கானமழை நீ எனக்கு!
ரமணிசந்திரன்
Editorial: Publishdrive
Sinopsis
அழகிய மெல்லிய விரல்கள், மடிமீது சாத்தியிருந்த வீணையின் தந்திகளைத் தன் போக்கில் மெல்ல மீட்ட, அதில் எழுந்த இனிய ரீங்காரம் அறையை நிரப்ப, யோசனையில் ஆழ்ந்திருந்தாள் பாரதி.சிந்தனையில் சுற்றுப்புறம் மறந்து இலக்கற்று வெளியை வெறித்தபடி அமர்ந்திருந்த நிலையிலும் மகளின் அழகை ரசித்தவாறு சற்றுநேரம் அறை வாயிலிலேயே நின்றாள் சரஸ்வதி.தம்பூரா போலச் சும்மா மீட்டுவது தவிர, மகளின் மோனநிலை கலைவதாக இல்லை என்று நிச்சயப்பட்டு விடவும் பாரதியின் அருகே சென்று, “என்னடா பாரதி, இன்றைய கச்சேரிக்கு வாசிக்க வேண்டிய எல்லாம் வரிசைப்படுத்திக் கொண்டு விட்டாயா? போன வாரக்கச்சேரியில் தோடி வர்ணம் வாசித்தாய், மறக்கவில்லைதானே. இன்றைக்கு... சங்கராபரணத்தில் ‘கருணை செய்...திட... வாசிக்கிறாயா? அடுத்து...” என்றவள் மகள் சும்மா உச்சுக்கொட்டவும் வியந்து, “என்னம்மா?” என்று விசாரித்தாள்.“ஒன்...றுமில்லயம்மா” என்று அலுப்புடன் கூறி வீணையை நகர்த்தி வைத்தாள் பாரதி.“என்னம்மா, சாதகம் செய்யவில்லை?”“என்ன சாதகம் செய்து என்ன, அம்மா? கச்சேரிக்குக் கச்சேரி வித்தியாசமாகத் தெரியவேண்டும் என்று கடவுள் வாழ்த்திலிருந்து மங்களம் வரை மாற்றித் திட்டமிட்டு, ஸ்வர சுத்தமாகச் சாதகம் செய்து கஷ்டப்பட்டு வாசிக்கிறோமே, யாராவது முழு ஈடுபாட்டுடன் கேட்கிறார்களா? சபாக்களிலாவது பரவாயில்லை, பத்துக்கு இரண்டு பேராவது ரசித்துக் கேட்கிறார்கள். இந்த மாதிரித் தனியார் நிகழ்ச்சிகள் என்றால் எனக்கு வெறுப்பாக இருக்கிறதம்மா” என்று உரைத்த வண்ணம் வீணையை உறையிலிட்டு, கயிறுகளைக் கவனத்துடன் கட்டினாள் பாரதி பேச்சை நிறுத்தி இதழ்களை இறுக மூடிக் கொண்ட போதும், மகளின் கண்களில் கோபம் குமுறுவதைக் கண்டு “பாரதி, உன்னுடைய கலையே வேறுவிதம். இதே. நாட்டியம் என்றால் கவர்ச்சி என்கிற பெயரில் ஆபாசமாக ஆடலாம். பாட்டில்கூட கண்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி, அதற்கேற்ப உடலை ஆட்டிப் பாடலாம். ஆனால் இது... இதில் இதெல்லாம் முடியாது. ஆனால் இது தெய்வீகமான கலை அம்மா. வீணையைப் பார்க்கும் போதே கலைமகளின் நினைவுதானே வருகிறது. மட்டரக ‘கிக்’ வேண்டும் என்பவர்கள் வீணைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யமாட்டார்கள். அதுவும் இவ்வளவு பணம் கொடுத்து தரமான ஓர் இசை விருந்தைத் தானே ரசிக்கும் ஆவலும், தான் ஏற்பாடு செய்யும் விழாவுக்கு வருகிறவர்கள் ரசிப்பார்கள் என்கிற நம்பிக்கையும் இல்லாதவர்கள் இந்தக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்வார்களா? சொல்லு. அதனால் ஒட்டு மொத்தமாய் ஒருவரும் ரசிப்பது இல்லை என்று ஒதுக்கக் கூடாதம்மா” என்று இதமான குரலில் எடுத்துரைத்தார் கங்காதரன்.சற்று யோசித்துவிட்டு, “ஒரேயடியாக அப்படியும் சொல்லி விட முடியாது அப்பா. நீங்களே சொன்னது போல வீணையில் பெரிய ‘ஆர்டிஸ்ட்’டின் கச்சேரி வைத்தேன் என்று ஜம்பம் அடிக்கக்கூட என் கச்சேரியை வைக்கலாமே!” என்றாள் பாரதி.மீண்டும் தாயும் தந்தையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதைக் கவனித்த மகள் சட்டென இளகிப் போனாள். அவளுக்கு எப்போதுமே அவளுடைய பெற்றோரிடம் இது பிடிக்கும். எப்போதும் ஒருவருக்கொருவர் இசைந்து நடப்பதும், திடுமெனப் பிரச்சினைகள் எழும்போதும் ஒருவர் முகத்திலிருந்து அவர் கருத்தை அறிந்து அதற்கேற்ப அடுத்தவர் செயல்படுவதும் காண, கவனிக்க அவளுக்கு மிகவும் பிடிக்கும்.ஒவ்வொரு சமயம் உடன் பயின்ற தோழிகள், ‘என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பெரீ...ய்ய சண்டை’ என்று கூறும்போது அவளுக்கு ஆச்சரியமாக இருக்கும். அப்பாவும் அம்மாவும் எப்படிச் சண்டை போடுவார்கள்?வளரவளர, உலக விவரம் புரியத் தொடங்கிய பிறகு பெற்றோரைப் பற்றிப் பெருமையாக உணர்ந்தாள். அம்மாவுக்கு அமைந்தது போல ஒத்த கருத்து உடைய கணவன் அவளுக்கும் கிடைத்தால்... என்றோர் எண்ணமும் தோன்றியதுண்டு.
