வெளிச்சம் வெளியே இல்லை!
தேவிபாலா
Editora: Pocket Books
Sinopse
கடுங்காவல் அறை கீழே இருந்தது. ஏழெட்டு ஸெல்கள். தூக்கு தண்டனைக் கைதிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடம். கையில் சாப்பாட்டுத் தட்டுடன், ஒரு கான்ஸ்டபிள் துணைக்கு வர, அவன் இறங்கி வந்தான்.முதல் சிறையில் முதுகு காட்டிப் படுத்திருந்தான் அவன்.கான்ஸ்டபிள் சிறைக் கதவைத் திறக்க, திரும்பிப் பார்த்தான் மெள்ள.“சீனு! சாப்பாடு கொண்டு வந்திருக்கேன்.”“ம்! வச்சிட்டுப் போ!”“சீனு! இப்படி வாயேன்!”சீனு எழுந்து வந்தான்.“என்ன பிச்சை?”“இன்ஸ்பெக்டர் மதன் உன் ஸ்நேகிநர். அரசாங்க வக்கீல் ஏகாம்பரம் மதனுக்கு வேண்டப்பட்டவர். சட்டத்துல ஆயிரம் சந்து பொந்துகள். நினைச்சா, உன்னை வெளில கொண்டு வர முடியாதா?”“வேண்டாம்!”“ரெண்டு வாரத்துல உனக்குத் தூக்கு!”“தெரியும்.”“நாலு கொலைகளைச் செஞ்சதுக்குக் காரணம் சொல்லு! இல்லைன்னா வக்கீல் சொல்லித் தர்றதைச் சொல்லு. அது போதும்!”“வேண்டாம்!”“என்ன வேண்டாம்? நீயா கொலைகளை செஞ்சதைச் சொல்லி சரணடைஞ்சிருக்கே! அதுக்கான காரணத்தை சட்டத்தோட துணையோட முறையாச் சொல்லு.”“உன் வேலை என்ன பிச்சை?”“சாப்பாடு கொண்டு வர்றது.”“கொண்டு வந்தாச்சா?”“ம்...!”“வச்சிட்டுப்போ! எனக்கு வாழற ஆசை இல்லை. தூக்குல தொங்கற நாளை எதிர்பார்த்து காத்துட்டு இருக்கேன் நான்!”படிகளில் பூட்ஸ் கால்களின் ஓசை. பிச்சை சாப்பாட்டை அவசரமாகக் கொடுத்துவிட்டு வேகமாக நடந்தான். மதன்தான். கூடவே டாக்டர் நாகராஜ். நாலைந்து போலீஸ்காரர்கள். வந்தார்கள். நாலடி தள்ளி நின்று கொண்டார்கள். கதவு மீண்டும் திறக்கப்பட்டது.டாக்டருடன் மதன் உள்ளே வந்தான்.“உன்னை டாக்டர் பரிசோதிக்கணும்!”சீனு திரும்பி டாக்டரைப் பார்த்தான். டாக்டர் அவனைக் கூர்ந்து பார்த்தார். சீனுவின் முகத்தில் எந்த வித உணர்ச்சியும் இல்லை. ஸ்டெதஸ் கோப்பை வைத்துப் பார்த்தார். பரிசோதனைகளைப் பத்து நிமிடங்களில் முடித்துக் கொண்டார்.“ஹீ ஈஸ் ஆல் ரைட். பூரண ஆரோக்யத்தோட இருக்கான். நாளைக்கே தூக்குல தொங்கலாம்!”“இன்னம் ரெண்டு வாரத்துல உனக்கு மரணம். ப்ளாக் வாரன்ட் வந்தாச்சு. தேதி இன்னும் ரெண்டு நாள்ல வந்துரும்.”சீனு பேசவில்லை.“சாகப் போறமேனு உனக்கு சங்கடமா இல்லையா?”எதுக்கு?”மதன் பேசவில்லை.டாக்டர், சீனுவின் அருகில் வந்தார்.“நிஜம்தான். நாலு உயிரைப் போக்கின உனக்கு எதுதான் சங்கடமா இருக்கும்? நீ மனுஷனே இல்லை. மிருகம்!”அவன் பேசவில்லை.“ஏன் செஞ்சே அந்தக் கொலைகளை?”சீனு பேசவில்லை.“இப்பவும் நான் உன்னைக் கேட்கிற ஒரே கேள்வி இதுதான். உனக்கு உறுத்தலே இல்லை?”சிரித்தான் சீனு.“எதுக்கு? நல்ல காரியத்தைச் செஞ்சவங்களுக்கு ஒரு நாளும் உறுத்தலே இருக்காது.”“யு... பாஸ்டர்!” டாக்டர் பாய்ந்து விட்டார்.மதன் சட்டென குறுக்கிட்டுத் தடுத்தான்.“டாக்டர்... என்ன இது? நீங்க இப்ப ட்யுட்டில இருக்கீங்க!”“ஸாரி இன்ஸ்பெக்டர். இந்த சண்டாளனைப் பார்க்கும்போது என்னையே நான் மறந்து போறேன்.”“போகலாமா?”“ம்!”டாக்டர், திரும்பித் திரும்பி பார்த்தபடி நடந்தார். இருவரும் சூப்பிரென்ட்டெண் அறைக்குள் நுழைந்தார்கள்.
