எனக்காகவே நீ…
ரமணிசந்திரன்
Editora: Publishdrive
Sinopse
பூரண நிலவின் தண்ணொளியில், சிலுசிலுத்த தென்றல் காற்றினால், பரந்து விரிந்த கடல்பரப்பில் எழுந்த எண்ணிலடங்காத சின்னஞ்சிறு அலைகள் வெள்ளிப்பாளங்களாக மின்னுவதைப் பார்க்கப் பார்க்கப் பரவசமாக இருந்தது திவ்யாவுக்கு.“ஆகா! என்ன அழகு!” என்று ரசனையோடு அவள் ‘இயம்ப, “ஆமாமாம்!” என்று அதை அப்படியே ஆமோதித்தான் அவள் அருகே அமர்ந்திருந்த மனோரஞ்சன்.“தனக்குத்தான் - சந்திரன் என்று வானம் பெருமைப்பட்டுக் கொண்டு இருந்திருக்கும், இல்லையா? ஆனால் கடலில் இத்தனை லட்சம்... கோடிக் கணக்காய் வெண்ணிலவுகள் மிதப்பதைப் பார்க்கும் போது... ரஞ்சன், இதைப் பார்க்கவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இல்லையா?” என்று கேட்டாள் அவள்.“ஆமாமாம்” நிச்சயம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்தான் என்று அவளது பக்கவாட்டுத் தோற்றத்தில் ஓரக்கண் பார்வையைப் பதித்து ஒத்துப் பாடினான் அவன்.“இயற்கையாகப் பார்த்து, மனம் உவந்து அளிக்கும் இந்த அழகை ரசித்து அனுபவியாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறவர்களை நினைத்தால் கோபம்தான் வருகிறது...”அவள் பேசுகையிலேயே, “அப்படி ரசிக்கவென்று எந்தக் கழுதையாவது வந்து நின்றால் உதைதான் கிடைக்கும்” என்று அவன் முணுமுணுத்தான்.“என்ன சொன்னீர்கள்? சரியாகக் கேட்கவில்...” என்று திரும்பிய திவ்யா, மனோரஞ்சனின் பார்வை கடலை விடுத்து அவளிடம் பதிந்திருப்பதைக் கண்டதும் கலீரென்று நகைத்து விட்டு “உதைவிழும்.” என்று சுட்டுவிரலால் ‘பத்திரம்’ காட்டினாள்“முதலில் உனக்கு உதை விழாமல் பார்த்துக் கொள். மணி என்ன தெரியுமா? பதினொன்று. இப்போதே கிளம்பினால் கூட உன் வீடு போய்ச்சேர மணி பதினொன்றரை ஆகிவிடும். இவ்... வளவு நேரம் எங்கே சுற்றினாய் என்று உன் பெரியப்பா பெல்ட்டால்... உன்னை விளாசப் போகிறார்.”“மாட்டவே மாட்டார். என் பெரியப்பா எவ்வளவு நல்லவர் தெரியுமா?” என்றாள் திவ்யா பெருமையாக.“அல்லது உன் பெரியம்மா. அவர்கள் கரண்டிக் காம்பைக் காய வைத்து சூடு இழுக்கப் போகிறார்கள், பார்.” என்று மிரட்டினான் மனோரஞ்சன்.“சீச்சீ.” என்றாள் திவ்யா. “விளையாட்டுக்குக்கூட என் பெரியப்பா, பெரியம்மா பற்றி இப்படி சொல்லாதீர்கள் ரஞ்சன். அவர்கள் இரண்டு பேருக்குமே நான் என்றால் உயிர். பிரியம் மட்டுமில்லாமல் என்னிடம் முழு நம்பிக்கையும் உண்டு. திவ்யா மனமறிந்து தப்பு செய்யமாட்டாள் என்பார்கள். பிரபாகூட எப்போதும் குறைப்படுவாள். “அப்பா, அம்மா இரண்டு பேருக்கும் உன்னிடம்தான் உயிர். என்னைக் கண்டாலே கரித்துக் கொட்டுகிறார்களே, மெய்யாகவே என்னைப் பெற்றார்களா அல்லது குப்பைத் தொட்டியிலிருந்து எடுத்து வளர்க்கிறார்களா?” என்று பொருமுவாள். இதைப் பெரியப்பா, பெரியம்மாவிடமே கேட்டுவிட்டு அதற்கு வேறு வாங்கிக்கட்டிக் கொள்ளுவாள்... எனக்குக் கூடச் சில சமயங்களில் ஒருமாதிரி இருக்கும். என்னைக் ‘கண்ணா’ என்று கொஞ்சுகிறவர்கள், அவளை இந்தக் கழுதை எங்கே போயிற்று?” என்று கேட்பார்களா...“போதும் போதும்” என்று கெஞ்சாக் குறையாக திவ்யாவின் உணர்ச்சிவசப்பட்ட பேச்சை இடைமறித்தான் மனோரஞ்சன். “உன் பெரியப்பாவும் பெரியம்மாவும் மிகவும் நல்லவர்கள்தான், திவ்யா. ஆனால் அதற்காக அவர்களது புராணத்தை நான் எத்தனை தடவை கேட்டுக் கொண்டிருக்க முடியும் சொல்லு? சொல்ல உனக்கு அலுக்காமல் இருக்கலாம். ஆனால் கேட்கிற எனக்குக் கொஞ்சம் போ... ரடித்துப் போய்விட்டதே...” என்று வேடிக்கை போலப் பேசியவன், அவள் அதை விளையாட்டாக எண்ணவில்லை என்பதை உணர்ந்து பேச்சை மாற்றினான்
