நதிமூலம்
தேவிபாலா
Publisher: Pocket Books
Summary
அவர்கள் வாழ்வது ஒரு சிற்றூர்தான். கிராமத்துக்கும் கொஞ்சம் மேலே சின்ன ஓடை என்ற அந்த ஊரில் சொல்லும்படியாக செழிப்பு இல்லை! ஒரு ரயில் நிலையம் உண்டு. நூறு கிலோமீட்டர் பயணம் செய்தால், சேலத்துக்கு வந்து விடலாம். சின்ன ஓடை ரயில் நிலையத்துக்குள் நுழைந்தான் கண்ணாயிரம். காலை ஏழு மணி அப்போது. ரயில் நிலையம் வெறிச்சோடிக் கிடந்தது. அங்கே விரைவு வண்டிகள் எதுவும் நிற்காது. காலை முதல் மாலை வரை உள்ளூர் பாசஞ்சர்கள் ஆறு வண்டியோ என்னமோ போகும்! ஸ்டேஷன் மாஸ்டர் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தார். ரவிக்கையில்லாத தயிர்க்காரியின் கறுத்த மேனியை காமத்துடன் மேய்ந்து கொண்டிருந்தன அவரது கண்கள். பெயர்ப் பலகை அருகில் ரெண்டு பேர், மூணு சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். உள்ளே நுழைந்தான் கண்ணாயிரம். “வா கண்ணாயிரம்!” “முதல்ல தயிர்க்காரியை ஜாக்கெட் போட்டுக்கச் சொல்லணும்!” “கஷ்டமா இருக்கா?” “எனக்கில்லை! வீட்ல அக்காவை பிரசவத்துக்கு அனுப்பியாச்சா?” “போன வாரமே!” “என்ன வயசு உங்களுக்கு?” “நாப்பத்தி அஞ்சு!” “இப்பத் தேவையா? நாலாவது குழந்தை இது!” “சின்ன ஓடைல என்ன பொழுதுபோக்கு இருக்கு? சொல்லு!” “நீங்க இதே வேகத்துல போனா, சின்ன ஓடை, பெரிய ஓடை ஆயிடும்! சரி! ரயில் வருமா?” “வருமே! டிக்கெட் வேணுமா?” “வேண்டாம். நம்மூர்ல யாரு டிக்கெட் வாங்கறாங்க? நான் சேலத்துக்கு லோக்கல் வண்டில போயிர்றன்!” “சாயங்காலம் வந்துருவியா?” “இல்லை! இனிமே வர மாட்டேன்!” “என்னப்பா சொல்ற?” “நான் தண்டச்சோறுனு எங்கண்ணன் வீட்டை விட்டு விரட்டிட்டார். அதான் புறப்பட்டுட்டேன்!” “எந்த ஊருக்குப் போற?” “தெரியலை! படைச்சவன் செலுத்தறான். தற்சமயம் நூல் அறுந்த பட்டம் எங்கேயெல்லாம் பறக்குதுன்னு பாக்கலாமே!” “கடவுளே! மாசக் கடைசி! எங்கிட்ட இருபது ரூபா இருக்கு. நீ வச்சுக்கறியா?” “வேண்டாம் சார்! உங்களை நான் மறக்க மாட்டேன்!” அவர் உள்ளே போனார். திரும்பி வந்தார். “மெட்ராஸ் போற ஏற்காடு எக்ஸ்பிரஸ் வருது!” “இந்த நேரத்துல ஏற்காடு எக்ஸ்பிரஸா? எப்படி?” “இது ஸ்பெஷல் ரயில்டா! மாநாட்டுக்காக விட்டிருக்காங்க! நம்ம அவுட்டர்ல வாங்கணும்!” “ஏன்?” “ஒரு கூட்ஸ் க்ராஸிங் இருக்கு!” “அப்படீன்னா, நம்மூர்ல எக்ஸ்பிரஸ் நிக்குமா?” “எப்பவும் இல்லை! இது மாதிரி சில சூழ்நிலைகள்ல!” பத்தாவது நிமிடம் ஏற்காடு ஸ்பெஷல் வந்து விட்டது. அவுட்டரில் தள்ளி நின்றது.
