கற்பூர ஜோதி
ஆர்.சுமதி
Editora: Pocket Books
Sinopse
தனக்குள் உண்டான சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்தவதென தெரியாமல் திணறி நின்றாள் ரம்யா.தன்னுடைய பிரார்த்தனை இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று கனவில் கூட நினைக்கவில்லை அவள்.சற்றுமுன் வேண்டிக் கொண்டிருந்த கடவுளுக்கு நன்றி கூறினாள்.பிரமிப்போடு நிற்கும் அவளை அசைத்தாள் மாமியார்.“என்ன நம்ப முடியலையா? உண்மையாத்தான் சொல்றேன். அவன் இப்பத்தான் போன் பண்ணி சொன்னான்.”அவளுக்குள் அத்தனை மகிழ்ச்சிக்கிடையிலேயும் சிறு ஏமாற்றம் நிலவியது.‘ச்சே... நான் பேச முடியாமல் போய் விட்டதே. இன்னொரு தடவை போன் பண்ணி அவர் என்னிடம் சொன்னாலென்ன?’ஏங்கினாள்.“இப்போ அவருக்கு லீவா? எத்தனை மாசம் லீவாம்?”“அதெல்லாம் அவன் சொல்லலை. விஷயத்தை சொல்லிட்டு உடனே போனை வச்சுட்டான். உன்கிட்ட அப்புறம் பேசறதா சொன்னான்.”அந்த பதில் உள்ளுக்குள்ளிருந்த ஏமாற்றத்தை சட்டென்று போக்கியது.‘என் செல்லக்குட்டிக்கு என்னோட பேசவில்லையென்றால் தூக்கம் வராது.’ நெஞ்சுக்குள் சிலிர்த்தாள்.எதிரே நிற்கும் மாமியான ரத்தினாம்பாளை முத்தம் கொடுக்க வேண்டும் போலிருந்தது. மகிழ்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. சினிமாவில் வருவதைப் போல் தேவதைகள் புடைசூழ ஆடிப்பாட வேண்டும் போலிருந்தது.ரம்யா... வர்ற வெள்ளிக்கிழமை என்ன நாள்னு ஞாபகமிருக்கா?” மாமியார் குறும்பு மிளிர கேட்க மின்னலாக மூளையில் பளிச்சிட்டது.வர்ற வெள்ளிக்கிழமை அவளுடைய கல்யாண நாள். ஒவ்வொரு கல்யாண நாளின் போதும் அவள் கணவனின் பிரிவை எண்ணி மன அழுத்தத்துடன் இருப்பாள். கோயிலுக்குப் போவாள். புதுப்புடவை உடுத்துவாள். ஆனால் மனம் நிம்மதியுடன் இருக்காது. ஏதோ சந்தோஷத்தை இழந்ததைப் போலிருக்கும்.ரமேஷ் தொலைபேசி மூலம் பேசுவான். ஆனால் அது அவளுக்கு பூரணமானதொரு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று சொல்ல முடியாது.ஆனால் -இதோ இந்த முறை அவன் நேரில் வருகிறான். இந்தக் கல்யாண நாளையும் விரக்தியாகத்தான் கழிக்க வேண்டும் என்று நினைத்திருந்தாள். அவன் வருகிறான்.மருமகளின் முகத்தில் தெரிந்த நாணம் கலந்த பரவசத்தை கண்ட மாமியாரின் முகத்தில் சிரிப்பு பரவியது.“அத்தை... என்னோட கல்யாண நாள்...”“ரெண்டு வருஷமா ஒவ்வொரு கல்யாண நாள்லேயும் நீ கண் கலங்கி நிற்பே. இந்த வருஷம் அப்படியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தக் கல்யாண நாளை நல்லா கொண்டாடணும்...”“அத்தை... இந்த சந்தோஷமான செய்தியை நான் உடனே எங்க அம்மா அப்பாவுக்குச் சொல்லணும்.”உற்சாகமாக குதிக்காத குறையாக இருந்தாள்.“தாராளமா சொல்லும்மா.”கையிலிருந்த அர்ச்சனைக் கூடையை அத்தையின் கையில் கொடுத்துவிட்டு தொலைபேசிக்கருகே ஓடினாள்
