நான் பேச நினைப்பதெல்லாம்
ஆர்.சுமதி
Editora: Pocket Books
Sinopse
மாதவனை நினைத்தால் சமத்துவத்திற்கு ஆச்சரியமாகவும் சிரிப்பாகவும் இருந்தது. ‘வேடிக்கையான மனிதன்’ என்று நினைத்துக் கொண்டான்.பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தபோதும் -மாதவனுடைய கண்கள் பேருந்திற்காகக் காத்திருக்கும் பெண்களின் பக்கமே இருந்தது. பக்கத்தில் நண்பன் இருக்கிறானே என்றுகூட ஞாபகம் இல்லாதவனாய் ‘ஜொள்ளு’ விட்டுக் கொண்டிருந்தான்.ஐந்து மணிக்கான பரபரப்பு கொஞ்சம் சோர்வு கலந்து இருந்தது. மாலை நேரக் கடைகள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.சாலையோரம் போட்டு விற்கப்பட்டிருந்த பழைய புத்தகக் கடையை நோக்கி சென்றான் சமத்துவம். புத்தகங்களைப் புரட்டிப் புரட்டித் தேடினான்.அவனைத் திரும்பிப் பார்த்த மாதவன் ‘இவனைத் திருத்தவே முடியாது’ என்று நினைத்துக் கொண்டான். இரண்டு கவிதைப் புத்தகங்களை வாங்கினான். ஆரம்பகால கவிஞர்களின் கவிதைப் புத்தகங்கள் அவை. அந்த புதுக்கவிஞர்களின் புத்தம் புது எழுத்துக்களை ஆவலுடன் பிரித்தான்.“டேய்... பஸ் வருது வாடா...” திடீரென மாதவனின் குரல் வேகமாய் ஒலிக்க அவசரமாக புத்தகத்தை மூடிவிட்டு ஓடி வந்தான்.பேருந்து குப்பை வண்டியைப் போல் மக்களை அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து நின்றது. படிகளில் திராட்சைக் கொத்தைப் போல் கூட்டம் தொங்கியது.உள்ளே எத்தனை பேர் மூச்சுத்திணறி செத்துப் போவார்களோ என தோன்றும்படியான ஒரு தோற்றத்தில் வந்து நின்றது பேருந்து. ஓட்டுநர் மட்டுமே தாராளமாக அமர்ந்திருந்தார்.“ஏறுடா.” மாதவன் துரிதப்படுத்தினான்.பேருந்து கிளம்பியது. வெளிக்காற்று உள்ளே நுழைய இடம் இல்லை. புழுக்கம் அதிகரிக்க வியர்வை நெடி மூக்கை நெருட மிகவும் தவித்தான் சமத்துவம். மாதவன், நெரிசலைப் பற்றியோ, வியர்வை நெடியைப் பற்றியோ துளியும் கவலைப்படாமல் ஒரு குழுவாய் நின்றிருந்த கல்லூரிப் பெண்களையே வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் விதவிதமான தங்களுடைய காதணிகள் ஊசலாட கொஞ்சம் கூட சோர்வின்றி சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். ஒரு அழகிய மாய உலகில் இருப்பதைப் போல் மாதவன் மயக்கமான ஒரு போதையில் நின்றான்.“மச்சான்... பாருடா... என்ன அழகு? என்ன அழகு?”“மீனாட்சியை விடவா?” என்ற சமத்துவத்தை முறைத்தான் மாதவன்.“எங்கே யாரை ஞாபகப்படுத்தணுமின்னு உனக்கு விவஸ்தையே கிடையாதுடா. மூடைக் கெடுத்துட்டியேடா பாவி...” என காலை வைத்து மிதித்தான்.அவன் காலை வைத்து மிதித்த அதே நேரம்தான் பேருந்தில் இருந்த அனைவரது காதில் விழுந்தது அந்த கணீரென்ற குரல்,“டேய்... நில்லுடா...”அனைவரும் குரல் வந்த இடத்தைத் திரும்பிப் பார்த்தனர். சமத்துவமும் பார்த்தான். அவனுக்குப் பின்னால் நாலைந்து ஆடவர்களுக்குப் பின்னால்...அவள் ஒருவனின் சட்டையை தன் இரு கைகளாலும் இறுகப் பற்றியிருந்தாள.ஒரு கணம் அனைவரும் அந்தக் காட்சியைப் பார்த்து திடுக்கிட்டனர். சமத்துவத்திற்கு தன்னையே அவள் அப்படிப் பிடித்திருப்பதைப் போல் தூக்கிவாரிப் போட்டது. மாதவன் வாயைப் பிளந்தபடி அந்தக் காட்சியைப் பார்த்தான்
