கேள்வியின் பதில் என்னவோ?
ரமணிசந்திரன்
Maison d'édition: Publishdrive
Synopsis
“அப்பா! நாம் தர்ம கட்டளை வைத்து நடத்தவில்லை, தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு எவ்வளவோ உதவலாம். ஆனால், எந்தத் தொழிலிலும் ஈவு இரக்கம் பார்ப்பது நமக்கே கெடுதலாகத்தான் முடியும். அதிலும் இந்தத் தொழிலில் கொஞ்சங்கூட பார்க்கக் கூடாதுப்பா! பாருங்கள், நாலைந்து கணக்குகளை பல ஆண்டுகளாக தொடவே இல்லை போலிருக்கிறதே! சும்மா மனக் கணக்காய் கூட்டிப் பார்த்தால்கூட சில கோடிகளை எட்டுகிறது!” என்றான் ஜெயநந்தன் குரலில் சிறு அழுத்தத்துடன்.அந்த அழுத்தம் தெரிவித்த அதிருப்தியை உணர்ந்த சாரங்கன் சற்று ஆச்சரியத்துடன் மகனைப் பார்த்தார்.பெற்று வளர்த்து ஆளாக்கியவர். அவன் விரும்பிய கல்வியையும் சிறந்த முறையில் அளித்தவர். எல்லாம் இந்தத் தொழிலில் வந்த வருமானத்தைக் கொண்டுதான்.பிள்ளை படித்து முடித்த பின், எல்லோரையும் போன்ற அனுபவம் வேண்டும், அதனால் வெளியே வேலை செய்யப் போகிறேன் என்றபோதும், அவர் தடுக்கவில்லை. குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுகிற மாதிரி தந்தையின் கீழ் அடங்கிக் கிடப்பதை விட, மகன் வெளியே போய் உலக அனுபவம் பெறுவது நல்லது என்றே அவரும் கருதினார். அத்தோடு முதலாளியுடைய மகனாகப் பெறும் அனுபவமும் அவ்வளவு சரியானதாக இருக்காதுதானே?அத்தோடு அவரது தொழிலில் அப்போது இரண்டு தலைகளுக்கு இடமோ அவசியமோ இருக்கவுமில்லை.அதுவரை வளர்த்த அவருக்கு, வளர்த்த தொழிலை தான் மட்டுமாகவே நடத்தும் தென்பும் இருந்தது. ஆனால், அது ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக. அப்போது அவரது வயது அறுபதின் பக்கத்தில் கூட வந்திருக்கவில்லை. வெறும் ஐம்பத்தி ஐந்து மட்டுமே. ஆனால், இப்போது ஓர் உடல்நிலைக் கோளாறுக்குப் பிறகு, உழைப்புக்கு ஒரு துணை தேவைப்பட, அதன் பிறகே மகனை அழைத்தார்.மறுக்காமல் உடனே வந்தவன் இப்போது தந்தைக்கே புத்தி சொல்கிறானா?தந்தையின் முகத்தில் வியப்பைக் கண்டு ஜெயநந்தன் லேசாக தலையசைத்தான். “அப்பா! இந்தத் தொழிலை நீங்கள் எப்படித் தொடங்கி எப்படி வளர்த்து எப்படி நம் குடும்பநிலையை உயர்த்தினீர்கள் என்று எனக்குத் தெரியும். அதை நீங்களாக அதிகம் கூறா விட்டாலும், பாட்டியும் அம்மாவும் பலமுறை சொல்லி என் மனதில் பதிய வைத்திருக்கிறார்கள். ஆனால், ஒன்று சொல்லுங்கள்! நேற்று வரை நன்றாக உண்டோம் என்று இன்றிலிருந்து பட்டினி கிடக்க முடியுமா? அது ஆரோக்கியத்துக்கு நல்லதா? நாம் வளர்த்த உடம்பு போலத்தானே தொழிலும்? உடலாவது நம்முடையது மட்டுமானது. பாதிப்பு நம் ஒருவருக்கு மட்டுமாய் இருக்கும். தொழிலில் எத்தனை போட்டிகள், ஏமாற்றுகள், பொய், திருட்டு... இதையெல்லாம் தாண்டித்தானே வென்றாக வேண்டும்? எத்தனை பேரின் வாழ்வுக்கு வழி செய்யும் நிறுவனம் இது! இப்படியெல்லாம் வளர்த்துவிட்டு இப்போது ஏன் இந்தத் தளர்வு? இயலவில்லை, வா என்றீர்கள். எல்லாம் உதறி வந்து விட்டேன். ஆனால், என் வேலையில் தடை, இடையூறு இருக்கக்கூடாது. சொல்லுங்கள்! இந்தக் கணக்குகளில் என்ன பிரச்சினை?” என்று பேச்சின் தொடர்பை விடாமல் மீண்டும் கேட்டான் மகன்.பொதுவாகவும், மரியாதை கெடாமலே நண்பர்களாகப் பழகி வந்த வழக்கம் அவர்களுக்குள் இருந்தது. எனவே, சாரங்கனும் மகனுக்கு மதிப்புக் கொடுத்துப் பேசினார்.
