குடியிருக்க நீ வர வேண்டும்
ரமணிசந்திரன்
Maison d'édition: Publishdrive
Synopsis
அந்தப் பெரிய நகைக்கடையைப் பார்த்ததும், திருமணப் பரிசாகத் தங்கைக்கு ஏதேனும் சிறப்பாக வாங்கிக் கொடுக்கலாமே என்று தோன்றிவிடச் சட்டென்று, சசாங்கன், அந்தக் கடையினுள் நுழைந்துவிட்டான்.மனதில் இருந்த உறுத்தல் முழுமையாக மறையாத நிலையில், அதை எப்படி ஈடு செய்வது என்று அதைப் பற்றியே ஆழ் மனது சிந்தித்துக்கொண்டே இருந்திருக்கும் போலும்! என்ன செய்யலாம்? எப்படிச் செய்யலாம் என்று அதே யோசனை!தொழில் விஷயத்தில் கூட, அவன் அப்படித்தான்.இவ்வளவுதான் என்று முடிக்கவும் மாட்டான்., பிறகு யோசிக்கலாம் என்று முழுதாக ஒதுக்கவும் மாட்டான். இன்னும் என்ன, எப்படிச் செய்வது என்று ஊடுபாவாக, உள்ளூர ஓர் இழை அவன் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். அது பற்றி அவ்வப்போது தோன்றும் சின்னச் சின்ன கருத்துக்களே , பின்னர் அவனுக்கு வெற்றியை ஈட்டித் தருவனவாகவும் அமையும்.அதுவும் இந்த ஆறேழு மாத காலமாகத் தங்கையின் மனதை, அவன் எப்படி வருத்தியிருக்கிறான்! என்ன காரணம் என்று புரியாமல், பாவம், அவள் எவ்வளவு வேதனைப் பட்டிருப்பாள்! கிட்டே வந்து, என்ன என்று கேட்கக் கூட விடாமல், முசுட்டு முகத்துடன் இருந்ததை நினைக்கையில், அவனுக்கு மிகவும் அவமானமாக இருந்தது! இத்தனைக்கும், சிரிப்பும் விளையாட்டுமாக, எப்படி இருக்கும் வீடு, அது!எப்படியோ, நல்ல வேளையாக அதற்கொரு முடிவு, தானாக வந்து சேர்ந்தது. இல்லையென்றால், இன்னும் எத்தனை காலம், சுவர்ணாவின் தவிப்பு நீடித்திருக்குமோ?பெயருக்கேற்றபடி தங்கமான குணம் படைத்த தங்கையின் துன்பம் தீரக் கடவுளாகப் பார்த்து, ஒரு தீர்வைக் காட்டினார்., அதைத் தொடர்ந்து, நல்ல விதமாக அவளது வேதனையும் தீர்ந்தது என்றாலும், இடைப்பட்டகாலத்தில் அவள் அனுபவித்த துன்பம், அனுபவித்ததுதானே? என்ன பிராயச் சித்தம் செய்தாலும், அதை ஈடுகட்ட முடியுமா?ஒருபோதும் முடியாது என்றாலும், சின்னச் சின்ன முயற்சிகளால்,செயல்களால் தங்கையின் மகிழ்ச்சியைக் கூட்ட, அவன் முயன்று கொண்டேதான் இருந்தான்.இப்போதும் அது போலத்தான்! சுவர்ணாவுக்குப் பிடித்த மாதிரியாக ஏதாவது செய்யலாமே என்று எண்ணித்தான், அவன் நகைகளைப் பார்வையிடத் தொடங்கினான்.ஆனால், உரிய விதமாக “ஃபோகஸ்” பண்ணிய விளக்கொளியில், பளபளவென்று அழகாக ஜொலித்த அந்த நகைகளில், சுவர்ணாவுக்குப் பொருத்தமானதாக ஒன்றைத் தேர்ந்தெடுக்குமுன், அவன் வியர்த்து, விறுவிறுத்துப் போனான்! இதமாகக் குளிர் பரவியிருந்த அந்த ஏசி அறையிலும்!திருமணம் நிச்சயமான பின், அவ்வப்போது, தங்கைக்கு நகை, துணிமணி வாங்கச் செல்லும்போது, கூட வருமாறு கூப்பிடும் தாயின் நினைவு வந்தது!ஒரே தங்கை., திருமணம் ஆகிப் போய்விட்டாலும், இது போலெல்லாம் அன்பு அண்ணனாக அவன் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதை மனதில் பதிய வைப்பதற்காகத் தாய் செய்யும் முயற்சி என்று, அப்போதெல்லாம் எண்ணிக்கொள்வான்.“அம்மா, ப்ளீஸ்! சுவிக் குட்டிக்கு உங்களை விட, நான் நன்றாகவே செய்வேன். காட்ப்ராமிஸ்! அதனால், நீங்கள் இப்படியெல்லாம் என்னைப் பழக்கிவிடத் தேவையே கிடையாது என்று நேரடியாகச் சொல்லியும் இருக்கிறான்.அதற்காக, அன்னையிடம் குட்டும் வாங்கியிருக்கிறான்.
