உலராத ரத்தம்
ரமணிசந்திரன்
Editorial: Pocket Books
Sinopsis
கங்கப்பா வாழைக் கன்றை அதிர்ந்துபோய் நின்றிருந்த ருத்ரமூர்த்தியின் கையில் திணித்துவிட்டு பதட்டத்தோடு குழியருகே வந்தார். மண்டியிட்டு உட்கார்ந்து குழிக்குள் எட்டிப் பார்த்தார்.வெகுவாய் அழுகிப்போன அந்த விரல்களில் சதை பாகங்கள் உரித்து எலும்புகள் துருத்திக்கொண்டு தெரிந்தன. குப்பென்று ஒரு கவுச்சு நாற்றம் அடித்தது.கையில் கடப்பாரையோடு ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்த பட்ராச்சாரியாரின் குரல் வெடவெடத்தது... “ஐ.ஜி. ஸார்... பொ... பொணத்தை யாரோ... இ... இ... இங்கே கொண்டாந்து புதைச்சிட்டு போயிருக்காங்க. நல்ல நாளும் அதுவுமா கிரஹப் பிரவேசம் செய்யப்போற இந்த சமயத்திலா இது வெளியே வரணும்... கர்மம்... கர்மம்...”“பட்ராச்சாரியார்? மொதல்ல மண்ணைத் தள்ளி அந்தக் குழியை மூடுங்க. சுடுகாடா இருக்கிற இந்தப் பங்களாவை வாங்காதீங்கன்னு நான் தலை தலையா அடிச்சுகிட்டேன். ஆனா எங்கப்பா கேட்கலை. இப்ப பார்த்திங்களா வாழைக் கன்றை நடறதுக்கு குழியைத் தோண்டினா பொணம் கைளை நீட்டுது... ம்... மண்ணை போட்டு வேற பக்கமா ஒரு குழியைத் தோண்டுங்க.”“அதுவும் சரிதான்” நகர முயன்ற பட்ராச்சாரியாரை கங்கப்பாவின் குரல் தடுத்து நிறுத்தியது “கொஞ்சம் நில்லுங்க.”பட்ராச்சாரியார் நிற்கிறார்.“குழியை மூடாதிங்க... அந்தப் பிணத்தை முழுசுமா தோண்டி வெளியில எடுத்து போடணும். அந்த பிணம் ஆணா பெண்ணா... இந்த இடத்துக்கு யார் கொண்டு வந்து எப்படிப் புதைச்சாங்கன்னு போலீசைவிட்டு கண்டுபிடிக்கச் சொல்லணும்.போலீசா?” முகம் மாறினார் ருத்ரமூர்த்தி. “கங்கப்பா! இந்த விஷயத்தை பெரிசு பண்ணிடாதே! கிரஹப்பிரவேசத்தை நடத்தப்போற இந்த நல்ல நாள்லே போலீசைக் கூப்பிட்டு அசிங்கம் பண்ணிடாதே.”கங்கப்பா முகம் இறுகிப் போய் இருந்தார் “ருத்ரமூர்த்தி! நான் ஒரு எக்ஸ் போலீஸ்மேன். இதையெல்லாம் பார்த்துட்டும் பார்க்காத மாதிரி போக என்னால முடியாது. பாடியோட ஃபிங்கர்ஸைப் பார்த்தா சமீபத்தில் புதைச்ச பொணமாத்தான் தெரியுது. உன்னோட பங்களாவில் இருக்கிற யாரையாச்சும் ஒருத்தரைக் கூப்பிட்டு குழியைத் தோண்டி பொணத்தை வெளியே எடுக்கச் சொல்லு.”“கங்கப்பா.”“நான் சொன்னதை செய் ருத்ரமூர்த்தி போலீஸ் வந்து பாடியை பாத்து போஸ்ட் மார்ட்டத்துக்கு எடுத்துப் போனப்பறம்... உன்னோட கிரஹப்பிரவேச பங்ஷனை வெச்சுக்கோ.”ருத்ரமூர்த்தி இருண்டுபோன முகத்தோடு - போர்டிகோ தூணோரமாய் நின்றிருந்த - எடுபிடி வேலைகளுக்காக அமர்த்தப்பட்டிருந்த கந்தப்பனைப் பார்த்தார். எரிச்சலான குரலில் சொன்னார்.“அந்தக் கடப்பாறையை வாங்கித் தோண்டுடா.”“சரிங்கய்யா.” ஓடி வந்து பட்ராச்சாரியார் கையில் இருந்த கடப்பாறையை வாங்கிக்கொண்ட கந்தப்பன், குழியை நெருங்கி அகலமாய் கொத்த ஆரம்பித்தான். கங்கப்பாவைத் தவிர எல்லோரும் எட்டடி பின்வாங்கி தூரப் போய் நின்று கொண்டார்கள்.“பாடி மேல கடப்பாரை குத்து படாமே ஜாக்ரதையா...” கங்கப்பா கர்சீப்பால் முகத்தைப் பொத்திக்கொண்டே சொல்ல, கந்தப்பன் தலையை ஆட்டியபடி தோண்ட ஆரம்பித்தான்
