கனவுகள் தந்தாய் எனக்கு
கிரிஸ் ப்ரெண்டிஸ்
Editorial: Pocket Books
Sinopsis
தொட்டிலில் வைத்திருந்த ரோஜா செடி அழகாக பூத்திருப்பதை ரசிக்கிறாள். சிவந்த நிறத்தில் ஒற்றை ரோஜா. பார்க்க எவ்வளவு அழகு. கடவுள் ஒவ்வொன்றையும் ரசித்து தான் படைத்திருக்கிறார்.ஓடும் நதி, பாயும் சிற்றோடை,தென்றல் காற்றில் அசையும் கிளைகள்,வானுயர்ந்த மலைகள், மனதின் ரசனை... அவளுக்குள் சிலிர்ப்பை தோற்றுவிக்கிறது.கண்முன் தினகர் வந்து நிற்கிறான்.குழந்தையாய் கைபிடித்து நின்றவன், இதோ... அரும்பு மீசை முகத்தில் தெரிய, வெட்கச் சிரிப்புடன் விலகி நிற்கிறான். வாசுதேவன் அவளை நன்றாக வைத்திருந்தாலும், தன் கனவுகளில் ஏதோவொன்று சிதைந்து போன உணர்வு அவள் மனதில் இன்றும் இருக்கிறது.ரயில் பயணம், அவள் விரும்பும் ஒன்று.எதிர் காற்றில் முகம் குளிர நகர்ந்து செல்லும் ரயிலின் வேகத்திற்கு எதிராக கண்ணெதிரே வேகமாய் ஓடும் மரங்கள். முகத்தில் விழும் முடிக்கற்றைகளை ஒதுக்க கூட தோன்றாமல் லயித்துப் போவாள்.“என்ன மாலதி... சின்ன குழந்தை மாதிரி ஜன்னலில் தலையை சாய்த்து வேடிக்கைப் பார்த்துட்டு வரே, ஒழுங்காக உட்காரு...”“இங்கே பாருங்களேன். ரயிலின் வேகத்தில் மரங்கள் எதிர் திசையில் ஓடும் அழகு பார்க்கவே நல்லாயிருக்கு.”அவளை அதிசயமாக பார்க்கிறான் வாசுதேவன்.“நீ என்ன பைத்தியமா... இதை போய் பெரிசா பேசறே. டிரெயின் வேகமாக போகும்போது அப்படித்தான் இருக்கும். புடவையை ஒழுங்காக போட்டுக்கிட்டு உட்காரு...”அவள் உற்சாகம் அந்த நிமிஷமே வடிந்து போகும்.“பார்க்குக்கு போகலாங்க...”“எதுக்கு... அங்கே போய் வேடிக்கை பார்த்துட்டு பொம்மை மாதிரி ஒரு இடத்தில் உட்கார்றதுக்கு... வீட்டு வாசலில் உட்காரலாம்.”வாழ்க்கையில் எதையும் ரசிக்க வேண்டும் என்ற ஆர்வமில்லாதவன் தன் கணவன் என்று உணர்ந்து கொண்டபோது...அவனுக்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டாள் மாலதி.“அம்மா... இங்கே என்ன செய்யறே?”“ஸ்கூல் விட்டு வந்தாச்சா தினகர், இந்த ரோஜா பாரேன். எவ்வளவு அழகாயிருக்கு.”“ஆமாம்மா... உன்னை மாதிரி...”கண்களில் பரிவு தோன்ற மகனை பார்க்கிறாள்.“முகம், கை, கால் அலம்பிட்டு வா தினகர். சாப்பிட பிஸ்கட்டும், டீயும் எடுத்துட்டு வரேன். இப்படி உட்காரு.”“ஐயோ அப்பா வந்தா அவ்வளவுதான்.நான் என் ரூமில் படிச்சுட்டு இருக்கேன். அங்கே கொண்டு வாம்மா...”ஒரே பிள்ளை தினகரன். அவனிடம் பாசத்தைக் காட்டியதைவிட, கண்டிப்பை காண்பித்ததுதான் அதிகம். அப்பா என்றால் சற்று ஒதுங்கியேதான் இருப்பான்.ஒருநாள் -“ஏங்க எப்போதும் தினகரன்கிட்டே சிடுசிடுன்னு பேசறீங்க. அவன் நம்ப பிள்ளைங்க. படிப்பு, படிப்புன்னு அவனை வாட்டி எடுக்கறீங்களே...”“உனக்கு தெரியாது மாலதி. அந்த காலத்தில் எனக்கு வசதி, வாய்ப்புகள் இல்லை. சரியான படிப்பு இல்லை. இன்னைக்கு பாரு, என் ஆசைகள் எதையாவது நிறைவேத்திக்க முடியுதா? அந்த நிலைமை என் பிள்ளைக்குவரக்கூடாதுன்னு நான் நினைப்பது தவறில்லையே. தினகரன் விஷயத்தில் நீ தலையிடாதே மாலதி. என் பிள்ளையை எப்படி வளர்க்கணும், எப்ப அன்பையும், பாசத்தையும் காட்டணும்னு எனக்குத் தெரியும்.”அவள் வாயை அடைத்தார் வாசுதேவன். அதற்குப்பிறகு மகனுக்காக பரிந்து பேசுவதை நிறுத்திக் கொண்டாள். தினகரனும் அவரை புரிந்து நடந்து கொண்டான். அம்மாவிடம் மட்டும், அப்பா ஏன்ம்மா இப்படி இருக்காரு... சலித்து கொள்வான்
