துரோகம் புதிது!
தேவிபாலா
Verlag: Pocket Books
Beschreibung
“நம்ம ஜேம்ஸைப் பத்தி நீ என்ன நினைக்கறே மேரி?” “யாரு? உங்க தங்கச்சி மகன் தானே?” “ம்!” “அவனை விட ஒரு நல்ல பையன் உண்டா?” “அவன் நல்லவன்தான். ஆனா மூணாவது தங்கச்சியைக் கூட இப்பத்தான் கட்டிக் குடுத்தான். ஏகப்பட்ட கடன் இருக்கே அவனுக்கு!” “அவனுக்குக் கடன் இருந்தா, உங்களை அது எப்படி பாதிக்கும்?” “நான் என்ன சொல்ல வர்றேன்னு உனக்குப் புரியலையா?” “புரியுதுங்க. நம்ம ஸ்டெல்லாவை ஜேம்ஸுக்குக் கட்டிக் குடுக்கலாம்னு சொல்ல வர்றீங்க!” “ஆமாம்.” “ரொம்ப நல்ல தீர்மானம். கடன் சுமையும், குடும்ப பாரமும் உள்ள இடத்துல வாழ்க்கைப்படட்டும். அப்பத்தான் அவளுக்கு பொறுப்பு வரும்” “குழந்தை கஷ்டப் படுவாளோ?” “படட்டும். நீங்க செல்லம் குடுத்து அவளைக் கெடுத்தது போதும். உருப்படியா இன்னிக்குக் காலைலதான். கண்டிச்சீங்க அவளை முதன் முதலா!” “ஏதும் ஏடாகூடமா ஆகக் கூடாதுன்னு பயந்துதான் இந்தக் கல்யாண யோசனை!” “உங்க தங்கச்சிகிட்ட பேச வேண்டாமா? ஜேம்ஸ் சம்மதிக்க வேண்டாமா?” அழைப்பு மணி ஒலித்தது. திறந்தார் ராபர்ட். ஜேம்ஸ் வாசலில் நின்றான். “ஆயுசு நூறு! உன்னைப் பற்றித்தான் நானும் உங்கத்தையும் பேசிட்டு இருக்கம்!” “வா தம்பி!” “இந்தாங்க மாமா ஸ்வீட்!” “என்ன விசேஷம் ஜேம்ஸ்?” “எனக்கு ஆபீஸ்ல ப்ரமோஷன் வந்திருக்கு. அதான் அம்மா ஸ்வீட் வாங்கிட்டுப் போகச் சொன்னாங்க!” “அவளும் வந்திருக்கலாமே!” “வழக்கமான ரத்த அழுத்தம். என் கடன் சுமையெல்லாம் நீங்கி, நான் தெளியற வரைக்கும் அம்மாவோட நோய் தீராது!” “உன் கடனைத் தீர்க்க நான் ஒரு வழி சொல்லப் போறேன் ஜேம்ஸ்!” “என்ன மாமா அது?” “என்னங்க நீங்க? உங்க தங்கச்சி கிட்ட பேச வேண்டிய விஷயம் இது!” “சரிதான்! சம்மதம் சொல்ல வேண்டியது இவன்தானே?” “என்ன மாமா பேசறீங்க ரெண்டு பேரும்?” “சம்பாதிக்கற பெண் ஒருத்தி உனக்கு மனைவியா வந்தா, கஷ்டம் தீரும் இல்லையா?” “அம்மாவும் இதைச் சொல்லத் தொடங்கிட்டாங்க மாமா. தரகர் வீட்டுக்கு வரத் தொடங்கிட்டார்!” “அப்படியா?” “அம்மா போற வேகத்தைப் பார்த்தா, ஒரு மாசத்துக்குள்ள நிச்சயம் பண்ணிடுவாங்கனு தோணுது!” “பார்த்தியா மேரி? சரியான நேரத்துல பேசத் தொடங்கிட்டம் ரெண்டு பேரும். நீ இப்பவே புறப்படு ஜேம்ஸ்!” “எங்கே மாமா?” “உங்க வீட்டுக்குத் தான்!” “எதுக்கு?” “மத்தவங்க முந்திக்கறதுக்கு முன்னால, நான் அப்ளிகேஷன் போட்ரலாம்னு பாக்கறேன்!” “புரியலை!” “கையில ஸ்டெல்லாவை வச்சிட்டு, வெளிப் பெண்களுக்கு உங்கம்மா ஏன் அலையணும்?” “மாமா!” “உனக்கு ஸ்டெல்லாவைக் கட்டிக்க இஷ்டமா ஜேம்ஸ்?” “உடனே எப்படி மாமா பதில் சொல்ல முடியும்?” “ஏன்? எம் பொண்ணு அழகா இல்லையா? கை நிறைய சம்பாதிக்கலையா? உன்னோட குழந்தைக் காலம் தொட்டு பழகின பெண். என்ன யோசனை ஜேம்ஸ்?” “அம்மாவைக் கலக்காம யாருக்கும், எந்த பதிலும் நான் சொல்றதில்லை!” “சரி வா! இப்பவே புறப்படலாம்!” “நீங்க நாளைக்கு வாங்களேன் மாமா. இது தொடர்பா நானும், அம்மாவும் இன்னிக்கு பேசிர்றம்!” “குட்! அதுவும் நல்லதுதான். உங்கம்மா என்ன சொல்லப் போறா? மனப்பூர்வமா சம்மதிப்பா. எனக்குத் தெரியாதா என் தங்கையை?” “நான் வர்றேன் மாமா. அத்தே நான் வர்றேன்!” வீடு வரும்வரை ஒரு மாதிரி குழப்பத்தில் இருந்தான் ஜேம்ஸ். வீட்டுக்குள் நுழைந்தான்.
