பனி வடியும் பூக்கள்
ஆர்.மகேஸ்வரி
Publisher: Pocket Books
Summary
இதோபாரு... பூங்கோதை... இப்ப காயத்திரி இருக்கிற நிலமையில அவ மனசை புண்படுத்தாம நடந்துக்கிறதுதான் நியாயம். மனிதாபிமானம். அவ அம்மா வீட்ல கொண்டுபோய் விட்டோம்னா என்ன நினைப்பா. காயத்திரி படிச்சப்பொண்ணு. டாக்டரும்கூட. ஏன் எதுக்குன்னு புரிஞ்சுக்கமாட்டாளா?”“என் மனசை யாரும் புரிஞ்சுக்கமாட்டீங்களா?”“இப்ப உன்னைவிட நோயாளியோட மனசும், உடம்பும்தான் முக்கியம். நீ வேணுமின்னா ஒரு சுற்றுலா போய் வாயேன். ரொம்ப நாளா ஆசைப்பட்டுக்கிட்டு இருந்தியே.”பூங்கோதை பதில் பேசாமல் அங்கிருந்து எழுந்துச் சென்றாள். கோபமாய் இருக்கிறாள் என்று புரிந்தது.“அம்மா...”“விடு முகுந்தா! நியாயமான கோபம்னா சமாதானப்படுத்தலாம். அவளை நான் பார்த்துக்கிறேன். நீ போய் காயத்திரியைப் பாரு. அ... ஒரு நிமிடம்...”“என்னப்பா?”“சாப்பிட்டியா?”“பசிக்கலேப்பா...”“நீயும், ரெண்டு நாளா எதுவும் சாப்பிடலையே முகுந்தா? உனக்கும் உடம்பெங்கும் அடிபட்டிருக்கு. சாப்பிடுப்பா... நான் போய் கேன்டீன்ல ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா?”“வேணாம்ப்பா... நானே சாப்பிட்டுக்கிறேன்.”“சரி... நீ போ... நான் அந்த பைத்தியக்காரியை சமாதானப்படுத்திட்டு வர்றேன்” என்றவர், மனைவி பூங்கோதையை நோக்கி நடந்தார்.முகுந்தன் மெல்ல கதவை திறந்துப் பார்த்தான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் காயத்திரி.அவளைத் தொந்தரவு செய்ய மனமின்றி டாக்டரின் அறையை நோக்கி நடந்தான்.கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்றான்.“வா... முகுந்த்!”“பிசியா இருக்கியா, தொந்திரவுப் பண்ணிட்டேனா?”“ஊகூம்... இது எனக்கு ஓய்வெடுக்கிற நேரம்தான். உட்காரு...!” என்ற டாக்டர் விக்ரம், முகுந்தனின் நெருங்கிய நண்பன்தான்.“மறுபடி சொல்றேனேன்னு தப்பா நினைக்காதே விக்ரம். இந்த விபத்து போலீஸ் வழக்கு ஆகாம பார்த்துக்கறது உன்னோட பொறுப்பு!”“புரியுதுடா! நியாயப்படி... போலீசாருக்கு தகவல் இல்லாம நான் சிகிச்சை தந்திருக்கக்கூடாது. ஆனா, தந்தேன். யாருக்காக? உனக்காக... உன் நட்புக்காக. ஆனா, காயத்திரி கண் முழிச்சதும் கேட்ட முதல் கேள்வியே ‘போலீஸ் யாரும் வரலையா?’ன்னுதான். ‘இல்லே... தகவல் தெரிவிக்கலே’ன்னு சொன்னேன்!”“அவ ஏதோ பயத்துல கேட்டிருக்கா. அப்பாவை சமாளிக்கிறது தான் பெரும்பாடா போச்சு.”“நீதிபதியா இருந்தவராச்சே...”“சரி... நான் அப்புறமா வந்து பார்க்கிறேன். நீயும் ஓய்வு எடு!”மறுபடி காயத்திரியின் அறைக்குச் சென்றான். நர்ஸ் ஒருத்தி அவள் கையில் ஏறிக்கொண்டிருந்த ‘டிரிப்’ஸின் டியூபைத் திறந்து ஊசி- மருந்தை செலுத்தினாள்.நரம்பில் கடுகடுத்ததுப்போலும்... உறக்கத்திலேயே முகம் சுருக்கினாள், காயத்திரி.நர்ஸ் வெளியேறினாள்.சத்தம் போடாமல் நாற்காலியை கட்டிலுக்கு அருகில் இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தான்இதற்குமுன் அவள் முகத்தில் சின்ன வருத்தத்தைக்கூட பார்த்ததில்லை. ஆனால், எப்பேர்ப்பட்ட பேரிடி நேர்ந்து விட்டது?அவளின் உறக்கம் கலையாமல் மிக கவனமாக டிரிப்ஸ் ஏற்றப்படாத வலக்கரத்தின் மீது தன் கன்னத்தை வைத்து மென்மையாய் அழுத்தினான்.கண்கள் அவன் அனுமதியின்றி கரகரவென வழிந்தது
