மயக்கத்திற்குரிய மந்திரமே!
ஆர்.சுமதி
Publisher: Pocket Books
Summary
ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக வரும் என அறிவிப்பு வந்தது.“என்னடா கபி... ஒரு மணி நேரம் லேட்டுங்கறாங்க?” இளங்கோ கவலையாகக் கேட்க,“வரட்டுமே... இப்ப என்ன? பள்ளிக்கூடம், காலேஜ், ஆபீசுன்னு எத்தனையோ தடவை நாம லேட்டா போயிருக்கோம். ஆனா மத்தவங்க லேட் பண்ணினா எரிச்சல் வருது. அதுல இந்த ட்ரெயினும் ஒண்ணு “ என்றான் கபிலன்.“சரி... உனக்குப் படிக்க ஏதாவது புத்தகம் வாங்கிட்டு வரட்டா.”“வாங்கிட்டு வா.”இளங்கோ பக்கத்திலிருந்த புத்தகக் கடையிலிருந்து அவனுக்கு வேண்டிய வார, மாத பத்திரிக்கைகளை வாங்கிக் கொண்டு வந்தான்.அவற்றை வாங்கிப் பையில் வைத்துவிட்டு ஒரு பத்திரிகையை மட்டும் பிரித்தவாறே கபிலன், “அண்ணா... அம்மா ரொம்ப கவலைப்படறாங்க” என்றான்.“அதான் தெரிஞ்ச விஷயமாச்சே! நீ பக்கத்திலேயே இருக்கணும்னு ஆசைப்படறாங்க. ஒரு ஆறு மாசம் அங்க இருந்துட்டு திரும்ப சென்னைக்கே வர முயற்சி பண்ணு.”“அம்மா என் பிரிவுக்காக வருத்தப்படறது உண்மைதான். அதை விட அதிகமா உன்னை நினைச்சு வருத்தப்படுறாங்க.”இளங்கோ அமைதியாக இருந்தான்.“நீ இப்படிப் பிடிவாதமா கல்யாணமே வேண்டாம்னு இருந்தா எப்படி? நேத்து நீ அப்படி நடந்துக்கிட்டிருக்கக் கூடாது.இளங்கோவின் முகம் மாறியது. முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.நேற்று நடந்த சம்பவம் கண் முன்னால் ஓடியது.அவன் அலுவலகத்திலிருந்து வந்தபோது தரகர் கிருஷ்ணராஜன் கூடத்தில் அமர்ந்து அப்பாவுடன் பேசி கொண்டிருந்தார்.அப்பா வரச் சொல்லியிருப்பார் போலும்.“பெரியவனுக்கு நல்ல இடமா பாருங்க. எப்படியும் இந்த வருஷத்துக்குள்ள அவனுடைய கல்யாணத்தை முடிச்சுடணும். சின்னப் பிள்ளைக்கும் வயசாகுது. அவனுக்கும் அடுத்த வருஷத்துல முடிச்சுடணும்.”“சந்தோஷமா பார்த்துடலாம். சின்னப் பிள்ளை கூட வெளிநாட்லயிருந்து வந்துட்ட மாதிரி தெரியுது. நேத்து வழியில் பார்த்தேன்.”“ஆமா! கம்பெனி விஷயமா வெளிநாடு போயிருந்தான். ரெண்டு வருஷ ட்ரெயினிங்... இப்போ நாக்பூர்ல இருக்கற அவனோட கம்பெனியோட பிராஞ்சுக்கு ப்ரமோஷன்ல போறான்.”“அப்படியா சந்தோஷம்... நீங்க ஒண்ணும் கவலைப் படாதீங்க. ரெண்டு பிள்ளைகளுக்குமே பொண்ணு பார்த்துடறேன். ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணா நடத்திடலாம்.”கணேசன் சிரித்தார்.“சின்னவன் கபிலனுக்கு சொந்தத்திலேயே பொண்ணு இருக்கு. என் அக்கா பொண்ணு. அந்தப் பொண்னை சீக்கிரம் இந்த வீட்டுக்கு அனுப்பிடணும்னு நினைக்கிறாங்க. பெரியவனுக்கு கல்யாணம் முடிச்சாத்தானே சின்னவனுக்கு பண்ண முடியும்.”“சரிதான்.”அம்சவேணி காபியும் சிற்றுண்டியும் கொண்டு வந்து வைத்தாள்.“அம்சா... இளங்கோவோட ஜாதகத்தை கொண்டு வா.”உள்ளே சென்ற அம்சவேணி, சில நிமிடங்களில் ஜாதகத்துடன் வந்தாள்.“இந்தாங்க. கையோட ஜாதகத்தையும் கொண்டு போங்க. எந்த வரனாயிருந்தாலும் முதல்ல பொண்ணு வீட்ல ஜாதகத்தைக் கொடுங்கள். பொருந்தியிருந்தா மட்டும் நாம் போய் பார்க்கலாம். அதே மாதிரி பொண்ணோட ஜாதகத்தை முதல்ல வாங்கிட்டு வாங்க...”அதே சமயம் உள்ளே வந்த இளங்கோ நேராக தரகரிடம் சென்றான்.“கொஞ்சம் அந்த ஜாதகத்தைக் கொடுங்க” என அவருடைய கையிலிருந்து ஜாதகத்தை வாங்கிய இளங்கோ யாருமே எதிர்பாராதவண்ணம் சுக்கல் சுக்கலாகக் கிழித்தான்.அனைவர் முகத்திலும் அதிர்ச்சி. தரகர் கிட்டத்தட்ட மிரண்டே போய்விட்டார்.“இதப்பாருங்க.... நீங்க எந்தப் பொண்ணையும் எனக்காகப் பார்க்க வேண்டாம்.”சட்டென்று மறுநிமிடம் அந்த இடத்தை விட்டு அகன்றான்.அதிர்ச்சி விலகாத கண்களோடு தன்னைப் பார்த்த தரகரைப் பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்தார் கணேசன்.அம்சவேணி கலங்கிவிட்ட கண்களோடு சட்டென்று சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்.தரகர் மெளனமாக எழுந்து வெளியே வந்தார். அவருடன் வந்தார் கணேசன்.தோட்டத்தில் இறங்கி நடந்த தரகர் கூடவே வந்த கணேசனைப் பார்த்துக் கேட்டார்.“பையன் ஏன் இப்படி நடந்துக்கறான். கல்யாணமே வேண்டாம்னு சொல்றான். ஜாதகத்தைக் கிழிச்சுப் போட்டுட்டான். அவனோட விருப்பத்துக்கு மாறா நீங்க பொண்ணு பார்க்கறீங்களா? பையன் யாரையாவது காதலிக்கிறானா? அந்தப் பொண்ணை உங்களுக்குப் பிடிக்கலையா?”“இல்ல... அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை... நான் நாளைக்கு அவனோட ஜாதகத்தோட இன்னொரு காப்பி எடுத்து உங்கக்கிட்டே கொண்டு வந்து தர்றேன். நீங்க பொண்ணு பாருங்க.”“பையன் இப்படிச் சொல்றானே!”“அவன் அப்படித்தான் சொல்லுவான். அவன் மனசை நாங்க மாத்திடுவோம். நீங்க எதையும் மனசுல போட்டுக்காம நல்ல பொண்ணாப் பாருங்க” என்றார்
