அழகே உன்னை ஆராதிக்கிறேன்
ஆர்.மகேஸ்வரி
Publisher: Pocket Books
Summary
குட்மார்னிங் சார்...!” பவ்யமாய் அவனைப் பார்த்து சொன்னாள் நந்தினி.‘நினைத்தேன் வந்தாய்... நூறு வயது...!’ என்று பாடவேண்டும் போலிருந்தது திலகனுக்கு.“நான் வரட்டுமா சார்? அப்படியே நான் சொன்னதையும் கொஞ்சம் சிந்திச்சி பார்த்தா நல்லது!” நமட்டாய் சிரித்துவிட்டு போய் விட்டான் மோகன்.“குட்மார்னிங்... மிஸ் நந்தினி! என்னைக்குமில்லாத அதிசயமா இன்னைக்கு ஏன் இவ்வளவு தாமதம்னு தெரிஞ்சுக்கலாமா?”“சாரி... சார்! வழக்கம் போல நான் சரியான நேரத்துக்குத்தான் கிளம்பி வந்தேன். பாரீஸ் கார்னர்ல இறங்கி இன்னொரு பஸ் பிடிக்கிற அவசரத்துல ரோடு தாண்டினப்ப... ஆட்டோ ஒண்ணு...”“அய்யோ... அடிபட்டிருச்சா? எங்கே ரொம்ப பலமாவா? மருத்துவமனைக்கு போனீங்களா?” சீட்டைவிட்டே எழுந்துவிட்டான் திலகன்.நந்தினி அவனை புரிந்தும் புரியாமல் பார்த்தாள். இதயத்தில் சந்தோச நீரூற்று குப்பென்று பீய்ச்சி அடித்தது.‘திலகன்... உங்கள் மனதில் நானிருக்கிறேனா?’ கோடிட்டு காட்டிய அவன் செயல் நந்தினியை மகிழவைத்தது.“இல்லை... நீங்கள் நினைப்பது போல் அப்படி எதுவும் நடக்கவில்லை. எதிரே வந்த ஆட்டோ, என்மேலே சேற்றை வாரியிறைத்து விட்டு போய்விட்டது என்றுதான் கூறவந்தேன்.”‘‘அப்பாடா!” நிம்மதியாய் மூச்சுவிட்டான். அதேநேரம், தன்னை மீறிய அவளைப் பற்றிய அக்கறை உணர்ச்சி வெளிப்பட்டுவிட்டதே என்று சற்றே வெட்கமும் எழுந்தது.“அதனால்... உடைகளை மாற்ற மறுபடி வீட்டுக்கு போய் வரவேண்டியிருந்தது. வர்றதுக்கு கொஞ்சம் லேட்டாயிட்டு... மன்னிச்சிடுங்க சார்!“பரவாயில்லே நந்தினி... மிக அவசரமாக பார்த்து முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு. நான் நேத்து அந்த மேட்டர் விசயமா சில குறிப்புகள் கொடுத்தேனே... முதல்ல லண்டனுக்கு, நம்ம பாஸ் பெயருக்கு ஒரு பேக்ஸ் அனுப்பிடுங்க!”“சரி சார்” நந்தினிக்கு பலூனில் ஊசி குத்தியது போலிருந்தது.‘தன்னைப் பற்றி அக்கறையாய், அன்பாய் மேலும் நாலு வார்த்தை பேசுவான்’ என்று எதிர்பார்க்க... அவனோ சடாரென்று வியாபார விசயத்திற்கு தாவி கட்டளையிடுகிறான்... இருக்கட்டும். எத்தனை நாளுக்கு கண்ணாமூச்சி ஆடுகிறார் என்று பார்ப்போம்! ஒரு ஆண் பிள்ளைக்கு இந்தளவு தயக்கம் அவசியமா? பெண்களாய் வலிய போய் தன் மனதை வெளிப்படுத்தினால், ‘ஒரு மாதிரியான கேசு’ என்று சடுதியில் வேறு மாதிரி கணக்குப் போடும் உலகமிது.உம்... இவர் எப்போது மனசை திறந்து பேசி... பழகி, உல்லாசமாய் பறந்து திரிந்து, பூங்கா, கடற்கரை, சினிமா என்று சுற்றி, வீட்டில் சொல்லி திருமணம் செய்து, தாம்பத்யம், குழந்தை என்று குடும்பமாய் செட்டிலாவது எப்போது? சரியான... சாம்பிராணி, சாமியார், ச்சே...!“நந்தினி... ஏன் ஒரு மாதிரியாயிட்டீங்க? பேக்ஸ் கொடுக்கச் சொன்னது...!”“காதில் விழுந்தது சார்!” பட்டென்று பதிலளித்துவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தாள். அப்படி இப்படியென்று மதிய உணவு இடைவேளை வரைக்கும் அவன் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை நந்தினி.திலகனுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.‘திடீரென்று என்னாகிவிட்டது இவளுக்கு? சே... எனக்கும்தான் மூளை பிசகிவிட்டது. எத்தனை அருமையான வாய்ப்பு? மெல்ல நம் மனதில் உள்ளதை வெளிப்படுத்தக்கூடிய அற்புதமான சந்தர்ப்பத்தை பாழாய்ப்போன கோழைத்தனத்தால்... கெடுத்து... சே! அவள் முகத்தைப் பார்த்தால்... அதிலும் ஊடுருவிப் பார்க்கும் அந்த கண்களை சந்திக்கும் எப்பேர்பட்ட மாவீரனும் ஊமையாகிவிட மாட்டானா? இதில் நான் எம்மாத்திரம்?’ தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டான்.‘நீ உருப்படவேப் போறதில்லேடா!’ கோபமாய் கண்களை உருட்டினான் மோகன், மனதிற்குள் நுழைந்து
