கேட்டேன் தந்தாய்!
தேவிபாலா
Verlag: Pocket Books
Beschreibung
அந்த மேன்ஷன் மொட்டை மாடியில் நண்பர்களுடன் உட்கார்ந்து மது அருந்தி கொண்டிருந்தான் சேது. லேசாக இருட்டும் நேரம்.உதட்டில் சிகரெட் தொங்கிக் கொண்டிருந்தது.“சேது! வீக் எண்ட்ல எங்கியாவது போகலாமா?”“இந்த வாரம் முடியாதுடா ரமேஷ்!”“ஏன்?”“நான் பெண் பார்க்கப் போறேன்!”“அடி சக்கை! கல்யாணமா? சொல்லவே இல்லையே!”“இருடா! பொண்ணைப் பாக்கவே இப்பத்தான் போறேன். இதுக்கு அப்புறமா நிறைய இருக்கே!”“டேய்..! ஜாலியா இருக்கே! கல்யாணம் செஞ்சுகிட்டா, சுதந்திரம் பறிபோகும்!”“இதப்பாருடா! இந்த சேதுவோட சுதந்திரத்தை யாரும் பறிக்கமுடியாது! புரியுதா?”“இப்படி சொன்னவனெல்லாம் பொண்டாட்டி புடவையோட சேர்ந்து மொட்டை மாடில காயறானுங்க!”“நம்ம சேது அப்படி இல்லைடா! யாருக்கும் அடங்கமாட்டான்!”சேது எழுந்தான். மெல்ல நடந்து கைப்பிடிச்சுவரின் விளிம்புக்கு வந்தான்.“யாரும், யாருக்கும் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை! புரியுதா? குடும்பம்னு வந்துட்டா, நாம பாரமா இருக்கக்கூடாது மத்தவங்களுக்கு. நம்மை நம்பியிருக்கற குடும்பம் நல்ல விதமா வாழணும். அவ்வளவுதான்அதுக்காக சுதந்திரத்தை இழந்து குடும்பத்துல நல்ல பேர் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை! நான் மாட்டேன்!”மற்ற இருவரும் சிரித்தார்கள்.“இந்த வரன் இல்லைன்னாலும் உனக்கொரு கல்யாணம் நடந்துதானே தீரணும்!”“நடக்கும்! சரி போகலாமா?”புறப்பட்டார்கள்.சேது பைக்கை உதைத்து வேகம் பிடித்தான்.நன்றாக இருட்டத் தொடங்கிவிட்டது. லேசான மழைத்தூறல்கள் இருந்தது. போக்குவரத்து உச்சத்தில் இருந்தது.சேது வேகத்தைக் கூட்டினான்.வீடு வந்து சேர்வதற்குள் நனைந்துவிட்டான். மழை வலுத்துவிட்டது. வண்டியை ஷெட்டில் போட்டுவிட்டு, ஈரம் சொட்ட உள்ளே வந்தான். அண்ணி எதிர்பட்டாள்.“அடடா! இப்படி நனஞ்சுபோய் வந்து நிக்கறியே சேது. உடனே ட்ரஸ் மாத்து!”சேது உடைகளை கழட்டிப்போட்டு, உடம்பை துவட்டிக்கொண்டு, லுங்கி, டீ - ஷர்ட்டுக்குள் புகுந்து கொண்டான்.“இப்படி வந்து உட்காரு சேது! தலைல ஈரம் இருந்தா, ஜலதோஷம் புடிக்கும்!”அண்ணி டவல் எடுத்து வந்து அவனுக்கு தலை துவட்டத் தொடங்கினாள்.அண்ணன் உள்ளே நுழைந்தார்.“ம்... குழந்தைக்கு தலை துவட்டி விடறியா?”“ஆமாம். அவன் அரை குறையா துவட்டினா, ஈரம் போகாது!அண்ணி! பயங்கரமா பசிக்குது!”“இன்னிக்கு ஹாஃபா? ஃபுல்லா?”“போங்க அண்ணி!”“சேது! போதும். தண்ணி போடறதை நீ நிறுத்திட்டா நல்லது”“அண்ணி! அதிகமா சாப்பிடலை. எனக்கு கன்ட்ரோல் உண்டுண்னு உங்களுக்குத் தெரியாதா? எதிலயும் நான் எல்லை மீறிமாட்டேன் அண்ணி.”“சரி சரி! சாப்பிட வா!”மூவரும் வந்து உட்கார்ந்தார்கள்.ஹாட்பாக்கில் ரொட்டியும், சூடான சப்ஜியும் தயாராக இருந்தது.சேது ருசித்து சாப்பிட்டான்.“அண்ணி! சமையல்ல உங்களை அடிச்சுக்க யாராலயும் முடியாது!”“அதான் உங்கண்ணனுக்கு எட்டு கிலோ ஓவர் வெயிட். குறைக்கணும்!”“விடிகாலை எழுப்பி ஓடவிடுங்க!”“அடேய் தம்பிப் பையா! உன்னைவிட பன்ணிரடு வயசு மூத்தவன் நான். இப்ப எனக்கு நாற்பத்தி ஒண்ணு!”“லக்கி நம்பர். அண்ணி! நாற்பதுல நாய் குணம்னு சொல்லுவாங்களே! இருக்க இவருக்கு?”“சேது! அது எப்பவுமே உங்கண்ணுக்கு உள்ள குணம்தானே? நாற்பது வரைக்கும் காத்திருக்கணுமா என்ன?”சேது வாய்விட்டுச் சிரித்தான்
