பொட்டு வச்ச வட்ட நிலா
தேவிபாலா
Maison d'édition: Pocket Books
Synopsis
சந்திரன் இன்னமும் மயக்க நிலையில்தான் இருந்தான். உயிர் வாயுக்கருவி, இன்னும் பிற மருத்துவக் கருவிகள் உடலின் சகல பாகங்களையும் சொந்தம் கொண்டாட, தலைக்கு மேல் இதயத் துடிப்பை அவ்வப்போது சொல்லிக் கொண்டிருக்கும் கணிப்பொறி.ஆண்டாள் அவன் கால் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள்.நேற்று இங்கு வந்தது முதல் அவனைவிட்டு அவள் அசையக்கூட இல்லை.அவனுக்குத்தான் இன்னமும் விழிப்பே வரவில்லை.“உங்கள் மனைவி வந்திருக்கிறேன். உங்கள் மரணத் தேதி தெரிந்தும் இன்னமும் உயிருடன் உங்கள் எதிரில் உட்கார்ந்திருக்கிறேன்! என்னைப் பார்க்க மாட்டீர்களா ஒரு முறை?”ஊகூம்! விழிக்கவில்லை சந்திரன்.விடிந்து வெகுநேரமாகிவிட்டது. முதல் நாளே சந்திரனின் அப்பா தந்தி கொடுத்தபடியால் அவனுடைய அக்கா, தங்கை இருவரும் அலறியடித்துக் கொண்டு அதிகாலையிலேயே வந்துவிட்டார்கள், தங்கள் கணவன்மாருடன்.பெரிய மாப்பிள்ளை மாமனாரை நெருங்கினான்.“மாமா! நான் கேக்கறேன்னு தப்பா நினைக்கக்கூடாது. சொத்து விவகாரங்கள் முடிவு பண்ணியாச்சா?”“என்னங்க நீங்க? எந்த நேரத்துல எதைப் பேசறதுன்னு இல்லையா? தம்பியைவிட பெரிய சொத்து எங்க குடும்பத்துல என்ன உண்டு?”“நான் அதுக்குச் சொல்லலை. எப்படியும் உன் தம்பியின் உயிர் நிலைக்கப் போறதில்லை. அப்புறம் மற்ற விஷயங்களைப் பற்றி இப்பவே முடிவு செய்யறது நல்லது இல்லையா?“அப்பாவுக்கு அவன் ஒரே ஆண் பிள்ளை. எல்லா சொத்துக்களும் அண்ணனைத்தானே சேரணும்!” தங்கையின் குரலில் கொஞ்சம் ஆதங்கம் ஒளிந்திருந்தது.அவள் கணவன் முன்னால் வந்தான்.“அதெப்படி? லாரி தொழிலை நடத்திட்டு இருந்தது உங்கள் அப்பா தானே! அவரால முடியாம போனபிறகு உங்கண்ணன் நடத்தறார். அப்பா சம்பாதிச்ச சொத்துல பொண்ணுகளுக்கும் உரிமை உண்டு.”“அட, இருங்க சகலை! ஏன் மாமா ...இப்போது சொத்துக்கள் யார் பேர்ல இருக்கு?”“நாலு லாரி ஓடிட்டு இருக்கு. ரெண்டு லாரியை சந்திரன் பேருக்கு மாத்தி போன ஆண்டுதான் எழுதி வைச்சேன். மீதி இரண்டு என் பேர்ல இருக்கு”“உங்க வீடு?”“அதுவும் சந்திரன் பேர்லதான்!”“ஏன் அவசரப்பட்டு எழுதினீங்க?”“என்ன மாப்பிள்ளே நீங்க? சந்திரன் என்னோட பிள்ளைனே உங்களுக்கு மறந்து போச்சா?” அவர் குரலில் கோபம் எட்டிப் பார்த்து விட்டது.“மறக்கலை... இப்ப நிலைமை தலைகீழாக மாறிப் போச்சு இல்லையா?”“புரியலை!”“திடீர்னு புற்றுநோய் வந்து உங்கள் பிள்ளைக்கு மரணத் தேதி குறிச்சாச்சு. அவர் மூச்சு நிக்கிற நேரம் வந்தாச்சு. ரெண்டு லாரியோட மதிப்பு கிட்டத்தட்ட மூணு இலட்ச ரூபாய்க்கு மேல. இந்த வீட்டோட மதிப்பு அஞ்சு இலட்ச ரூபாய். வங்கில என்ன இருக்கு?”“ரெண்டு இலட்சத்துக்கு மேல!”“யார் பேர்ல?”“சந்திரன் பேர்லதான்!”ஏறத்தாழ பத்து இலட்ச சொத்து மதிப்பு, அப்படியே அந்த ஆண்டாள் தட்டிட்டுப் போகப் போறா! அவசியம்தானா இது?”மாமியார் குறுக்கிட்டார்.“அதுதானே நியாயம் மாப்பிள்ளை. ஆண்டாள் அவன் மனைவி. அவனோட எல்லாமே அவளைத்தானே சேரணும். சட்டம் கூட அதைத் தானே பேசும்?”“சட்டம் ஆயிரம் பேசும். மூணு வருடத்துல முத்து மழை. அந்தப் பொண்ணுக்கு மச்சம். முப்பது வருடமா சந்திரனைப் பராமரிச்ச பெத்தவங்களுக்கோ, அவனோட வளர்ந்த சகோதரிக்களுக்கோ ஒண்ணுமில்லையா?”“நீங்க என்ன சொல்றீங்க?”“இதோ பாருங்க மாமா! நமக்கு சந்திரன் முக்கியம். மறுக்கலை. அவனே இல்லைனு ஆனபின்னால யாரந்த ஆண்டாள்?”“என்னங்க!”“நீ சும்மார்றி! மாமா... பிள்ளையை வைச்சுத்தான் மருமகள் உறவு. உங்க வம்சம் விளங்க ஒரு பிள்ளையைக்கூட ஆண்டாள் இதுவரைக்கும் தரலை... உண்மை தானே?”“ம்...!”“அப்புறம் எல்லாத்தையும் அவள் தட்டிட்டுப் போறதுல என்ன நியாயம்?”“மாப்பிள்ளை?”“சொத்துக்கள் இத்தனையித்தனை... இன்னார் பேர்ல-இந்த விவரங்களெல்லாம் ஆண்டாளுக்குத் தெரியுமா?”“எதுவும் தெரியாது. வீட்டு நிர்வாகத்துல எப்பவுமே அவ தலையிட்டதில்லை. சந்திரன் எங்களைக் கேட்டுத்தான் செய்வான்.“நல்லது! இதுதான் உங்களுக்கு சாதகமான ஒண்ணு! உபயோகப்படுத்துங்க.”
