கண்ணே கண்மணியே!
ரமணிசந்திரன்
Verlag: Publishdrive
Beschreibung
அடுத்தது சுவாதி கேபிள்ஸ், கம்பெனிக்குரிய பதில் சார். நம்முடைய ரேட்டைக் குறிப்பிட்டு இருக்கிறோம்” என்று கடைசிக் கடிதத்தை மேனேஜர் வினோதனுடைய கையெழுத்துக்காக நகர்த்தினாள் மதுரா.மேலெழுந்தவாரியாக பார்வையிட்ட பின்னர் அவன் கையெழுத்திட்ட அத்தனை கடிதங்களையும் எடுத்துக் கொண்டு கிளம்பலானாள்.“வேலை நிறைய இருக்கிறதா?” என்று வினோதனின் குரல் அவளை நிறுத்தியது!“இல்லை ஸார். இதையெல்லாம் உறையில் இட்டு ஒட்ட வேண்டும். அவ்வளவுதான். முகவரிகூட டைப் செய்தாயிற்று.”“பத்து நிமிடங்களில் கிளம்பி விடுவாய்?” என்று கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தான் அவன்.“ஆமாம்” என்று கடிதங்களுடன் நகர்ந்தாள் மதுரா.வினோதனின் பார்வை தன்மீது படிந்திருப்பதை உணர்ந்தும் உணராதவள் போன்று ஓர் சீரான வேகத்துடன் அறையை விட்டு வெளியேறினாள்.கடிதங்களை மடித்து, உரிய உறைகளில் இட்டு ஒட்டுகையில் மனது யோசித்தது.வினோதன் பார்வைக்கு நன்றாகத்தான் - மிகவும் நன்றாகவேதான் இருந்தான்.குணமும் நல்லதுதான்.படிப்போடு நல்ல பதவியும் இருந்தது.எல்லாவற்றுக்கும் மேலாக அவளை விரும்புகிறவனும் கூட.தம்பியைப் பார்த்துக் கொள்வான்; தாயாரின் பொறுப்பையும் கூட ஏற்றுக் கொள்வான். இவனை மறுப்பது மதியீனம்தான்.ஆனால்....‘ஆனால்’தான்.இந்த ஆனால் ஒரு கேள்வியும் இல்லை; இதற்கு விடை மட்டுமின்றி, முடிவும் இல்லை.வினோதனின் மனம் நோகாதபடி அவனது அழைப்பை மறுத்துவிட்டு, காத்து நின்று பஸ் ஏறி வீடு வந்து சேர்ந்த போது மதுரா மிகவும் களைத்துப் போயிருந்தாள்.உடலைக் காட்டிலும் மனது மிகவும் ஓய்ந்து போயிருந்தது.வினோதனோடு இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம் எத்தனை நாள் ஆடுவது?அவனை ஒப்புவதோ முடியாத காரியம்.வெளிப்படையாக அவன் கேட்டு இவள் மறுக்க நேர்ந்து விட்டால் பிறகு அங்கே தொடர்ந்து பணிபுரிவது எப்படி சாத்தியம்?வேலையை விட்டு விலகினாலோ வேறு வேலை கிடைப்பது - அதுவும் இந்தப் போட்டிக்குள் கிடைப்பது எளிதல்லவே.வேலையில்லாமல் - அதன் மூலம் வரும் பணம் இல்லாமல் இந்த வீட்டில் ஒரு நாள் வாழ முடியுமா?”எண்ணி எண்ணி ஓய்ந்து போயிருந்த மனதை மேலும் உளைப்பதற்கென்று வீட்டிலும் பிரச்சினைகள் காத்திருந்தன.வாயிலில் நின்றபடி தெரு முனைவரை ஒருதரம் எட்டிப் பார்த்துவிட்டு, “தம்பி இன்னமும் வரவில்லையம்மா” என்று கவலையுடன் உரைத்துவிட்டு உள்ளே சென்று தன் கட்டிலில் சாய்ந்தார் புவனேஸ்வரி.எவனாவது நண்பனோடு அரட்டை அடித்துக் கொண்டிருப்பான் என்று எண்ணியபடியே உள்ளே சென்றாள் மதுரா
