரியாகவே இருக்கும். இன்றைக்கு அவர்களோடு நடத்தப் போகும் வணிக வர்த்தகப் பேச்சில் நாம் பட்டும் படாமல் பேசுவோம். நாம் பேசும் பேச்சிலிருந்தே அவர்கள் புரிந்துகொண்டு நம்மைவிட்டு விலகிவிடுவார்கள்.பிரகதத்தன் மேற்கொண்டு பேசும் முன்பு பெரிய மரத்திற்கு பின்புறம் இருந்து ஏதோ சத்தம் கேட்டது.“அது என்ன சத்தம் அமைச்சரே?”“குதிரையின் குளம்பொலி போல் தெரிகிறது மன்னா!”இருவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த மரத்தின் பின்னாலிருந்து பால் போன்ற வெண்மை நிறத்தில் நல்ல உயரத்தில் குதிரையொன்று தெரிய, அதன் மேல் கரிய நிறத்தோடு திடகாத்திரமான உடம்போடு ஒருவன் உட்கார்ந்திருந்தான்மன்னன் பிரகதத்தன் அந்தக் குதிரையைப் பார்த்து கண்ணிமைக்க மறந்தான்.“அமைச்சரே!”“மன்னா!”“குதிரையை பார்த்தீங்களா... எவ்வளவு அழகாய் இருக்கிறது?”“ஆம் மன்னா...! இதுபோன்ற தும்பைப் பூ நிறத்தில் இப்படியொரு குதிரையை நான் பார்ப்பது இதுதான் முதல் தடவை”“எனக்கு அந்தக் குதிரையைப் பிடித்து இருக்கிறது அமைச்சரே! இப்படியொரு குதிரையில் ஏறி அமரவும், பயணிக்கவும் ஒருவர் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் குதிரையின் மேல் உட்கார்ந்திருப்பவன் அந்தப் பெருமைக்கு ஏற்றவன்போல் தெரியவில்லையே? அவன் யார் என்பதை விசாரியுங்கள்.”“இதோ... மன்னா.”சொன்ன அமைச்சர் அந்த விநாடியே வேகமாய் நகர்ந்து குதிரையை நோக்கிப் போனார்.
