ஜோடிப் புறாக்கள்
ரமணிசந்திரன்
Verlag: Publishdrive
Beschreibung
அன்புத் தோழி மஞ்சுளாவின் வீட்டிலிருந்து வெளியேறிய கவிதா பஸ் நிற்கும் இடத்தை நோக்கி விறுவிறு என்று நடக்கத் தொடங்கினாள்.உடல் தன் போக்கில் நடைபோட, இதயத்தில் மின்னல் வெட்டியது! இடித்தது! புயலும் மழையுமாக இரைச்சலிட்டன. உறுதியாகத் தெரிந்துவிட்ட உண்மையை அவளால் ஏற்றுக்கொள்ள முடியாமல் திணறினாள்.“உயிரே நீதான்” என்று சொன்னவன் மாறி விட்டானே!‘வண்ண மலரே’ என்று கொஞ்சியவன் வண்டாகிவிட்டானா?இது உண்மைதானா? எப்படி இருக்க முடியும்? அவளால் நம்ப முடியவில்லை.மின்னாமல் வீழ்ந்த இடிபோல் எண்ணாமல் நேர்ந்த துன்பத்தின் சுமைதாளாமல் தவித்தாள்; தடுமாறினாள். அதுமட்டும் நடுத்தெருவாக இல்லாமல் வீடாக இருந்தால், ‘ஓ’ வென்று கதறியிருப்பாள்.சற்று நின்று நிதானத்தை வரவழைத்துக் கொண்டாள்.அதற்குள் சரவணனுடைய சிரித்த முகம் மனதில் எழுந்தது. உள்ளத்தில் கள்ளங்கபடு உள்ளவன் முகமா அது? இல்லவே இல்லை என்று சத்தியம்கூடச் செய்வாள் கவிதா. ஆனால் கண்ணெதிரே அவன் நடந்து கொள்ளும் விதம், அவன் கள்ளமனம் படைத்தவன்தான் என்பதைப் பறை சாற்றியது. மஞ்சுளா தெள்ளத் தெளிவாய்க் கண்டுவிட்டு அல்லவா சொன்னாள்? அவள் சொன்னதில் ஐயத்துக்கு இடம் இல்லையே...“சரவணன், உங்களை நல்லவர் என்று நம்பினேன் கடைசியில் இப்படி மோசம் செய்கிறீர்களே” அவள் இதயம் விம்மியது.‘வெளித்தோற்றத்தைக் கொண்டு ஒருவரை எடை போடாதே’ என்று யார் சொல்லியிருப்பார்கள்? யாரோ நம்போல அனுபவித்தவர்கள்தாம் சொல்லியிருப்பார்கள். ‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்று நம்மைஎச்சரிக்கை செய்து இருக்கிறார்கள். நாம்தான் என்னவோ நம்மை மிஞ்சிய மூளையில்லை என்று முட்டாள்தனமாக நடந்து கொண்டு பிறகு மாட்டிக்கொண்டு விழிக்கிறோம் என்று நொந்து கொண்டாள்.சரவணன் நல்லவன்! ஒருநாளும் சொல் மாறமாட்டான் என்று கவிதா நம்பிக்கையோடு நினைத்து இருந்தாள். அவனுடைய சீரிய பண்பும், நேரிய நோக்கும் அமைதியான போக்கும் அமரிக்கையான நடவடிக்கையும் அத்தகைய எண்ணங்களை அவள் மனதில் எழுப்பி இருந்தன.கூடவே சரவணனுடைய தூரத்து உறவினன் கோபாலின் நினைவு வந்தது. சில நேரம் சரவணனோடு அவன் வருவான்.அவனுடைய தொங்கு மீசையும், ஓயாத சிகரெட்டால் கறுத்த உதடுகளும், சதா பெண் முகம் நாடி அலையும் கண்களும், மட்டரகச் சிரிப்பும், சே சரவணனே, “அவன் பெண்களிடமும் பழக அருகதை உள்ளவன் அல்ல. நான் இல்லாத நேரம் வந்தால் வெட்டி விடுங்கள்” என்று எச்சரித்திருந்தான். அப்படி எல்லாம் அடுத்தவனைப்பற்றி எச்சரிக்கை செய்தவன், இப்போது அவனைப் போலவே நடந்துவிட்டான். இது எப்படி சாத்தியமாயிற்று?நிமிர்ந்து பார்த்தாள் கவிதா. பஸ் நிற்குமிடம் வந்தாயிற்று. எந்திரம்போல் பஸ்சுக்காக வரிசையில் நின்றாள். ஆனால் நம்ப வைத்து மோசம் செய்தவனைப் பற்றிய எண்ணங்களில் இருந்து மனதை அகற்ற முடியவில்லை. சே... துரோகி.“என்ன சொன்னீர்கள்?” என்று கேட்டார், வரிசையில் அவள் முன்னே நின்ற ஒருவர்.எண்ணியதோடு மட்டுமின்றி வாய்விட்டுச் சொல்லியும் விட்டோம் என்பதை அறிந்ததும் அவமானமாகிவிட்டது. அவளுக்கு. ‘ஒன்றுமில்லை’ என்று சமாளித்தாள். குனிந்து தன் தங்க நிற மணிக்கட்டைத் திருப்பிப் பார்த்தாள். அலுவலகத்திற்கு இன்னமும் நேரம் இருந்தது. இங்கே நிற்பதைவிட அடுத்த ‘ஸ்டாப்’ வரை நடக்கலாம் என்று நினைத்தாள். நடந்தால் நெஞ்சில் சுமை சற்றுக் குறையும் என்று தோன்றவே நடக்கத் தொடங்கினாள்.
