என் உயிரின் உயிரே
ஆர்.மகேஸ்வரி
Casa editrice: Pocket Books
Sinossi
அப்போது திவ்யபிரியா, அவளது தாய் மரகதமும் ரொம்பவே கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்தனர்! அவளுடைய தந்தை இருந்த வரை ஓரளவு நடுத்தர வாழ்க்கை வாழ்ந்தனர்! தந்தைக்கு நுரையீரல் புற்றுநோய் வர... தலையில் தீ விழுந்த கணக்காய் கலங்கினாள், திவ்யபிரியாவின் தாய் மரகதம். மரகதம் மருத்துவ செலவிற்குப் பணமில்லாமல் கஷ்டப்பட்டாள். சொந்த பந்தங்களிடம் கடன் கேட்டு கையேந்தினாள். ஒருவரும் மனமிரங்கவில்லை! கடைசியாய் குடியிருக்கும் வீட்டை விற்க முடிவு செய்தாள். அவளின் நிலைமையை... சூழ்நிலையை உணர்ந்து அடிமாட்டு விலைக்கு கேட்டனர். வீட்டைவிட கணவனின் உயிர் அவளுக்கு முக்கியமாய்ப்பட... அநியாய விலைக்கு விற்றுவிட்டு... வைத்தியம் பார்த்தாள். கடைசியில் புற்று நோயின் தீவிரம் தாங்காமல் செத்தே விட்டார். மரகதமும், திவ்யபிரியாவும் கத்தினார்கள்! கதறினார்கள்! விழுந்து புரண்டார்கள்! துடிதுடித்தார்கள்! எத்தனை கதறினாலும்... துடித்தாலும்... விழுந்து புரண்டாலும் இறந்தவர் மீண்டும் உயிருடன் திரும்புவார்களா? அவரின் மருத்துவ செலவிற்கும், இறுதி சடங்கிற்கும் எல்லாப் பணத்தையும் செலவழித்து... உயிரோடு இருந்த இருவருக்கும் மிஞ்சியது ஐம்பதாயிரம் ரூபாய் மட்டுமே! மரகதம் அந்தத் தொகையை வங்கியில் போட்டாள். அந்தத் தொகைக்கு கிடைக்கும் வட்டியிலும்... வீட்டிலேயே ஊறுகாய், வடகம், வற்றல் எனப்போட்டு வெயிலில் அலைந்து, திரிந்து விற்று கிடைக்கும் சொற்பத் தொகையிலும்... வாடகை வீட்டில் குடித்தனத்தைத் தொடங்கி... கஷ்டப்பட்டு வாழ்கின்றனர். தந்தை இறந்த சமயம் திவ்யபிரியா பனிரெண்டாம் வகுப்பில் அடியெடுத்து வைத்தாள்! தந்தையின் மரணம் தந்த சோகத்திலும்... தன்னைத்தேற்றிக் கொண்டு... முழு மூச்சாய் கல்வியில் சிந்தையைச் செலுத்த... திவ்யபிரியா அந்த பள்ளிக்கே முதல் மதிப்பெண் பெற்று தேறினாள். மாவட்டத்திலும் முதலாவதாய் வந்தாள்! பள்ளியில் பாராட்டினார்கள்! பத்தாயிரம் ரூபாய் பரிசளித்தார்கள்! இவ்வளவு புகழ்ச்சிகளுக்கும், மரியாதைகளுக்கும், மதிப்புகளுக்கும்... கொஞ்சம் கூட தலைக்கணமே இல்லாமல் இருந்தாள், திவ்யபிரியா! அன்று அம்மாவிடம் தயங்கித் தயங்கி போய் நின்றாள். “என்ன, திவ்யா?” “கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கணும்மா!” பயந்தபடி கேட்க... “எதுக்கு?” மரகதம் கோபமாய் கேட்டாள். “மேலே படிக்கணுமில்லையா?” “படிச்சது போதும், திவ்யா!” பட்டென்று பதில் அம்மாவிடமிருந்து வர... திவ்யா ஆடிப்போனாள். “அம்மா நான் மேலே படிக்கணும்!” “உன்னை காலேஜிக்கெல்லாம் அனுப்பிப் படிக்க வைக்க நம்மகிட்ட நிறைய காசா இருக்கு?” “அம்மா...” “இருக்கற தொகையும் செலவழிச்சிட்டா... உன் எதிர்காலத்துக்கு என்ன செய்ய?” “அம்மா...” “நாளைக்கு ஒரு கல்யாணம் காட்சின்னா உனக்கு நான் என்ன செய்வேன்? சொல்லு? எப்படி ஒருத்தன்கிட்ட உன்னை ஒப்படைப்பேன்! அதுக்குப் பணம் வேணுமில்லையா? அந்தக் கொஞ்ச காசையும் கரைச்சிட்டா நல்லாயிருக்குமா?” மரகதம் வேகமாய் படபடக்க... “அம்மா... என்னை டாக்டருக்கோ... இஞ்சினியருக்கோ படிக்க வையுன்னு கேட்கலே! எனக்கும் அந்த அளவு ஆசையில்லே!... ஒரு சாதாரண டிகிரி மட்டும் படிக்க வையும்மா! அந்த ஐம்பதாயிரத்தில் நீ கையே வைக்க வேண்டாம்!” “பணத்துக்கு என்ன செய்வது?” மரகதம் புருவம் உயர்த்தி கேட்க... “ஸ்காலர்ஷிப்ல படிச்சுடுவேன்!” “அப்படின்னா...?” “அரசாங்கம் உதவிப் பணம் தரும்! அடுத்ததா ஏதாவது தொண்டு நிறுவனங்க கிட்ட உதவி கேட்டால் என்னைப் படிக்க வைப்பாங்க! உன்னோட செலவு வெறும் புத்தகம்... நோட்... பேனா தாம்மா! மற்ற பொண்ணுங்க மாதிரி ஆடம்பரமா ட்ரஸ் பண்ணிக்கணும்... நகை போட்டுக்கணும்... மேக்கப் பண்ணிக்கணும்... ஸ்கூட்டியில ஜம்முன்னு போகணும்னு எல்லாம் எனக்கு ஆசையில்லேம்மா! பக்கத்துல இருக்க காலேஜ்னா ஒரு சைக்கிள் போதும்! அதுகூட வேணாம்மா நான் நடந்தே போயிடறேன்!”
