கண் வரைந்த ஓவியமே!
ஆர்.சுமதி
Casa editrice: Pocket Books
Sinossi
எமகாதகனாக இருப்பான் போலிருக்கிறது. எதுவும் தெரியக்கூடாது என்று தானே அப்படிப் பொய் சொன்னேன். ஆனாலும் எப்படியோ கண்டு பிடித்து விட்டானே?’வீட்டிற்குத் திரும்பும் போது இதையே யோசித்துக் கொண்டிருந்தாள் மங்களா.“ச்சே... எங்கெங்கெல்லாம் வேலைக்கு முயன்றேன். எதுவும் கிடைக்கவில்லை. கடைசியில் இந்தக் கம்பெனிக்கு வரவேண்டியதாகிப் போனதே! உண்மையை மறைத்தும் எல்லாம் தெரிந்து விட்டது. இவனுடையபேச்சில் நாகரீகம் தெரிகிறது. கடைசி வரை இதை கடைப்பிடிப்பானா? இல்லை மெல்ல மெல்ல ராஜி கம்பெனி பற்றிய விவரங்களைக் கிளறத் தொடங்குவானா? இவன் எப்படிப் பட்டவன்? அடுத்தவனைக் குப்புறத் தள்ளி விட்டு தான் முன்னேற வேண்டும் என நினைப்பது தானே உலகம்? அப்படி ஏதாவது கிளற நினைத்தால் வேலையை விட்டுவிட வேண்டியதுதான்.’இப்படி நினைத்தபோது உள்ளுக்குள் மனதின் மூலை யின் ஒரு குரல் சிரித்தது.‘பைத்தியம்! பழைய கம்பெனியிலிருந்து விலகிய பின் வேலை தேடி எவ்வளவு சிரமப்பட்டாய்! ஒரு வருடம் சரியாக ஒரு வருடம் வேலை இல்லாமல் அலைந்ததை மறந்து விட்டாயா? ஒவ்வொரு மாதத்தையும் ஓட்ட எவ்வளவு சிரமப்பட்டாய்? புதிதாக ஒரு வேலை கிடைத்ததும் பழைய அலைச்சலும், கஷ்டங்களும் மறந்து விட்டதா? வெகு எளிதாக வேலையைத் தூக்கி எறிவேன் என நினைக்கிறாயே? பைத்தியம். பணம்! பணம்தான் வாழ்க்கை. பணம் இல்லாவிட்டால் எதுவும் செய்ய முடியாது.அந்தப் பணத்திற்காகத்தானே அக்கா அருந்ததி அடிக்கடி வந்து நிற்கிறாள். அந்தப் பணத்திற்காகத் தானே நான் அந்தக் கோசலை மைந்தனிடம் போய் நிற்க வேண்டியிருந்தது.’‘பணம். பணம் என்னடா பணம் பணம்? குணம் தானடா நிரந்தரம்?‘கவிஞர் எப்படி இந்த வரிகளை எழுதியிருப்பார்? அவரே எவ்வளவோ தடவை பணத்திற்காக பரிதவித்த பின்னும் இப்படி எழுத எப்படி மனம் வந்தது?’குணம் நிரந்தரமென்றால் அக்கா அருந்ததியை அத்தான் கொண்டாடியிருக்க மாட்டாரா? கொண்டு வாடி என ஏன் அடிக்கடி துரத்தியடிக்கிறார்?வியாபாரத்திற்கு ஐம்பதாயிரம் பணம் வேண்டும் வாங்கி வா என புருஷன் அனுப்பியதாக வந்து நின்ற அருந்ததி திரும்பிப் போக வேண்டுமென்றால் கண்டிப்பாக ஐம்பதாயிரம் கொடுத்தே ஆக வேண்டும்.இல்லாவிட்டால் அவளை வீட்டோடு வைத்துக் கொள்ள வேண்டியதுதான். எல்லாப் பொறுப்புகளையும் உதறிவிட்டு இறைவனைத் தேடி இமயமலைக்குச் செல்லும் துறவிகளைப் போல் அப்பா காவி கட்டாமலேயே கைலாசத்திற்குப் போய் விட்டார். இருப்பதைப் போட்டு அக்காவை கட்டிக் கொடுத்துவிட்டு அவர் போய்விட்டாலும், இன்னும் என்ன இருக்கு எடுத்து வா என அக்கா புருஷன் அனுப்பிக் கொண்டேயிருக்க அவளுடைய தேவைகளைத் தீர்க்கும் தேவதையானாள் மங்களா.அந்தத் தேவையைத் தீர்க்க இந்தத் தேவதை போய் நின்றது கோசலை மைந்தனிடம்!அவர் தன் தேவையைத் தீர்த்துக் கொள்ள நினைத்தார்.‘இந்தப் பணம் தானே கோசலை மைந்தனை என்னைத் தவறாக எடை போட வைத்தது!’நெஞ்சு கொதித்தது நிமிடத்தில்! மறக்க முடியுமா அந்த மனவேதனையை?மோதி மிதித்து விட்டாள். முகத்தில் உமிழ்ந்து விட்டாள். விலகி வந்து விட்டாள். விவேகத்துடன் மன்னித்து விட்டாள்.ஆனால்? ஆனால்..?உள்ளுக்குள் கூனி குறுகிப் போய் விட்டாளே!கடனாகப் பணம் கேட்டதற்கு அவன் சம்பளத்தில் கழித்துக் கொள்ளாமல் சல்லாபத்தில் கழித்துக் கொள்ள நினைத்தது எதனால்?பெண்! பெண் என்ற ஒரே காரணத்தில் தானே?பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்கிறார்கள். அது முற்றிலும் சரியான வார்த்தையே!அந்தக் கோசலை மைந்தனிடம் வலியச் சென்று விழும் பெண்களால் தானே அவன் என்னையும் அதே கோணத்தில் பார்த்தான். ஆபாசம் கூடாது என மேடை போட்டு பெண்கள் பேசுகிறார்கள். போஸ்டரைக் கிழிக்கிறார்கள். சினிமா எடுத்த இயக்குனர்களை சாடுகிறார்கள். ஆண்கள் காமப்பேய்கள் என்கிறார்கள். அரைகுறை ஆடையில் பெண்கள் ஆடமுடியாது. நடக்க முடியாது என்று சொன்னால் அவரைகளைக் கட்டி வைத்து அடித்தா நடிக்க வைக்கிறார்கள்? அரைகுறை ஆடையில் நடிக்க நாங்கள் தயார் எனச் சொல்லும் நடிகைகள் பெண்கள் தானே? அவர்கள் தானே முதல் எதிரிகள்?பெண் கொடுமைகள் மட்டுமல்ல சமுதாயத்தில் பெண்களின் கேவலமான நிலைக்கும் பெண்களே காரணம்.
