பட்டாசு பட்டம்மா!
தேவிபாலா
Verlag: Pocket Books
Beschreibung
காலையில் கோவிலுக்குப் போய் விட்டு வந்தான் சிவா! “அம்மா! அம்மா!” “தோ வந்துட்டேண்டா சிவா!” அம்மா ஓடி வந்தாள். “அப்பா எங்கே?” “குளிச்சிட்டு சந்தியாவந்தனம் பண்ணிண்டு இருக்கார்!” “இன்னிக்கு என்னோட ஓவியக் கண்காட்சி நடக்கப் போறது!” “தெரியுமே! நான் கார்த்தால ஆறு மணிக்கே போய் அம்பாளுக்கு உன் பேர்ல ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வந்தாச்சு!” அப்பா வந்தார்! “ரெண்டு பேரும் நில்லுங்கோப்பா! நமஸ்காரம் .பண்ணிக்கறேன்!” அவன் அவர்கள் காலில் விழ, “நன்னா இருடாப்பா! நீ பல சாதனைகளை ஓவியத்துல பண்ணணும்! பகவான் உன்கூட இருந்து, உன்னை எல்லாத்துலேயும் ஜெயிக்க வைக்கணும்!” அம்மாவின் கண்கள் கலங்கி விட்டன. “உன் பிள்ளைக்கு வயசு முப்பதாச்சு! சீக்கிரமா அவனுக்கொரு கல்யாணம் ஆகணும்னு அம்பாளை... வேண்டிக்க மாட்டியா?” “நான் வேண்டிக்காமலா? அவன் மனசு வெக்கணுமே!” “அம்மா! கல்யாணம் கால்கட்டு! எனக்கு அதுல ஈடுபாடு இல்லை! கம்பெனில எனக்கு ஏன் பெரிய உத்யோகம் தந்திருக்கா? நானொரு ஓவியன்ங்கற காரணமா! எனக்குப் பேரும், பெருமையும் கிடைச்சா, கம்பெனிக்குக் கௌரவம்!” “சரிடாப்பா! கல்யாணம் அதுக்குக் எந்தவிதத்துல தடங்கல்?” “பொண்டாட்டி, குழந்தைனு ஆயிட்டா, டென்ஷன் வரும்! குடும்ப ரீதியா கவனம் சிதறும்!” “பொண்டாட்டினு வந்தாத்தானா? அப்படீன்னா அம்மா-அப்பா மேல உனக்கு ஆசையில்லையா?” “அய்யோ! அம்மா நீ புரிஞ்சுக்கலை! என்னைப் புரிஞ்சுண்டு நீங்க ரெண்டு பேரும் எனக்கு ஒத்துழைக்கற மாதிரி வர்றவ இருப்பானு என்ன நம்பிக்கை?” “அப்படிப்பட்டவளைத் தேர்ந்தெடுக்கணும்! இதப்பாரு பொம்மனாட்டியை நீ ஓவியமா வரையற! நான் அம்மாதான்! ஒரு புள்ளைகிட்ட இந்த அளவுக்கு, வெளிப்படையா பேசப்படாதுதான்! ஆனாலும் பேச வேண்டியிருக்கு. ஒரு பொம்மனாட்டி கூட வாழ்ந்து எல்லாத்தையும் உணர்ந்தா, உன் ஓவியத்துல சிருங்கார ரசம் கூடும். கற்பனையை விட எந்த ஒரு கலைஞனுக்கும் அனுபவம் அதிகமான மெருகைத் தரும்!” அப்பா கை தட்டினார்! “உங்கம்மா கலக்கறாடா! அனுபவம்னு அவ சொல்றது எதைத் தெரியுமா?” “அய்யோ! நிறுத்துங்கோ! குழந்தை அவன்! கண்டதைப் பேசாதீங்கோ!” சிவா சிரித்தபடி உள்ளே போனான்!
