மலர்ந்த விழிகள்
கிரிஸ் ப்ரெண்டிஸ்
Verlag: Pocket Books
Beschreibung
பூவாந்தல் கிராமம். செழிப்பான பூமி என்று சொல்ல முடியாவிட்டாலும், பசுமை அழகுடன் காட்சியளித்தது. கிராமத்தில் மொத்தமே அறுபது குடும்பங்கள்தான் இருக்கும். அங்கிருப்பவர்கள் விவசாயத்தை நம்பியே வாழ்ந்திருந்தார்கள். பூவாந்தல் கிராமத்துக்கு அடுத்திருப்பது சதுரமங்களம். அதுவும் இதை போலவே சிறிய கிராமம்தான்.இரண்டு கிராமத்துக்கும் பொதுவாக நிமிர்ந்து நிற்கும் அந்த சிவன் கோயில்தான். பத்து வருடமாக இரு கிராமத்துக்கும் பகை வளர காரணமாக இருந்தது.கிராமத்தில் இருப்பவர்கள் ஒருவரையொருவர் ஜென்ம பகையாளியாக பார்த்தார்கள். பேச்சுவார்த்தை கிடையாது. அந்த கிராமத்தில் விற்பனையாகும் பாலை கூட, சதுரமங்களத்தினர் வாங்க மறுத்தார்கள். மூன்று வேளை பூஜையும், அபிஷேகமும் நடந்த சிவனுக்கு இன்று... எந்த பூஜையும் இல்லாமல், கோயில் கதவு இழுத்து பூட்டப்பட்டிருந்தது.பத்து வருடம் முன் கோயில் திருவிழாவில், யார் பெரியவர் என்று ஏற்பட்ட மோதல்... ஒருவரையொருவர் வெட்டிக் கொள்ளும் அளவுக்கு மூர்க்கமாக மாறியது.“கோயிலுக்கு இடம் கொடுத்தது... எங்க கிராமத்தை சேர்ந்த பெரியவர், அவர் நிலத்தை கோயிலுக்கு விட்டு கொடுத்தாரு. அப்ப திருவிழாவில் முதல் மரியாதை, பரிவட்டம் கட்டறது, எங்க கிராமத்து பெரிய மனுஷருக்குதானே இருக்கணும். எங்க உரிமையை நாங்க விட்டுத் தர முடியாது” - சதுரமங்களத்தைச் சேர்ந்தவர்கள் சொல்ல...“அதெப்படி... நிலத்தை கொடுத்தா சரியா போச்சா. அதில் பிரம்மாண்டமாக கோயில் கட்ட, தன் சொத்து, சுகத்தை வித்தது பூவாந்தல் கிராமத்தை சேர்ந்தவங்க. அதை மறந்துடாதீங்க. இந்த சிவனே... எங்களால்தான்இன்னைக்கு இந்த கர்ப்பகிருகத்தில் காட்சியளிக்கிறாரு. அதனால முதல் மரியாதை எங்களுக்குத்தான்” - பூவாந்தல் கிராமத்தினர் எதிர்முழக்கம் செய்ய...பெரியவர்களின் காரசாரமான பேச்சுவார்த்தை, இளைஞர்களை கோபப்படுத்த... பொங்கலிட்டு திருவிழா கொண்டாட வந்த இரு கிராமத்து பெண்களும்... தடுமாறி நிற்க... கம்பு, அரிவாள் என்று ஒருவரையொருவர் வெட்டி கொள்ள, பால் பொங்கி வழிய வேண்டிய இடத்தில் இரத்தம் ஓடியது...கிராமத்தில் போலீஸ் நுழைந்தது. இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த கலெக்டர் வர, யாருடைய பேச்சுவார்த்தையும் அவர்களிடம் எடுபடவில்லை.வேறு வழியில்லாமல், உங்களுக்குள் ஒற்றுமையும், சமாதானமும் வரும்வரை இந்த கோயிலில் எந்த பூஜையும், புனஸ்காரமும் வேண்டாம்.கோயில் கதவுகள் இழுத்து மூடப்பட்டது. திருவிழா, கொண்டாட்டம் எல்லாம் நின்றுபோக, இரு கிராமத்தினரும் ஒருவரையொருவர் குற்றம் சொல்ல... பகை வளர, பேச்சுவார்த்தை நின்று... விட்டு கொடுக்க மனமில்லாத மனிதர்களுக்கிடையே கடவுளும் மௌனமாகி போனார்.பூவாந்தல் கிராமத்தில் லட்சுமியின் ஒரே மகளான சுபத்ரா... பத்தாவது படித்து... அருகில் இருந்த ஊரில் எஸ்.டி.டி. பூத்தில் வேலை பார்த்தாள். அந்த ஊரைச் சேர்ந்த விஜயாவும் அங்கு வேலைக்கு வர... இருவருக்கும் இடையில் நட்பு பலப்பட்டது.“சுபத்ரா இன்னைக்கு என்ன சாப்பாடு கொண்டு வந்திருக்கே?”“தயிர்சாதம், ஊறுகாய்...”“என்னடி இது... சவசவன்னு. எப்படி சாப்பிடுவே. இன்னைக்கு மதியம் என்னோடு வீட்டுக்கு வர்றியா?”“வேண்டாம்பா. எங்கம்மா பாசத்தோடு கட்டிக் கொடுத்த சாப்பாடு வீணாக்கலாமா? சாதாரண விவசாய கூலியாக இருந்து, என்னை ஆளாக்கியிருக்காங்க. அப்பாவை இழந்த எனக்கு... எல்லாமுமாக இருக்கிறவங்க எங்கம்மா. அவங்க எது கொடுத்தாலும் அது எனக்கு அமுதம்தான்...”“அப்பாடா... ஒருவேளை வீட்டுக்கு சாப்பிடவான்னு கூப்பிட்டா, இவ்வளவு சொல்ற... சரி... சரி... நீ தயிர் சாதத்தையே சாப்பிடு...” விஜயா சிரிக்க...அங்கு வருகிறான் திவாகர்.மெடிக்கல் காலேஜில் படிப்பை முடித்து, ஹவுஸ் சர்ஜனாக இருப்பவன். சதுரமங்களம் கிராமத்தை சேர்ந்தவன். பார்ப்பவர் மனதில் இவன் அழகான இளைஞன் என்ற எண்ணம் தோன்றும்.சிரிக்கும் கண்கள். அடர்ந்த தலை கேசத்தை கைகளால் அடிக்கடி கட்டுபடுத்துவான். சதுரமங்களம் கிராமத்தை பொறுத்தவரை, அங்கிருக்கும் இளம் பெண்களுக்கு அவன் ஒரு ஹீரோ. ஆனால் அவன் மனதோ... விழுந்து கிடப்பது... சுபத்ராவின் கடைக்கண் பார்வையில்...அவளை பார்ப்பதற்கென்றே அந்த எஸ்.டி.டி. பூத்தை தேடி வருவான். அவள் மனதை புரிந்துகொண்ட சுபத்ராவும்... அவன் மேல் ஈர்ப்பு இருந்தாலும் அதை வெளிப்படுத்த தயங்கினாள்.
