கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு…
ரமணிசந்திரன்
Casa editrice: Publishdrive
Sinossi
“நீங்கள் என்னதான் சொல்லுங்கள் அப்பா. சீதையை ராமர் தீக்குளிக்கச் செய்தது நிச்சயமாய் ரொம்பவும் அநியாயம்தான். பிரிந்திருந்தால் பெண் கெட்டுப் போய் விடுவாளா? அப்படிப் பார்த்தால் ஆண்கள்தான் அந்த விஷயத்தில் ரொம்பவும் மோசம். ஆனா நரைமீசைக்காரன் கூடப் பஸ்ஸில் பெண்ணைக் கண்டால் உரசத்தான் வருகிறான். நியாயமாக என்றால் சீதைதான் ராமரைத் தீக்குளிக்கச் செய்திருக்க வேண்டும். அங்குமிங்கும் அலைந்து திரிந்து வந்தவர் அவர்தானே? அவரை விட்டுவிட்டு அத்தனை ராட்சதர்கள் மத்தியில் சிறையிருந்த அப்பாவி சீதைக்குப் போய் அக்னிப் பரீட்சை வைத்தது எப்படி நியாயமாகும்?நான் மட்டும் சீதையாக இருந்திருந்தால் குறைந்தபட்சம் என்னோடு நீயும் தீக்குளித்து உன் ஏக பத்தினித்தனத்தை நிரூபித்துக் காட்டு என்றிருப்பேன். அது தானேப்பா சரி?”ஏதோ பேச முயன்ற மனைவியைப் பார்வையால் தடுத்து, “நீ என்ன சொன்னாலும் நூறு சதவீதமாய் அதை நான் அப்படியே ஒத்துக் கொள்கிறேன்” என்றார் சிவகுரு.“போங்கள் அப்பா. எனக்காக ஒன்றும் சொல்ல வேண்டாம். நீங்கள் நன்றாக யோசித்து நான் சொல்வது சரியா தப்பா என்று அபிப்ராயம் சொல்லுங்கள். அம்மாவானால், ஓர் அவதாரத்தின் கதையை நான் பார்க்கிற விதமே தப்பு என்கிறார்கள். அவதாரம் என்றால் அதைப் பார்த்து மற்றவர்கள் பின்பற்றும் விதமாக இருக்க வேண்டாமா? இப்படி மனைவியின் மேல் சந்தேகப்பட்டுக் கொடுமை செய்யவா பயில்வது...? என்னப்பா, நான் பேசிக் கொண்டே இருக்கிறேன். நீங்கள் சும்மா உட்கார்ந்திருந்தால் எப்படி?”“என்னடாம்மா. உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டாமே! ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமாக நன்றாகச் சாப்பிட்டுவிட்டுச் சும்மா உட்காராமல் வேறே என்னதான் செய்வதாம்?”“வேறே ஒன்றும் செய்ய வேண்டாம். சும்...ம்மா அப்படி உட்கார்ந்தபடியே எனக்கு ஒரு பதிலைச் சொல்லுங்கள் போதும்.” மகள் விடப் போவதில்லை என்று கண்டதும், சற்றே யோசித்துவிட்டு, சிவகுரு தொண்டையைக் கனைத்துக் கொண்டார்.“பாப்பா, என் அபிப்ராயம் என்னவென்றால்... அதாவது...”தந்தை முடிக்கும் முன் குரலே உணர்த்திவிட்டாற் போல் சௌதாமினி பாய்ந்தாள்.“என்னப்பா நீங்கள்? ராமர் செய்தது சரி என்றா சொல்லப் போகிறீர்கள்?காலம் காலமாய் வருகிற ஆண்புத்தியை நீங்களும் காட்டிவிடாதீர்கள்...”“அட அப்பா பேசி முடிக்கத்தான் கொஞ்சம் இடம் கொடேன். இப்படி என்ன பொறுமை இன்மை, ஒரு பொண்ணுக்கு?” சாரதா அதட்டவும் அதற்குப் பணிந்தவள் போலக் கையால் வாயை மூடிக்கொண்டாள் சௌதாமினி.மகளின் பாவனையில் முறுவலித்துவிட்டு, சிவகுரு சொன்னார்.“ஒரு கணவனாக இருந்து சீதையைத் தீக்குளித்துத் தூய்மை நிலைகாட்டச் சொன்னார் என்றால் ராமர் செய்தது தப்புதான். ஆனால் அவர் ராஜா ராமனாக அல்லவா சொன்னார்! அந்த வகையில்...”“ராஜா ராமன் என்றால் மட்டும் உற்றார் உறவினரைப் பிரிந்து, உற்ற கணவனைப் பிரிந்து, முழுக்க முழுக்க அன்னியர்கள் அதிலும் அரக்கர்கள் மத்தியில் சிறைப்பட்டுக் கிடந்த ஒரு பெண்ணைத் தீக்குளித்து உன் தூய்மையை நிரூபி என்பது எந்த வகையில் நியாயமாகுமாம்? எப்படியும் ராமகதையில் அந்த இடம் மகா மோசமான தப்பு அப்பா. மறைந்திருந்து வாலியைக் கொன்றதை விட மிகமிகப் பெரிய அநியாயம்!”“ஊகூம். இப்போதும் நீ நோக்குகிற விதம் சரியில்லை. சீதை யாரோ ஒரு சாதாரணப் பெண்ணாக இருந்திருந்தால் ராமர் இந்த அக்கினிப் பரீட்சை வைத்திருக்க மாட்டார். சீதை அவருடைய மனைவியாக - அயோத்தியின் வருங்கால அரசியாக இருந்ததால்தான் அவளுக்கு அந்த மாதிரி ஒரு கொடுமையான ப்ரீட்சையை அவர் வைக்கும்படி ஆயிற்று
