போர்க்களப் பூக்கள்
தேவிபாலா
Casa editrice: Pocket Books
Sinossi
இரவு பத்து மணிக்குத்தான் வீடு திரும்பினாள் பிரியா.‘தாமதமாகும்’ என்று போன் மூலம் அம்மாவுக்கு தகவல் சொல்லி இருந்தாள்.ஆனாலும், அம்மாவிடம் கலக்கம் இருந்தது. வாசலைப் பார்த்தபடி உட்கார்ந்துவிட்டாள்.கம்பெனி கார் அவளைப் பத்திரமாகக் கொண்டுவந்து சேர்த்தது.முகம் கழுவி, சாப்பிட உட்கார இரவு பத்தே முக்கால் ஆகிவிட்டது.“ஏன்ம்மா இத்தனை தாமதம்?”“வேற ஒருத்தர் ஆபீசுக்கு வர முடியாத சூழ்நிலை... அந்த வேலையை எங்கிட்ட ஒப்படைச்சிட்டாங்க. நிறைய தேங்கி நிக்குது... முடிச்சாகணும்.”“தினமும் ‘லேட்டாகுமா பிரியா?”“கொஞ்ச நாளைக்கும்மா! சரி பண்ணிட்டா பிரச்சினை இல்லை. சனி, ஞாயிறுகூட ‘ஓவர்டைம்’ வேலை பார்க்க வேண்டியது வரலாம்.”“இந்த ஞாயிற்றுக்கிழமையா?”“ஏன்... ஏதாவது வேலை இருக்கா?”அக்கா வாணி வெளியே வந்தாள்.“தரகர் ஒரு ஜாதகம் குடுத்தார் பிரியா. அது பிரமாதமா பொருந்தி இருக்கு. ஞாயிறு காலையில் பெண் பார்க்க வராலாமானு கேட்டிருக்காங்க... அம்மா ‘சரி’ன்னு சொல்லிட்டாங்க.”பிரியா படக்கென திரும்பினாள்என்னைக் கேக்காம எதுக்கு நீயே ஒத்துக்கற?”“என்னடி... ஞாயிற்றுக்கிழமை உனக்கு ‘லீவு’தானே? அதான் வரச் சொன்னேன்.”“ஞாயிறு ஒரு பக்கம் இருக்கட்டும். இப்ப எனக்குக் கல்யாண முயற்சி எதுக்கு?”“என்னடீ இப்படி கேக்கற? உனக்கு வயசு இருபத்தி ஆறும்மா! இனி தாமதிக்கக்கூடாது.”“நம்ம குடும்பப் பிரச்சினைகளை வச்சுகிட்டு, கல்யாணத்தைப் பத்திப் பேசலாமா?”வாணி முன்னால் வந்தாள்.“பிரியா! நீ என்னைத்தானே சொல்றே?”“அக்கா...”“எனக்கே அந்தக் கலக்கம் இருக்கு. ஒரு வாழாவெட்டி அக்கா- வீட்ல வந்து இருக்கும்போது, தங்கச்சியோட கல்யாணம் கேள்விக்குறிதான்.”“அய்யோ... அக்கா! நான் அந்த அர்த்தத்துல சொல்லலை...”“நீ சொல்லாம இருக்கலாம் பிரியா! ஆனா, நிஜம் அதுதானே? நமக்கு அப்பா உயிரோட இல்லை. அம்மா விதவை. நான் வாழாவெட்டி. இந்தக் குடும்பமே ஒரு கேள்விக்குறி. உன் கழுத்துல நல்லபடியா தாலி ஏறணுமேன்னு எனக்கே பயமா இருக்கு.”“நிறுத்துடி! நாம ஒழுக்கமா வாழறோம். உங்க அப்பா மாரடைப்புல இறந்து நாலு வருஷங்களாச்சு... அவர் தாராளமா சேர்த்து வச்சிட்டுத்தான் போயிருக்கார். பிரியா படிச்சு முடிச்சு வேலைக்கும் வந்தாச்சு. நீயும் ஒரு ‘ஸ்கூல்’ல டீச்சரா வேலை பார்க்கறே! நாம யாரையும் சார்ந்து, யார்கிட்டேயும் யாசகம் கேட்டு நிக்கலையே? ஆண்கள் இல்லாத குடும்பம். அது ஒரு தப்பா?”அம்மா லட்சுமி பொங்கி வெடித்துவிட்டாள்.மூத்தவள் வாணி வந்து அம்மாவின் தோளை அழுத்திப் பிடித்தாள்.“எதுக்காக நீ இப்படி பதற்றப்படுறே?”பதற்றம் இல்லைம்மா! உங்க அப்பாவுக்கு ஒரு கெட்ட பழக்கமும் இல்ல. நல்லா உழைச்சார். பணம் சேர்த்து வச்சார். வாணியை கல்யாணமும் செஞ்சு கொடுத்தார்.”“சரிம்மா. என் வாழ்க்கை சரியா அமையாத அதிர்ச்சிதானே அப்பாவோட மாரடைப்புக்குக் காரணம்?”“அது விதிடி!”“இல்லைம்மா... ‘ஒரு குடிகாரனுக்கு என் மகளை கட்டி வச்சிட்டேனே’ன்னு அப்பா புலம்பாத நாள் ஏது? அவர்கூட நாலஞ்சு வருஷங்கள் நான் போராடி, அவரைத் திருத்தப்பட்ட பாடு கொஞ்சமா? அந்த முயற்சியில தோத்துட்டேன். அங்கே என்னை விட்டுவைக்க மனமில்லாம, அப்பா கூட்டிட்டு வந்துட்டார். விவாகரத்தும் வாங்கியாச்சு! நல்ல காலம்... ஒரு குழந்தை பிறக்கலை. நான் பொழச்சேன். பாவம் அப்பா... உருகி உருகித்தானே உயிரைவிட்டார்?”அம்மா அழுதாள்.கை கழுவிவிட்டு எழுந்து வந்தாள் பிரியா
