இனி வரும் உதயம்
ரமணிசந்திரன்
Editorial: Publishdrive
Sinopsis
“அம்...ம்மா!” என்று இருகைகளாலும் காதுகளைப் பொத்திக் கொண்டாள் நித்யா. நித்யகல்யாணி.அவள் தங்கியிருந்த அந்த வேலை பார்க்கும் பெண்களுக்கான விடுதியில், அவளது அடுத்த அறைக்காரி தன் ஆட்டத்தைத் தொடங்கிவிட்டாள். இன்னும் இரண்டு மூன்று பேர் விரைவிலேயே வந்து சேர்ந்து கொள்ளுவார்கள்.இவர்களால் எப்படி முடிகிறது?வேலை முடிந்து திரும்பி வந்தால் டிபன் சாப்பிடப் போகக்கூடத் தோன்றாமல் அப்படியே விழுந்து கிடக்கத்தானே அவளுக்குத் தோன்றுகிறது; இவர்கள் மட்டும் இப்படித் துள்ளுகிறார்களே! ஒருவேளை மனதின் சோர்வுதான் உடலையும் பாதிக்கிறதோ? விரைவிலேயே செவிப்பறை கிழிந்து விடும் அளவுக்கு உச்சத் தொனியை எட்டியது டிஸ்கோ சங்கீதம். சகித்துக் கொள்ளவும் முடியாமல், பயில்வான் போல கட்டுமஸ்தாக இருந்த பக்கத்து அறைக்காரியோடு மோதும் துணிவும் இல்லாமல் அவளால் சொந்தமாக முடிகிற காரியமாய்த் தன் கைகளால் தன் காதுகளை இறுகப் பொத்திக் கொண்டாள்.ஆனால் எவ்வளவு நேரம் அப்படி இருக்க முடியும்? காது மடல்கள் வலிக்கத் தொடங்கவே, எழுந்து சென்று அறைக்கதவோடு சன்னல்களையும் மூடிவிட்டு வந்து கட்டிலில் அமர்ந்தாள்.அப்போதும் சத்தம்தான். ஆனால் நல்ல வேளையாக முன்னைப் போலக் காதைத் துளைக்கவில்லை.உதட்டைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவளுக்கு ஊரின் நடு நாயகமாய் இருந்த பெரிய வீடு நினைவு வந்தது. வீட்டைச் சுற்றிலும் மாவும் பலாவுமாகப் பெரிய பெரிய மரங்களோடு - பெரிய பூந்தோட்டமும், மல்லிகை, இருவாட்சியின் மனதை மயக்கும் வாசனையும், அவ்வப்போது ஊர்க் கோடியில் இருந்த கோவிலில் இருந்து காற்றில் மிதந்து வரும் நாதசுர ஓசையும்..கூடவே திருச்சியில் ஒரே ஒரு மாதத்திற்கென்று வாடகைக்கு எடுத்து, ஒரே ஒரு வாரம் மட்டும் தங்கியிருந்த ஒரு சின்ன வீடும்...சின்ன வீடேதானோ?ச்சு...எப்படி இருந்தால் என்ன?எல்லாம் கனவாகி முடிந்துவிட்ட கடந்த காலம். உண்டு முடித்ததும் நாவிலிருந்து மறைந்துவிடும் இனிப்பும், உறைப்புமான சுவைகள்போல, இன்பம் துன்பம் எல்லாம் மறைந்து வெறும் பொறுமையை மட்டும் அவளுக்குத் துணையாகவிட்டுச் சென்றுவிட்ட கடந்த காலம்!நில்லாமல் சுழலும் இயந்திரம் போல் அதற்கும் பழக்கப்பட்டுப் போய் விட்ட இந்த வாழ்க்கையில் இன்று மட்டும் ஏன் இந்த சலிப்பு?அல்லது பழக்கப்பட்டு விட்டதாக எண்ணியதுதான் தவறோ?தவறேதான்.தெருவில் போகும்போதும் வரும் போதும் அங்கங்கே அந்த சுருக் வலிகள் இன்று வரை நிற்கவே இல்லையே!அன்னியராய் நின்று ஆராய்ந்து சொல்வது என்றால் முன்பு கத்தியால் குத்துவதுபோல இருந்த வேதனை இப்போது குண்டூசியில் குத்தும் அளவுக்குக் குறைந்திருப்பதாகக் கூறலாம். மற்றபடி வலி இல்லாத நாள் என்று ஒரு நாளுமே இல்லை.ஒரு வேளை... இன்னும் கொஞ்ச... நிறையக் காலம் கழிந்தால்... தடதடவென்று கதவை ஒங்கித் தட்டும் ஒசையில் திடுக்குற்று, சிந்தனை கலைந்து எழுந்தாள் நித்யா.பொறுமை இழந்த அவசரத் தட்டுகள் சற்று அதிகப்படி நேரமாகவே கதவு தட்டப்பட்டு இருக்க வேண்டும் என்பதை, உணர்ந்து ஓடிச் சென்று கதவைத் திறந்தாள்.“அட என்னாம்மா, எப்பப் பார்த்தாலும் கதவைப் பூட்டிகினு நீ என்ன தவம் பண்றியா, ஜெபம் செயறியா? வா, உனுக்கு டெலிஃபோனு வந்துக்கிதாம். அழச்சாரச் சொன்னாங்க. வா.” என்று நீட்டினாள் அந்தம்மா
